ஒரு காலத்தில் எதைப்பார்த்தாலும் அடைய விரும்பிய மனது, முதிய வயது காலத்தில், எதைக்கண்டாலுமே, வேண்டாம், வேண்டாம் என்ற வெறுப்பை உண்டாக்குவது போன்ற ஒரு உணர்வை அடைந்து வருகிறது. ஆவல்கள்அடங்கி, பிள்ளைகுட்டிகள் நன்றாக வாழும்காலத்தில் நம்மை தூக்கி கொண்டு போய் விடமாட்டானா என்ற வேகம்தான், மனதில் எழுகிறது. நாம் வாழ்ந்த வாழ்க்கையைவிட, வீழ்ந்து போன காலகட்டங்களையே மனம் நினைத்து, நினைத்து தவிக்கிறது. எல்லோரும் நம்மை சுற்றி, சுற்றி வந்தது, நினைவில் வந்து வாட்டுகிறது. எதற்கெடுத்தாலும் நம்மை கூப்பிட்ட வாய்கள் , எதற்குமே நம்மை, கலந்தாலோசிக்காமல், கேட்காமல் செய்வதற்கு துணிவு வந்துவிட்டது. பிள்ளைகள் சுதந்திரம் அடைந்துவிட்டார்கள். வயது முதிர்ந்தவர்கள், தள்ளி நிற்க வேண்டியது அவசியமே. இல்லையேல், பிறருக்கு பெரியவர்கள், இடைஞ்சல் செய்துவிடுவோம்.
காலங்கள் மாறிவரும்போது காட்சிகள் மாறுவதுதான் உலக இயல்பு. நெருப்பு கீழ் மட்டத்தில்தான் இருக்கும், ஆனால் லேசான புகை மேல் நோக்கியேதான் போகும். நம்மனதும் காற்றுபோல லேசாகிவிட்டால் பறக்கத்தொடங்கி விட்டால் பிடித்து இறக்க, எவராலும் முடியாது. நம் மனதையே நம்மால் அடக்கியாள முடியாமல் போனால், நம்மில் இல்லாதவற்றை எப்படி அடக்க முடியும் ?? பிறரை அடக்கி ஆண்ட மனதானது அடங்கி வாழ மறுக்கவே செய்யும். ஆனாலும் மனதை கட்டுக்குள் வைத்துக்கொண்டுதான் காலத்தை கடந்தாக வேண்டும். எல்லா கோணங்களுக்கும் ஒருவித தாபம் உள்ளதை உணரலாம். மனதை அடக்குகிறோமோ இல்லையோ, முதன் முதலாக நாவை நமக்குள் அடக்கவேண்டும். சில சமயங்களில் வாய் திறந்து புலம்புவதை விட, வாயை பூட்டைப்போட்டு வைப்பதே நல்லது. வாழ வெறுக்கும் மனதை அடக்கிவைத்திருக்கவும் தெரிந்து கொள்வதும் நல்லதுதான்.
Leave A Comment