ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்துவிட வேண்டும் போல மேல்பூச்சு,கீழ்மூச்சு வாங்க ஓடியாடி எத்தனையோ வேலைகளை சாதித்து விட்டது போல நமக்குத்தோன்றினாலும், பெற்றுக்கொண்டவர்களுக்கும், நம்மைப்பார்த்தவர்களுக்கும் நம் வேலைகள் கேலிக்கூத்தாகவும் புத்தி ஸவாதீனமற்றவர்களின் வேலைகளை போலவும் தெரிகிறது. ஆனால் ஆற அமர, உட்காரக்கூட மனமில்லாமல் உழைத்தவர்களுக்கு விழலுக்கு வெந்நீரை பாய்ச்சியது போலாகிவிட்டதை நினைத்து பெருமூச்சு வாங்குவதுதான் மிச்சம்.

வாழ்க்கையில் எதையுமே ஸீரியஸாக எடுத்துக்கொண்டாலும் நடக்க வேண்டியது நடந்தால்தான் மற்றவர்கள் நம்மைப்பற்றியும் பேசி எள்ளி நகையாடாமல் இருப்பார்கள்.யார்,எவர்,எந்த வேலைகளை எடுத்துக்கொண்டாலும் ஒரே மனதுடன்,நோக்கத்துடன் ஈடுபட்டு, உண்மையாக உழைத்து
வேலை செய்யும்போது நூற்றுக்கு நூறு செயலில் காண்பித்து வாழ்க்கையை நடத்திக்காட்டவேண்டும்.சில வேலைகளை,மறைத்து செய்யப்படவேண்டியவைகளை மறைத்துத்தான் செய்யவேண்டும்.பிறர் என்ன கூறுவார்களோ,நாம் நம்திறமையில் நம்பிக்கை வைக்காது போய்விட்டால், நம்மை யார்தான் நம்புவார்கள்? பத்து வேலைகளில் நான்கு வேலைகளையாவது ஒழுங்காக செய்தால்தான் மனிதர்களுக்கு நம்பிக்கை வரும். இந்த உலகில் வாழ்க்கையில் தவறுகள் செய்யாதவர்களே இருக்கவே முடியாது. பெரிய,பெரிய விஞ்ஞானிகள் கூட எத்தனையோதவறுகளை செய்து விட்டுத்தான்,இந்தமாதிரி செய்யக்கூடாது, அந்தமாதிரி செய்யக்கூடாதென கற்றுக்கொண்டதாக சிறிய வயதில் படித்திருக்கிறேன்.தவறுகளைக்கண்டு வெட்கப்படவேண்டிய அவசியமில்லை. ஆனால் செய்தவறுகளையே திரும்ப செய்துவிடாமல் இருப்பதில் கண்ணும்,கருத்துமாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் தவறுகள் என்பது கசப்பு மருந்து போன்றது.நம்மை சரியாக வழி நடத்தவே, மற்றும் திருத்திக்கொள்ளவே நாம் தவறுகளை செய்துவிடாமல் இருக்க பழக வேண்டும். மனித வாழ்க்கை நீரில் ஓடும் படகு போன்றது.துளி பாலன்ஸ் தவறி விட்டாலும் வாழ்க்கையின் கவர்ச்சியான பாதை கரடுமுரடாகிவிடும். உபயோகமேயில்லாதவற்றை உபயோகிக்கத்தில் கொண்டு வந்து வாழ்க்கைதோட்டத்தை சக்தி வாய்ந்ததாக மாற்ற முயலவேண்டும்.