பதினெட்டு பொருத்தம் என்பது , வேறு எதற்குமே இந்த பெயர் கிடையாது, கணவன், மனைவி இருவருக்குள் ஙஅடிக்கடி தகராறுகள் செய்து கொண்டு ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்ற ஒரு பொருள்தான் உண்டு, என பெரியவர்கள் கூறிக்கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே சிலருடைய வாழ்க்கையில்  நடந்திருக்கலாம்  என தோன்றுகிறது. சில கதைகளை கேட்கும்போது, உண்மையாகவும் இருக்கலாமோ என நினைக்க வைக்கிறது.   நம் ஜாதகத்தில், சில தோஷங்கள் இருக்கின்றன என்பதை நம்பியே ஆகவேண்டிருக்கிறது, நம்  வாழ்வில்  நடந்து முடிந்த கதைகளை யோசித்துப்பார்க்கும் போது, உண்மையாகவும் இருக்கலாமோ என நினைத்து, ஓரளவுக்கு நம்பிக்கையும்  வருகிறது.

சில ஜோதிட சாஸ்திரம் படித்தவர்கள் கூறியது நம்மில் பலருக்கு உண்மையாகவே நடந்திருந்தால், ஜோதிடத்தில் நம்பிக்கை ஏறிவிடுகிறது.  ஆனால் எதுவும் சரியாக நடக்காவிடில், ஜோதிட சாஸ்திரத்தில் இருந்த நம்பிக்கையே உடைந்தும் விடுகிறது. என்பையன் மேல்படிப்பிற்காக வெளிநாடு போவானா, மேலே படிப்பானா, பணம் சம்பாதிப்பானா என தாபத்துடன், பெற்றோர் கேட்கும்சமயத்தில் முகத்திலடித்தாற் போல் எதையும் கூறி நம்பிக்கையை உடைத்தெறிந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜோதிடர் சொல்லியிருக்கலாம்.  மற்றுமொறுவர் என் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்குமா என ஆதங்கத்துடன் கேட்கும் போது, அதெல்லாம் மிகவும் கடினமே என ஜோதிடர் சொல்லி விட்டாரென்றால் , அதை விட கடினமான சொற்கள் பெற்றோருக்கு கேட்க எது இருக்கமுடியும்? ஆகையால் ஜோதிட சாஸ்திரத்தின் குருமார்கள் கெட்டவைகளும் நடக்கப்போவதை கூட சூசகமாக கூறுவார்களே தவிர முகத்திலடித்தாற்போல உண்மையை பிட்டு, பிட்டு வைக்கமாட்டார்கள். ஜோதிடம் கேட்கப்போகிறவர்களும்  தொண, தொணவென்று மாற்றி, மாற்றி கேட்டுக்கொண்டேயிருக்க கூடாது என்பதை உணர வேண்டும்.

சில சமயங்களில் மனிதர்களின் சாமான்ய பேச்சிற்கு கூட ஆண்டவன், சக்தியை அளித்து, உயிரையும் கொடுத்தும் விடுகிறான், என்பதும் உண்மைதான். ஆகையால் சாதாரணமான வீடுகளில் கூட நல்ல சிந்தனைகளையும், மனதிற்கு சாந்தியளிக்ககூடிய உயர்வான பேச்சுக்களையும் பேசிவந்தால், வீட்டிலுள்ள நல்லநாடிகளை சுண்டிவிட்டு நல்லவைகளையே ஆண்டவன் நடத்தியும் வைக்கிறான். கொடுமையான நடத்தைகளையும், கடுமையான வார்த்தைகளையும், வீடுகளில் வீசி எறிந்து பேசாமல், அடக்கமாகவும் அன்பான வார்த்தைகளையும் பரிமாறிக்கொண்டிருந்தால், வீட்டின் நான்கு பக்கங்களிலும் இருக்கும் தேவதைகள் நம்மையும் , நம் குடும்பத்தையும்  நல்லபடியாக நடத்த  ஆசிகள் அளிக்கலாம்.

வேறு எவர் வீட்டு கடினமான அவசமயங்களைப்பற்றி , நம்வீட்டில் பேசி மகிழ்வதையும் தவிர்க்கவேண்டியதும், மிகவும் அவசியம். நம் கெட்ட காலத்தையே மாற்ற நமக்கு  சக்தி கிடையாது என்றாலும், எந்த கெட்ட காற்றுக்களையும் திசை மாற்றிவிட முடியும், நம் திட மனோசக்தியினால். பிறருடைய கதைகளை மாறி,மாறி பேசிக்கொண்டேயிருப்பதால் நம் பேச்சினால் எவருடைய கடினமான சமயத்தையும் மாற்ற முடியாது என்பது நிச்சயமே. ஆனால் நம் உளமார்ந்த  பிரார்த்தனைகள் எத்தனையோ மட்டமான நேரங்களையும் மாற்றி விடமுடியும். ஆகையால் கூடிய மட்டும் நல்வார்த்தைகளையே பேசிக்கொண்டு, நல்ல எண்ணங்களையே, நினைத்துக்கொண்டும் வாழ்ந்து நல்லவைகளை அடையலாம், மற்றவர்களுக்கும் கூறலாமே…