“வளர்த்த கடா மார்பில் பாயும்”இது எத்தனை உண்மையான பேச்சு என்பது அனுபவித்தவர்களுக்கே நன்றாக புரியும். பணம் காசு வைத்திருக்கும் பெற்றோரை கண்டவுடன் காலில் விழுந்தும், விழுவது போல பாவனைகளையும் செய்வார்கள் பிள்ளைகள். ஆக்ரோஷ பெற்றோர்களையும் கண்ணில் வைத்து இமையால் மூடி காப்பாற்றுவது போல் நடிப்பார்கள், பணமூட்டையிருந்தால். தங்களுக்குள் மனவேற்றுமையே இருந்தால் போல் கூட காண்பிக்க தயங்குவார்கள். பெற்றோர் இருமினால் கூட பிள்ளைகளால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை போல் ஒரு நடிப்பு, மருந்து கொடுக்கும் டயத்தில் , படுக்கையில் போட்டு இரண்டு வருடங்கள், நாற்பது நாட்களாகிவிட்டனவே, என நாட்கள் கணக்கை கூட தினந்தோறும் மனதிற்குள் தவறாமல் யோசித்து பார்த்து அலுப்புடன் உட்காருவார்கள், இருக்கும் வேலைகளில் இந்த எண்ணங்கள் நன்றாக ஞாபகத்தில் உள்ளது என்பது போற்றத்தகுந்த சுபாவமே. ஆனால் ஆண்டவனின் கணக்கு வேறுமாதிரியானது.
அதே பெற்றோர் காசு வைத்துக்கொண்டிருக்கிறார்கள், எல்லாமே தன்னை சேர்ந்துவிடும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தால், துளிக்கூட கவலையில்லாது, கலக்கமில்லாது, ஒட்டியும் ஒட்டாது போலவும் வாழ்ந்து வருவார்கள். போட்டிக்கு எவருமே இல்லையென்றால் அதன் தோரணையே தனியாக தெரியும். காலியான பைகள் தொய்ந்து போய் நிற்கும் என்பதே உண்மை. ஆனாலும் கையில்கிடைக்கும் வரைதான் அந்த அபிலாஷைகள் இருக்கும்.
பெற்றோர்கள் எல்லோருமே ஒரேமாதிரியானவர்களும் அல்ல. ஆனால் பிள்ளைகள் என வரும்போது, யார் யாரை சார்ந்து நிற்கிறார்கள் என கவனத்துடன் பார்த்தோமானால் மட்டுமே புரிய வரும். பிள்ளைகள் தாங்கள் நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்து வரும் நாட்களில், கொஞ்சம், கொஞ்சமாக அவரவர்களுக்கு வேண்டியவைகளை சேர்த்து வைத்துக்கொள்ள முயன்றும் வருவார்கள்.
பெற்றோர்களுக்கும் தன்பிள்ளை உயர்ந்த வேலையில் சேர்ந்து நன்கு சம்பாதித்துக்கொண்டிருப்பதில் பெருமை அடைவார்கள். ஆனால் மனதுக்குள் தங்களை விட பெண்டாட்டி பிள்ளைகளிடம் அதிக கவனிப்பு கொடுப்பதாக நினைத்து குற்றமும் கண்டுபிடிப்பார்கள். இன்றையநாளில் வயோதிகர்கள் ஓரினமாக இருந்து அவரவர் குறைகளை பங்கிட்டு வாழ்வதில்லை. பெரியவர்களும் அக்கம்பக்கங்களில் பார்த்து, கேட்டு வழக்கத்திற்கு மாறாக பிள்ளைகளிடம் அதி உஷாராக உள்ளார்கள். பெற்றோரிடம் சில்லறை குறைவாக உள்ளதென்றால் அவர்களின் சிநேக பாவமே மாறிவிடும். தாட்,பூட்டென்று பேச்சு வரும், தன்னுடைய சிறிய வயதில் தன்னை அப்பா எப்படி இடித்து காட்டினார் என்பது நினைவில் அடிக்கடி வந்து துள்ளும். அப்பா திட்டியசமயம் தான் அனாதையாக நின்றதாகவும், அம்மா தன்னை சப்போர்ட் கூட செய்யவே இல்லையென கூறி பெண்டாட்டியை சாட்சிக்கு கூப்பிடுவான். இதைத்தான் வளர்த்தகடா மார்பில் பாய்ந்தது போல் என கூறுவார்கள்.
Leave A Comment