காலங்களில் பல விதங்கள் உள்ளன. அதே போலவே, மனிதர்களில் பல விதமான, அதாவது வெவ்வேறு மாதிரியான குணங்கள்  உள்ளவர்களும், நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள். பலர், அவரவர் நலத்தையே பற்றி, யோசித்தும், தனக்கு எது சாதகமாக இருக்கும் என்பதையும் நினைத்தே வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு வேலை முடியும் வரை, மற்றவர்களின் கால்களை பூனைக்குட்டி மாதிரியே சுற்றி, சுற்றி வருவார்கள். தங்கள் வேலை முடிந்த பின் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூட தயங்குவார்கள். ஆனால் பேச்சு என்னவோ நமக்காகவும், மற்றவர்களுக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யகாத்திருப்பது போல் பேசுவார்கள். ஆனால் அவர்களுக்கு எதையுமே செய்துமுடிக்க கூடிய சமர்த்தமோ, சாமர்த்தியமோ இருக்காது. முகத்திற்கு நேரில் ஒருவிதமான பேச்சு, கண்மறைவில் வேறு விதபேச்சு, எல்லாவிதமான பூச்சுக்களையும் தடவி, தடவி  பிறர் மண்டைகளை மழுக்கியே விடுவார்கள். பேச்சு சாதுர்யத்தினாலேயே அவர்கள் காலங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன . ஆனால் எதுவரை என்பதுதான் கேள்விக்குறி??????

மனிதர்களுக்கு எல்லாவித  துர் பழக்கங்களும் எப்படியோ பழக்கத்தில் வந்துவிடுகின்றன, இல்லை, அவசியமான காரணத்தினால் கற்றுக்கொள்கிறார்கள்.  இம்மாதிரியான ஆட்கள் எதற்கும் துணிந்தவர்கள். சங்கோஜம் என்னும் குணம் மனிதனுக்கு ஒரு ஆபரண, அணிகலன் மாதிரி.  ஆனால் ஆபரண அணிகலன்களை வைத்துக்கொண்டு இம்மாதிரியான மேல்பூச்சு மனிதர்களுக்கு, வாயில் வார்த்தைகள் தயாராக இருக்கும்.  முகத்தில் ஒருவித தந்திரங்கள் கலந்த புன்முறுவல் தவழ்ந்து கொண்டே இருக்கும். அவர்களை சந்தித்த மனிதர்கள் நினைப்பார்கள், இத்தனை பெரிய சத்தியவாதியை நம் காலத்தில்  எங்குமே காண முடியாதென நம்புவார்கள். அப்படி ஒரு சாதுர்யமான நடத்தையுடன் கூடிய பேச்சும் இருக்கும். நம் காலத்தில்கூறுவோம், ராஜா அசடாகவோ , பித்துக்குளியாகவோ இருந்தாலும் நாட்டிற்கு தேவை, புத்தி கூர்மையுடன் கூடிய மந்திரிதான் என்று. புத்தி கூர்மையில்லாதவர்கள், மனபலமில்லாதவர்கள், சுயநலவாதிகள் இவர்கள் பூமிக்கு பாரமேதான். நாட்டை விட்டுத்தள்ளுவோம். வீட்டிற்குமே, இந்த மாதிரி மனிதர்கள் தேவைப்படமாட்டார்கள். மனிதர்களுக்கு  புத்தியில் நல்ல சிந்தனை ஓட்டமில்லாத காரணத்தினால், தான் வாழ்ந்துவரும் இருக்குமிடங்களையும் கூட உருப்படியாக வளர விடாமல்,  நேரத்தையும், காலத்தையும், நாசம் செய்தும் விடுவார்கள், என்பது நிச்சயமே.