ஒரு ஜீவன் அம்மாபக்கத்திலிருந்து , இன்னொரு ஜீவன் அப்பாவின் பக்கத்திலிருந்து வரும். இரண்டும், இரு துருவங்களே. அந்த நாளில் இருந்தது போலவே இந்தநாட்களிலும் அதே உறவு முறைகள் தொடர்ந்துதான் வருகின்றன. உறவுகள் அதேதான், ஆட்கள்தான் வெவ்வேறு. காலங்கள் மாற, மாற காட்சிகளும் மாறிவிடுகின்றன. ஒரேமாதிரியான வாழ்க்கை அலுத்து விடுகிறது. அத்தைக்கு முக்யத்துவம் கொடுத்துவிட்டால், மாமாவின் மனைவி நொந்து கொள்வாள், மாமிக்கு முக்யத்துவம் கொடுக்கிறார் போல் அத்தைக்குள் தோன்றினாலே போதும், கல்யாண மேடையிலேயே கல,கலத்து, கலவரம் ஆரம்பித்துவிடும். கல்யாணம் என்றாலே இந்த இரு துருவங்களை சமாளித்தாக வேண்டுமே என கவலை அதிகரித்து விடும் சிலகுடும்பங்களில். இந்த நாட்களில் சம்பந்திசண்டைகள் நடப்பது குறைந்து விட்டது. ஆனால் அவரவர் வீட்டில் உள் வீட்டுக்கலகம் ஆரம்பித்து விடுகிறது. சம்பந்தி சண்டைகள் குறைந்ததற்கு காரணம், பிள்ளைகள்தான். பெண்ணும் சரி ஆணும்சரி, ஒரு மரியாதைக்காக நான் இன்னாருடன் மணம் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், உங்களுக்கு அவர்களை சந்தித்து பேசவேண்டுமானால் நான் அட்ரஸ், போன்நம்பர் கொடுக்கிறேன் என கூறிவிடுவதால் இரு தரப்பு பெற்றோர்களும், பாக்குவெட்டிக்கு நடுவில் அகப்பட்ட பாக்கு மாதிரி மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். பெற்றோருக்கே இந்தகதியென்றால் மற்ற உறவினர்களுக்கு எங்கே நிற்பதென்றே தெரியாது. இதில் அத்தையாவது, மாமியாவது , இது போன்ற சொந்தபந்தங்களை தள்ளி நின்றேதான் வேடிக்கை பார்க்கவேண்டும். காலத்தின் கோலம் அலங்கோலமாகி வருகின்றதையும் பார்த்தும், கேட்டும், அனுபவித்துக்கொண்டும் வருகிறோம்.
Leave A Comment