இரு சிநேகிதர்கள் 1941 லிருந்து 1950 வரை ஒரே பள்ளியில் படித்தார்களே தவிர வெவ்வேறு கிளாஸ் ஆனதால், ஒருவரையொருவர் அதிக பேசிப்பழக்கம் கிடையாது. சந்திக்கும்சமயம் பார்த்து பேசியதுதான். இருவரும் பிரிந்து, வெவ்வேறு ஊர்களுக்கு சென்று , படித்து தேர்ந்து அவரவர் குடும்பத்தை செட்டில் செய்துகொண்டு , தங்களுக்கு அமைந்தமாதிரி வாழ்க்கையில் முன்னேறி, வாழ்க்கையில் தோல்விகளையும் கண்டு கலங்காது இருந்த நண்பர்கள், சுமார் 20 வருடங்களின் பிரிவுக்கு பிறகு சந்தித்தார்கள். அதுவும் தன் மாமனாரின் சிநேகிதருடைய, சிநேகிதர் என நினைத்து வந்த இடத்தில் தன்னுடன் படித்த நண்பனை சந்தித்தால் எத்தனை பரமானந்தமாக இருந்திருக்கும், சிந்தித்துப்பார்த்து மகிழ வேண்டிய சமாசாரம். ஒரு நண்பர் பூரித்துப்போகிறார், இன்னொருவர் மகிழ்ச்சியை வெளியில் காட்டாது தனக்குள்ளேயே இருப்பார். இப்படி ஒரு பொருத்தம் இந்த நண்பர்களுக்குள் !!
பிள்ளை பிராயத்து நண்பருக்கு வேலை தேவை எனக்கேட்டதும் ஒரு வேலை ரெடியாக இருக்கிறதாக கூறி ஓரிரண்டு நாட்களுக்குள் தான் வேலைசெய்யும் தொழிற்சாலையிலேயே தன் சிநேகிதனையும் சேர்த்துவிட்டார். ஆனால் அந்த தொழிற்சாலை இவருடைய விரல்களை பலி வாங்கி விட்டது. ஆனாலும் அடாது மழை பெய்யினும் விடாது குடைபிடிப்பேன் , என்பதற்கு உதாரணமாக வேலை செய்துகொண்டேயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமே. இருவருமாக ஒரே பாக்டரியில் வெவ்வேறு டிபாரட்மெண்டில் சுமார் இருபத்தைந்து வருடங்கள் ஒன்றாக வேலை செய்தார்கள். அதுதான் அவருடைய பொற்காலமாக இருந்திருக்கும் . மேலும் எந்த கடினமான சமயங்களையும் எதிர்கொள்ள தன்னால் முடியுமென்று நினைத்திருந்த அவருக்கு ஆண்டவன் போக்கு காட்டி பிள்ளையை பறித்துக்கொண்டான், மனைவியை முழுங்கி, அவரை தனிமையில் துடிக்க வைத்தான். மனிதனுடைய வாழ்நாளில் வாழ்க்கையை திரும்பவும் நினைத்துப்பார்க்க முடியாதவராக இருக்கிறார்.
காலம் எப்படி மாறிவிடக்கூடும் என நினைக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டது. காலத்தின் கோளாற்றை கண்டவர்கள் மட்டுமே அதை நம்புவார்கள். யாருடைய மூலமாகவோ வெளிநாட்டில் வேலைக்கு ஆள்தேவை எனகூறக்கேட்டு நண்பர் வெளியூர் பிரயாணத்திற்கு, ஆயத்தமாகி விட்டார். கிளம்பியும் விட்டார். அங்கு போய்சேர்ந்ததும் புரியவந்தது , அந்த வேலை தன்னால் செய்ய முடியாது என்று. இருந்தாலும் எப்படியாவது தன்னை தயார் செய்து கொண்டு உழைத்து பணம் சேர்த்து விட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, பல்லைக் கடித்துக்கொண்டு ஆறுமாதம் காலம் அங்கு வேலை செய்தார். குடும்பத்துடனேயே வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு குடும்பத்தை பிரிந்து வாழ்வது தண்டனையாக நினைக்க ஆரம்பித்துவிட்டார். அன்றிலிருந்து வேலையில் மனம் செல்லவில்லை, உண்மையில் சொல்லப்போனால் எதிலுமே பிடிப்பில்லாமல் ஆரம்பித்துவிட்டதாம். அதனால் தன் முதலாளியிடம் உண்மையை கூறி ஒருமாத லீவில்தாயகம் வந்து திரும்பலாம் என நினைத்தவருக்கு லீவு கிடையாது என்பதைக்கேட்கப்பிடிக்கவில்லை. என்ன செய்வது ?
வயிற்றுப்பிழைப்பிற்காக போய் மாட்டிக்கொண்டு விட்டோமோ என தோன்றிவிட்டது. பொறுமைக்கு உதாரணமாக இருந்தும் அவரால் தாங்க முடியாமல், தன்னுடைய சகாக்களுடன் பேசி எப்படியோ தாயகம் வந்து விடலாம் , எனநினைத்து ஒருமாத லீவில் வந்து சேர்ந்து விட்டார். திரும்ப போக நினைத்துக்கூட பார்க்கவில்லை.இப்படி எத்தனையோ இடைஞ்சல்கள் வந்த போதிலும் காரியமே கருத்தாக இருப்பார். மனைவி, பிள்ளை குட்டிகளுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பவர்களில் ஒருவர் இவர். இன்று மனைவியையும்,உயிருக்குயிராக வளர்த்த ஒரே மகனையும் இழந்து, தன் வீடு வாசலை இழந்து நின்று எத்தனையோ மனக்கஷ்டங்களுக்கு ஈடு கொடுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். எதற்கும் ஒரு ஆரம்பம் உள்ளதென்றால், முடிவும் இருக்குமென்று நம்பியே வாழ வேண்டும் என்பதின் உதாரணத்தின் சிகரமாக எப்போது பேசினாலும் மற்றவர்களுக்கு மகிழ்வூட்டி பேசுவார். வாழ்க்கை என்பது கரடு முரடானதேதான், நகைச்சுவையாக பேசுபவர்கள் தங்கள் துக்கத்தை மறக்கவே பிறரையும் சிரிக்கவைப்பார்கள் என கேட்டிருக்கிறேன், நேரிலும் பார்த்து விட்டேன்.
Leave A Comment