நாம் எதையெல்லாமோ நினைக்கிறோம் அவை யாவற்றையுமே, உணர்ந்து செய்து பார்க்க முடிவதில்லை.ஆனால் மனம் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது. சிலவற்றை மனம் தேடுகிறது, ஆனால் அருகில் வந்து கிடைத்து விடுகிறாற் போல் இருந்தால் வேண்டாமென நினைக்கத்தோன்றுகிறது. மனதிற்கு இதேமாதிரி அலைபாய்ந்து கொண்டிருப்பது ஒரு பொழுது போக்கு போலவே நினைக்கிறேன். மனிதர்கள், அதாவது சொந்தபந்தங்கள் அருகில் இருந்து வாழ கொடுத்து வைத்திருக்கிறேன் என வாய் கூறுகிறது. ஆனால் தன் பிள்ளைகளுக்காக கூட அவர்களின் வீட்டையும்,பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டுமானால் மனதில் அலுப்பு தட்டுகிறது. மனங்கள் பேதலித்து விட்டது போலவே தோன்றுகிறது.ஆனால் இன்றைய நாளில் எவருமே பிறருக்காக தன் சௌகர்யத்தை குறைத்துக்கொண்டு வாழப்பிடிக்கவில்லை.விஷயம் வெளியில் பார்ப்பதினால் இல்லை. விசாலமான மனதில்லை.அவரவர்களுடைய கண்ணோட்டமே வேறு மாதிரியாக உள்ளது.மனதில் உண்மைக்கு இடமில்லை.

இந்த மனித வாழ்க்கையில் எதை கண்டு மனம் திருப்தியடைகிறதென்று சொல்லவே முடியவில்லை. மனம் ஒரு குரங்கு என்று கூறிய ஆள் மேதாவியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நூற்றுக்கு தொண்ணூறு ஆட்களின் மனது சதா எதையோ நினைத்து,நினைத்து சஞ்சலபட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதைப்பார்த்தால், அடுத்தாற்போல் இருப்பது இதைவிட நன்றாக இருப்பது போல் ஒரு உணர்வைக்காண்பிக்கிறது. அக்கரைக்கு இக்கரை பச்சை என மேயப்போகும் மாடுகளுக்கு தோன்றுவதாக மனிதர்கள் பேசிக்கொள்வார்கள், அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் சிலநேரங்களில் நாம் யாவருமே தடுக்கி விழப்பார்க்கிறோம் என்பதே உண்மை. தடுக்கி விழுபவர்களும் இருந்து வருகிறார்கள்.மனித குலம் தன்னுடைய சற்குணங்களை இழந்து அழிவிற்கு வித்திடும் மலிவான எண்ணங்களை மனதில் ஏற்றுக்கொண்டு,தேடியலைந்து வரும் மனிதமிருகங்கள் அதிகமாகிக்கொண்டேதான் வருகிறார்கள்.கலிபுருஷன் உலகத்தை அழிப்பான் எனபெரியவர்கள் பேசிக்கேட்டிருக்கிறேன்.ஆனால் வீட்டுக்கு வீடு கலிபுருஷன் கிளம்பியுள்ளார்கள் போல் ஒரு தோற்றம் தெரிகிறது.

யார் நம்மை காப்பாற்றுவார்கள் என நம்புகிறோமோ அவர்களே துரோகம் செய்யதுணிந்து விடுகிறார்கள்.இதைத்தான் நான் உருவகப்படுத்த முடியாத உண்மை என கூறுகிறேன்.