எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் நம் வாழ்க்கையில் சந்தித்த நபர்களை நம்மனம் மறப்பதேயில்லை. அலமேலு அம்மாமி என்பவர் நான் சிறிய வயது நாளிலிருந்து நம் வீட்டிற்கு தினந்தோறும் காலை,மாலை இரண்டு வேளைகளிலும்,ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தங்கள் பேஷண்டுகளை பார்க்க வருவதுபோல் எங்கள்வீட்டிற்கும், மற்றும் சில வீடுகளிலும் வந்து போய், இங்கிருக்கும் விபரங்களை அங்குமிங்குமாக தெரிவித்து பரப்புவார்கள். அதனால் இடைஞ்சல்கள் என எதுவும் வந்ததாக எவரும் சொன்னது கிடையாது. ஆனால் ஒருசில குடும்பங்களில் இளம் தலைமுறையினருக்கு பிடித்திருக்கவில்லை . பெரியவர்கள் என்றாலே வம்புகள் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம்தான் தோன்ற ஆரம்பிக்கிறது, இன்றைய இளையதலைமுறைகளுக்கும்.

ஆனால் அலமேலு அம்மாமியும், அவருடைய அம்மா கனகம் என்பவரும்,எங்கள் கிராமத்தில் தனியாக ஒருவீட்டில் வாழ்ந்து வந்தார்கள். கிராமத்து பெரிய மனிதர்கள் அவரவர்கள் சக்திக்கேற்றபடி மாதாமாதம் பணம்காசு கொடுத்து உதவுவதும், எல்லோருடைய வீட்டிலிருந்தும், அவரவர் சக்திக்கேற்றாற்போல் சாமான்கள் வாங்கிகொடுப்பார்கள். மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்து உதவுவார்கள். பால்,மோர் போன்றவைகளும் கொடுத்து உதவுவார்கள். எங்கள் பெரியப்பா பிள்ளை டாக்டரானபடியால் அவர் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் கொடுத்தும் உதவுவார்.

கிராமத்தில் வாழும் பெரியமனிதர்கள் நான்கு பேராக முனைந்து, அவர்களுக்கு தேவையான துணிமணிகள் வாங்கிக்கொடுத்து உதவுவார்கள். இப்படியாக அவர்களுக்கு உற்றார் உறவினர்கள் இருந்தும் கிராமத்து மனிதர்கள் அந்த தாயாரையும் பெண்ணையும்,அதிஜாக்கிரதையாக கவனித்துக்கொண்டு வந்தார்கள்.அவர்கள் எவர் சமைத்தும் சாப்பிட மாட்டார்கள். அப்படி ஒரு நியமத்துடன் வாழ்ந்து மறைந்தார்கள். பெரிய மாமியுடைய கணவர் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் எங்கள் அப்பா,பெரியப்பா மற்றும் பலருக்கும் அந்த வாத்தியார் படிப்பு சொல்லிக்கொடுத்தபடியால், யாவருக்கும் பெரிய மனதுடன் கூடிய ஒரு விசுவாசம் இருந்தது. மேலும் சார் வீட்டு மாமியென்றால் யாவருக்கும் தெரியும். அவர்களுக்கெதிராக கிராமத்து மனிதர்கள் தவறான வேலைகளை செய்ய நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். அவர்களை மரியாதையுடன் நடத்துவார்கள். அன்றைக்கெல்லாம் மனிதர்களுக்குள் அன்புடன் கலந்த ஒரு கண்ணியம்,கட்டுப்பாடு எல்லாம் இருந்தது. இன்றைக்கு வீட்டுக்கு வீடு அவரவர் மனம்போல் வாழ்ந்து வருவதுதான் பிடித்துள்ளதாக காண்பித்துக்கொண்டு திரிகிறார்கள்.

அந்த அம்மாவும் பெண்ணுமாக சுமார் அறுபது ஆண்டுகாலம் தன்னந்தனியாக வாழ்ந்து மறைந்தார்கள். மனிதமனம் வயதான பின்பு பழைய ஞாபகங்களை மறுபடி நினைவில் கொண்டு வந்து நினைக்கும்போது இப்படிக்கூட ஒரு காலம் இருந்திருக்குமா என நினைக்கவைக்கிறது. ஆனால் இன்றையதேதியில் வீட்டு ஆட்களையே மதிக்காமல் இருக்கிறார்கள் பிள்ளைகள்.அவரவர் நெஞ்சத்தில் ஒரு தயை, தாட்சண்யம் உள்ளதா இல்லையா என்பதே தெரிவதில்லை. அது ஒரு பொற்காலமாக தோன்றுகிறது. இன்றைய நாட்களை எகிறிக்குதிக்கும் காலமாகநினைக்க வைக்கிறது. மனிதர்கள் ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழும்போது
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொண்டும், அன்பினால் பிணைத்துக்கொண்டு வாழ முயற்ச்சிக்கிறோம். வாழ்ந்து காட்டவும் நினைக்கிறோம், என்பது உண்மையே.