மனிதர்கள், உறவு என்பதை அவசியத்திற்கு வேண்டியமாதிரி, பேசிக்கொள்வோம், உபயோகப்படுத்தியும் கொள்வோம். உறவு இல்லாவிடினும், நமக்கு காரியம் ஆகவேண்டுமானால் , ஓஹோ , அவர்களைப்பற்றி கேட்கிறீர்களா?. அவர் என் மாமாவின் மச்சினரின் மனைவியின் இரண்டுவிட்ட தம்பி என கூறிக்கொள்வோம். நமக்கு ஒரு உறவு தேவையில்லையெனில், கூடபிறந்தவர்களாயினும், தனக்கு யாரென்று கூட தெரியாதமாதிரி நடித்து உறவை கட் பண்ணிக்கொள்ளக்கூட தயை காட்டமாட்டோம். ஆனால் வாயில்என்னவோ, உண்மை ஒன்றைத்தவிர ஆயுளில் வேறெதுவுமே தெரியாத மாதிரி பேசுவதில் வல்லவர்கள், நாம் எல்லோருமே. சமயம் வரவேண்டும் மனிதர்களின் உண்மை சுபாவத்தை வெளியில் கொண்டுவர.
மனித சுபாவம் தன்உயர்வு, தன்னைபற்றி தம்பட்டம் அடித்து பேசிக்கொள்வது பற்றியேதான் , இருபத்து நான்குமணிநேரமும் நினைத்து உருகுகிறது. ஆனால் யாருக்காகவோ வாழ்ந்து கொண்டிருப்பது போல் பேச்சு வாய் கிழியும். ஆனால் வெட்டிக்கொண்டவிரலுக்கு சுண்ணாம்பு கூட கொடுக்க மனமில்லாது உட்காரந்திருப்பார்கள். உதவி என்று கேட்டு வருபவர்களை லட்சியம் கூட செய்ய மாட்டார்கள். இப்படி பல வகையான மனிதர்களுக்கு நடுவில்தான் நாம் யாவருமே வாழ்ந்தும், காலத்தை தள்ளியும் வருகிறோம். அவர்கள் அப்படி நடந்துகொண்டிருந்தாலும் அவர்கள் நாட்களும் நன்றாகவே ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
காலம் யாரையும் விட்டு வைக்காது, தள்ளிக்கொண்டே போகிறது. ஆனால் உயிருக்குயிராக உதவி செய்தவர்கள் திண்டாடும் சமயத்தில், பார்த்தும், பார்க்காத மாதிரி கழன்று கொண்டு ஓடப்பார்க்கிறவர்களும் வாழ்ந்துதான் வருகிறார்கள். ஆண்டவன் சந்நிதியில் யாவரும் சமதளத்திலிருந்தாலும், வெவ்வேறு விதமாகவே வாழ்க்கைகளை நடத்தியும் காட்டுகிறான். உறவு என்பதற்காக, உயிரைக்கொடுக்க யாருமே முன் வருவதில்லை, கொடுப்பதுமில்லை. உறவு ஊசலாட ஆரம்பித்தும் விடும், எனதெரிந்தும்,தெரியாத மாதிரி நடித்து பேசுவார்கள். வாழ்க்கை என்பது சாமான்யமில்லை. வாழ்க்கையில், உருண்டு, புரண்டு எழுந்தவர்களுடன் பேசிப்பார்த்தால்தான் விளக்கமாக புரியவரும்.
Leave A Comment