தஞ்சை ஜில்லாவை ஆண்ட ராஜாராஜ சோழன்தான் பெரிய ராஜா என்றும், சோழநாட்டில்தான் பெரிய கோயில், பாண்டிய நாடான மதுரையில் மீனாட்சி கோயில் அதைவிட பெரியதாக இருப்பதாகவும், எங்கள் சிநேகிதங்களுக்கு நடுவில் அந்தக்காலத்தில் சண்டைகள் வரும். அன்று எல்லா வீடுகளிலும் இந்த தேசத்தின்,பெருமைகளைப்பற்றி பேசுவார்கள், ஆனால் சிறியவர்களுக்கு நடுவில் கூட ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து வாழ்ந்த காலம் அது. பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும், அவரவர்கள் கிராமத்திலிருந்து வெளியில் போய்படிக்க ஆரம்பித்து டவுனில் வேலை கிடைக்க ஆரம்பித்ததும்,கொஞ்சம் இந்த பழக்கங்கள் அடங்க ஆரம்பித்தது.ஆனால் இன்று தேசத்தை விட்டே போய்விட வேண்டுமென்ற எண்ணம்தான் தலை தூக்கி நிற்கிறது.
எங்கள் கிராமத்தில் பெரியப்பா பிள்ளை டாக்டர்ஆகிவிட்டார். அதற்கு முன் ஜெனரேஷனில் ஒன்றுவிட்ட அத்தை பிள்ளை டாக்டராக பக்கத்து டவுனில் வைத்தியம் பார்த்து வந்தார். எங்கள் உறவில், பத்துப்பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை ஒருவர், ஐபிஸ் அதிகாரியானார், எங்கள் குடும்பத்திலேயே என் பெரியப்பா பிள்ளை 1960 க்கு முன்பே அமெரிக்கா படிக்க போய் படித்து , ரிஸர்ச் செய்து பட்டம் பெற்றார். அந்த சமயத்திற்கு பிறகு க்யூவில் போவது போல் நிறைய பிள்ளைகள் வெளியில் போய் படித்து, பழைய புலிகளை விட மேதாவிகளாகி, அங்கேயே கல்யாணம் செய்து கொண்டு ஏக புருஷவைராக்கியம் எடுத்துக்கொண்டும், இன்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் வருகின்றார்கள். நம்மை சேரந்தவர்களிலேயே எத்தனையோ பிள்ளைகள் சர்க்கார் நடத்தும் பரீட்சைகள்பாஸ் செய்து பெரிய உத்யோகங்களில் இன்றும் கூட இருந்து வருகிறார்கள். படிப்பதற்கு மன உத்வேகம்தான் அவசியமே தவிர, வெளிதோற்றத்தில் எதுவும்கிடையாது.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால், படிக்காத பெற்றோராக இருந்த போதிலும், அந்தக்காலத்தில் ட்யூஷன் என்பது அரிதாக இருந்தது. ட்யூஷன் படிக்க அனுப்பிவிடுவேன் என்றால், வாத்தியாரிடம் அடிபட்டு , இடிபட்டு படிப்பாய் என அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதுபோல் கூறுவார்கள். மேலும் ட்யூட்டரிடம் போனால், தன்சிநேகிதர்கள் தன்னை மக்கு என பெயர்சூட்டி விடுவார்கள், என்ற பயமும் பிள்ளகளுக்கும் இருந்தது. அன்று டியூன் படிக்கபோகிறோம் அடிமுட்டாள்
மாதிரிதான் நினைப்பார்கள்.
இன்றைக்கோ, தெருவிற்கு தெரு ட்யூஷன் சென்ட்டர்கள் உள்ளன. எந்த கோச்சிங்கில் படித்து வருகிறார்கள் என்பதை பொறுத்தும் மற்ற பிள்ளைகளின் மனதில் மதிப்பு உயர்கிறது. படிப்பை விட அவசியமில்லாத ஆடம்பரமே அதிகமாகி விட்டது. தனக்கென்று இல்லாத ஒரு உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் உணர்த்த முடியுமா??? பசியுடன் இருக்கும்போது சாப்பிட்டால் மட்டுமே சாப்பாட்டின் ருசி அதிகரிக்கும். வெய்யிலில் வாடி வதங்கினால்தானே நிழலின் அருமை தெரிய வரும்?? இன்றையநாளில் அப்பாவின் வருமானத்தில் வாழ்ந்தும்,தன்னை பற்றி குதிரைக்கொம்பாக நினைக்கிறார்கள். பெற்றவர்கள் எதை கூறுகிறார்களோ அதை செய்யவே கூடாதெனவும் பிள்ளைகள் முடிவெடுக்கிறார்கள்.
Leave A Comment