அத்தையே இல்லாத  வீடு வெறிச்சோடிவிடும். மனிதர்கள் பலவிதம்.  ஆனால் அத்தையெல்லாம் சொத்தைகள் என்ற காமெண்ட்ஸ்ம், கேட்டிருக்கிறேன். பெண்மணிகளுக்கு பாவம்,  அந்தநாட்களில், பவர் கிடையாது என்பதுடன் மதிப்பும் கொடுக்கமாட்டார்கள் என்பதும் உண்மையே .  திடீரென்று ஒருநாள் ஒரு ஆளைக்காண்பித்து உன் சிறியவயதிலேயே உன்னை இவனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டோம், நீ அவனுடன், அவர்கள்  வீட்டில்தான் இருந்து வாழ வேண்டும் என பிடித்து தள்ளாத குறையாக கொண்டு விட்டு விடுவார்கள். பிள்ளை வீட்டாரும் கிடைத்தவைகளை வாங்கிவைத்துக்கொண்டு , சிறிய பெண்ணிடம் வாயைகிண்டி  உன் அம்மாவிற்கு பிறந்த வீட்டில் என்னென்ன நகைகள் போட்டார்கள் என கேட்டுத்தெரிந்து கொள்ளும்போது, பெண்பிள்ளைகளும் தங்கள் வீட்டுபெருமைகளை காட்ட உள்ளதை உள்ளபடியேகூறியும் கொஞ்சம் மசாலா கலந்தும் கூறிவிடுவார்கள். பிள்ளை பிறந்த போது போட்டிருந்த நகைகளையும் வாங்கிகொண்ட பின்தான் பிள்ளை வீட்டாருக்கு துரோகமான எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பிக்கும். அதேமாதிரிதான் என்  அத்தையின் கதியும் ஆனது என்று பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள்.

பழைய காலத்தில் வருடாந்திர சீர், மாதாந்திர சீர் , உள்ளூரிலிருந்தால்  வாராந்திர சீர் என்றெல்லாம் கேட்டு வாங்கி கொண்டும் இருந்திருக்கிறார்கள். ஏமாற்றுவதற்கு கத்தியை காண்பித்துதான் பிடுங்க வேண்டிய அவசியமில்லை. நைச்சியமாக கேட்டும், பேசியும் ஏமாற்றுவார்களாம். ஏமாற்றி பணம் பிடுங்கும் திருடர்களுக்கும், சம்பந்திகளுக்குமே வித்யாசமின்றி வாழ்ந்திருக்கிறார்கள். கருப்பு பெண்ணாக இருந்தால் பணம், நகை அதிகமாக போட்டுத்தான் அனுப்புவார்களாம். அசடாக இருந்தால் கொள்ளையமாதிரி,  பிள்ளை வீட்டு சம்பந்திகள் கத்தியை காட்டாது பணம் பிடுங்குவார்களாம்.

ஒரு பையன் கல்யாணமே தேவையில்லை, சன்யாசத்தில் ஈடுபடப்போவதாக கூறியதையும் மீறி அவருக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்களாம். அவர் அந்த பெண்ணை ஏற, இறங்கக்கூட பார்த்தில்லையாம். பெண் வீட்டாருக்கு பெண்ணை கன்னிகழிய வைக்க வேண்டுமே என்ற எண்ணம், கல்யாணமான மறு நாளே மாப்பிள்ளை காணாமல் போய் விட்டாராம். பெண், புருஷன் வீட்டிலேயே, மாமனார், மாமியாருக்கு வீட்டு வேலைகளுக்கு ஒத்தாசையாக வசித்துவந்திருக்கிறாள், சுமார் பத்து வருடகாலம். அந்தநாட்களில், பெண் என்றாலே பிறந்த வீட்டை விட்டு போய்விடவேண்டும், என்றெண்ணம் மேலோங்கி இருந்த காலமும் ஒரு காரணம். பெண்ணின் அப்பா, மாமா என்று யாராவது போய் பார்த்துக்கொண்டிருப்பார்களாம். பெண் வீட்டுப்பெண்மணிகள், சம்பந்தம் செய்த வீட்டிற்கு போகும் பழக்கமில்லாத காலம் அது. மேலும் அம்மாவுடன் பேசினால், பெண் உண்மையை கூறி விடுவாளாம் ! புருஷன் வீட்டாருக்கு தங்கள் பிள்ளையின் வருங்காலம் பற்றி எந்த கவலையும் இல்லாத போது, வீட்டிற்கு  வந்த பெண்ணை பற்றியா கவலை கொண்டு உருகப்போகிறார்கள்?  கடைசியாக  மாப்பிள்ளையே காணாமல் போனபிறகு ஊரார் வீட்டுப்பெண்ணை நாம் ஏன் வைத்திருக்கவேண்டும், என்ற எண்ணம் வந்து மருமகளை பிறந்தவீட்டிற்கு  அனுப்பிவிட்டால்,  பெண்வீட்டார் மற்றும் உறவினர்கள் ஒரு சாபக்கேடாக நினைப்பார்கள்.

இப்படி ஒருகாலம் இருந்தது  மாறி,  இன்றைக்கு பெண்களுக்கே சாதகமான முறையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, பெண்மணிகளுக்கும், மனோ தைர்யம் வந்துவிட்டது என்பது நல்லதே.