எதிர்பார்த்து ஏமாறுவதை போல துக்கம் வேறெதுவுமில்லை.கடவுளை நம்பினால் கைவிடப்படார் என பழமொழியுள்ளது.ஆனால் உறவுகளை நம்பினால் உருப்படமாட்டார்கள்,எனவும் ஒரு புதுமொழி கூறலாம். காலங்கள் மாறுகின்றன, காட்சிகளும் மாறுகின்றன, அதே போலவே மனித குணங்களும் மாறி விடுகின்றன.மாறியவைகளை மனதார ஏற்றுக்கொண்டு வாழத்தெரியவேண்டும்.பழக்க,வழக்கங்களும் மாறிவிட்டன.பழைய காலத்தில் உறவினர்களை தெய்வத்திற்கும் மேலாக மதிக்கப்பட்டார்கள். இன்றைக்கு எவரையுமே உதறியெறியும்படியான சுபாவம் தலை தூக்கி நிற்கிறது. சுற்றம்,
உற்றம் தேவையென்பதை சுட்டிக்காட்டும்போது நாம் நிற்கலாமே தவிர மற்றபடி மனிதர்களுக்கு மவுசு இல்லை.

எவருமே உண்மையை பேசி விவகாரங்கள் தெரிந்துகொண்டும், நம் விவகாரங்களையும் கேட்டுக்கொள்வதில்லை. எவருக்கும் யாரைப்பற்றியும் கவலையில்லை பழகுவதற்கு இனிமையாகயிருந்தாலும் உண்மை சுபாவம் தெரிவதில்லை. அவரவர்கள் யாவருமே தங்கள் ரகசியத்தை மூடிமறைக்கவே பார்க்கிறார்கள்.உற்றார், உறவினர் எல்லாஇடங்களிலேயும் வரவேற்கப்படுவதில்லை.ஏனென்றால் அவரவருக்கு தங்களைப்பற்றித்தான்
கவலையே தவிர,வேறொருவருக்காக உருகுவது குறைந்து வருகிறது.கல்யாணமோ, கருமாதியோ எதற்கு போனாலுமே ஓரிருநாட்களில் திரும்பி வந்துவிட வேண்டியாகிவிடுகிறது. ஒருசமயம் கொஞ்சம் நீடித்துவிட நேர்ந்தால் எங்குமே தங்குவது கடினமே.

இந்நாட்களில், பிரைவஸி என்றதொரு வார்த்தைக்கு மகத்துவம் அதிகமாக உள்ளது.வாழ்க்கையில் தனக்கு எது தேவையோ அது மட்டுமே பிரதானமாக கருதப்படுகிறது. எதற்குமே யாரையும் கன்ஸல்ட் செய்ய பிடிப்பதில்லை. ஏனென்றால் மனித உலகத்தில் உண்மை என்பது குறைந்து வருகிறது. பொய்களின்,மற்றும் நடிப்பின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. உண்மை விளம்பிகள் மறைந்து விட்டார்கள். எவரையும் குற்றம் கூறுவதினால் எதுவுமே மாறப்போவதில்லை. தேங்காய் மாங்காயாக முடியாது, என்னும் உண்மையை உணர்ந்து கொண்டும் அனுபவித்தும் வாழ்ந்துவருகிறோம். இந்நாட்களில் சுதந்திரமாக உலாவி வருவதே யாவருக்கும் பிடித்தமாதிரியுள்ளதால் அதையே கடைபிடித்து வாழ முயற்ச்சிக்கவேண்டியதுதான்.