நம்மால்தான் எல்லாவற்றையும் செய்து காண்பித்து விடமுடியும் என நம்பிக்கொண்டு, நாம் யாவற்றிலும் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறோம். ஒன்றுக்கு மேல் ஒன்றாக கடினமான நேரத்தை சந்தித்து, தோற்றுவிடும் நிலை வரும்போது, நம்மால் இதைக்கூட சரியாக நிறைவேற்ற முடியாததின் காரணம் என்னவாக இருக்கும் என நிதானமாக யோசித்து பார்க்கும்போது புரியவரும், நம்தவறுகள். ஏனென்றால் ஒரு வெற்றியை கண்டு விட்டோமானால் எதிர்கொள்ள இருப்பதையெல்லாம் காலில் படும் தூசி மாதிரி தட்டிவிடலாமென நினைத்து இறுமாப்பு கொள்கிறோம். உண்மையில் தோல்வியடைந்தவர்கள், தங்கள் தவறான செயல்களை மறந்து விடுகிறார்கள்,ஆனால் நம்மை பார்த்தவர்கள்,கேட்பவர்களுக்கு அதுதான் மறப்பதே கிடையாது. அவர்கள் எல்லாமே தெரிந்த ஞானிகள் மாதிரி பேசுவார்கள். ஆனால் வேடிக்கை பார்த்தவர்களைவிட, அடிபட்டவர்களுக்குத்தான் அறிவு அதிவேகமாக வேலை செய்கிறது.

உதாரணமாக இன்றைய நாகரீக உலகத்தில் விவாகரத்து என்பது மிகவும் சாதாரணமாக வீட்டுக்கு வீடு உள்ளது. எந்த பாரமுமே தன்தலையில் விழும்போதுதான் அதன் பாரம் புரியவரும். பெண்மையின் அடங்கிய குணத்தை ஆண்சிங்கங்கள் தவறாக கணக்குப்போட்டு விடுகிறார்கள். பெண்களின் மன ஆழத்தை அளவிடுவது சுலபமில்லை.இதற்கும் மேலாக ஆண் வீட்டுக்காரர்கள் தன்பிள்ளை சம்பாதிப்பதஇல் கர்வம் கொள்கிறார்கள்.என்னதான் பெண்மணிகள் பெரியபடிப்பு, பெரிய பதவியில் இருந்தாலும், நம் மனித சமூகத்தில் பெண்கள்தான் சிறப்பாக குடும்பம் நடத்த முடியும் என்ற ஒரு உயர்வான கருத்து இன்றும் உள்ளது. இது உண்மையும்கூட. நம்மைப்போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு குடும்ப கௌரவம் என்பதே உயர்வான சக்தியை அளிக்கிறது, என நினைக்கிறோம். பெண்மணிகள் எந்த பதவியிலிருந்தாலும், தாய்மைக்குள்ள சக்திக்கு ஈடு கிடையாது.வேலை செய்யத்தெரியாதவர்களால் வேலை வாங்கமுடியாது.

கணவன்மனைவி இருவருமே உயர்பதவியிலிருந்தாலும் கொள்ளையாக பணம் வரவுகள் இருந்தாலும்,கப்பலை ஓட்டத்தெரியாத காப்டன்தான் கப்பலை ஓட்டியாக வேண்டுமென்றால், அந்த கப்பலில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் மனதில் எந்தமாதிரியான பீதியிருக்கும் என்பதை நம்மால் நினைத்துப்பார்க்க கூட முடியாது. அதேபோலவேதான் குடும்பம்என்பதில் ஒரு அன்னியோன்யம், நற்கொள்கைகள்,அவசியமேற்படும்சமயங்களில் கைகொடுக்கும் திறமையும், கணவன், மனைவிக்குள்ளும்,பிள்ளைகளுக்கும் அதே மாதிரி உணர்வுகள் இருப்பது மிகவும் அவசியமானது.இந்த அத்யாவசியமான கொள்கைகளை மதிக்காமலிருந்தால் வாழ்வதில்தான் என்ன அர்த்தம் உள்ளது? உணர்ச்சிகளை புரிந்துகொண்டு நடப்பது ஒருபுறமிருக்க, உணர்ச்சியே இல்லாதபட்சத்தில் எவரை குறைகூறுவது? கூடி வாழ்வதே எத்தனையோ நன்மைகளை கொடுக்கும் என்பதின் பொருள் வாழ்ந்தவர்களுக்குத்தான் புரியவரும். நாம் நமக்காக மட்டுமே வாழாமல் பிறருக்காக விட்டுக் கொடுத்து வாழ்ந்த எவரும்,கெட்டுப்போனதில்லை. தனித்தனியாகவே வாழ்ந்தாலும் ஒன்று சேரப்போகும் இடம் ஒரே இடம் என நினைத்தோமானால் வித்யாசமேயில்லாது வாழ ஆரம்பித்து விடுவோம்.