வயதாகியபின்,மனைவி கணவரை இழப்பது தாங்க முடியுமா? இல்லை கணவர் மனைவியை இழந்து நிற்பது என்ற பிரிவுதான் கொடுமையா? சிறிய வயதில் பிரிவு வந்தால் பணம் இருந்துவிட்டாலோ, வேலை பார்த்துக்கொண்டிருந்து விட்டாலும் அத்தனை பயமிருக்காதோ? பிள்ளைகளுக்காக வாழத்தோன்றும். மனம் கிழிந்துபோன வயோதிகத்தில் இழப்பு என்பது ரேஸில் ஓடி வரும்போது எதிர்பாராமல் சுவரில் முட்டி நிற்க வேண்டிவந்தால் எப்படியிருக்கும்? பிறரை சார்ந்து இருக்கும் சமயத்தில் கணவர் மனைவியை இழந்தாலும்,மனைவி கணவரை இழந்தாலும் மனகஷ்டத்தில் உழல்வார்களோ என தோன்றுகிறது. மேலும் வயதான பின் பேசுவதற்கு ஆளில்லாமல் இருக்கும். புதிய விஷயங்கள் எதுவுமே தெரியாமலிருக்கும்.பெண்மணிகளாவது எதையாவது செய்து சாப்பிடலாம்.ஆணுக்கு பந்தங்கள் இருந்தும் தனிமை கொடுமையானது.

ராக்கெட் வேகத்தில் நவீன காலம்ஓடும்போது வயதானவர்களுடன் பேச யாருக்கு டயம், மனது இருக்கும்? மேலும் நடுவயதில் தனிமரமாகி விட்டால் திறமைகளை உபயோகித்தும் கொள்ளலாம்.வயதான காலத்தில் ஞாபகமறதி, கண்கள் பார்க்க மறுக்கின்றன, காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டன, கால்கள் நடப்பது கடினம், எங்கேயுமே தனியாக போய்வருவது கடினமே.அங்கங்கள் ஆடிப்போய் இடுப்பு வலி,கால்வலி, கண்கள் சக்தியை இழந்து வரிசையாக வயோதிக தன்மைகள் நிரம்பி வழியும்போது கிழபிராணன்களை யார் கவனிப்பார்கள்? வயதானவர்கள் தன்க்கென யாராவது கிடைப்பார்களா என தேடுவார்கள்,எவருமே பெரியவர்கள் கண்ணில் படாமலிருக்க ஓடி ஒளிவார்கள். மேலும் கிழத்திற்கு தன்னுடைய பழைய நினைவுகள் வந்து வாட்டுகிறது என்றும் கிண்டல் வேறு செய்வார்கள்.

அவரவர்கள் பிஸியாக இருக்கும் சமயத்தில் கிழங்களை பற்றி யார் நினைத்துப்பார்த்து பேசப்போகிறார்கள்? உண்மையிலேயே வயதாகி விட்டு பிரிவு வந்தால் கொடுமைதான். பேசுவதற்கு விவரங்களும் இருக்காது. மனதுடன் உடலும் ஒத்துழைக்காதே. வயதாகிவிட்டால் வாய்க்கு வேண்டியதை சாப்பிட தோன்றும், கிடைக்காது.செய்து கொடுக்க ஆள் வேண்டுமே? உதவிகேட்டு செய்யவில்லைஎன்றால் மனகஷ்டம் ஏற்படும்.நம் அவசியத்தை உணர்ந்து கேட்காமலிருந்தால் மன ஏக்கம் ஏற்படும். தன்மனகோளாறுகளை பேச ஆட்களில்லாது தவிக்க வேண்டி வரும். பெரியவர்களைப்பார்த்தாலே ரம்பம் வந்துகொண்டிருக்கிறது, எப்படி தவிர்க்கலாமென பேச்சை தவிர்ப்பார்கள். ஆனால் காலனின் கணக்கை நம்மால் மாற்றமுடியாது.தவிக்கவேண்டிய காலம் வந்தால் தவிர்க்க முடியாமலே நிற்போம் என்பதே உண்மை.