நம்வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம்.சிலர் மனதில் நிற்கிறார்கள்,சிலர் ஞாபகத்தில் வருகிறார்கள். மற்றும் சிலருடன், பார்த்தால் பேசுவோம்,பின் மறந்தும் விடுகிறோம். அதன்பின் அவர்கள் ஞாபகம் கூட வருவதில்லை. ஆனால் நம்முடன் சிநேகம் வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் நம்மை அடிக்கடி வந்து பார்த்து, நல்வார்த்தைகளை பரிமாறிக்கொள்கிறார்கள்.ஆனால் அதற்காக அவர்கள் நம் நல்வாழ்விற்காவே யோசித்துபேசமாட்டார்கள்.
அவரவர்களுக்கு தலைக்குமேல் வேலைகள், பொறுப்புகள் உள்ளன. யாரும் எவருக்காகவும் காத்திருப்பதுமில்லை, உதவிக்கும் வரப்போவதில்லை. சும்மா ஒரு பொழுது போக்கிற்காக எதையாவது சொல்ல வேண்டுமென நினைத்தும் பேசுகிறார்கள். எவருக்கும் யார்பேரிலும் அக்கறையில்லை, அவரவர் வேலைகள் நல்ல விதமாக நடந்து முடியவேண்டுமென நினைத்தே செயல்படுகிறார்கள், மேலும் நமக்கும் நம்மை சேர்ந்தவர்களுக்கும்தான் பந்தமே தவிர மற்றவர்களுக்கு கூட்டத்துடன் கோவிந்தா போடுவது போலத்தான், உள்ளது.

சொந்தபந்தமெல்லாம் பொழுது போக்கிற்காக பேச மட்டும்தான் என நினைக்குமளவிற்கு காலத்தில் நிறைய வித்யாசம் வந்துவிட்டது. மேலும் அவரவர்களுக்கு அவரவர் தலைவலியே அதிகமாக உள்ளது. பிறரை இழுத்துப்போட்டுக்கொண்டு சிரமப்பட எவருக்கும் இஷ்டமில்லை, என்பது அவர்களின் நடவடிக்கைகளில் தெரிய வருகிறது. அந்தக்காலம் மலையேறிவிட்டது, அந்தக்கால ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள், அத்தை, மாமா பிள்ளைகள் யாரையும் நேரில் பார்த்தால் கூட ஏதோ சான்ஸாக தெரியவந்தால் உண்டு, இல்லையேல் யாரும் எவருக்கும் சொந்தமுமில்லை, பந்தமுமில்லை என்கிறமாதிரி ஒரு தோற்றம் காணப்படுகிறது.

முன்காலத்தில் பிள்ளைகளுக்கு கோடைவிடுமுறையின் போது லீவுக்காக மாமா வீட்டிற்கு, அத்தை வீட்டிற்கோ பிள்ளைகளை அனுப்பிவைப்பார்கள். அக்கா, தங்கை பிள்ளைகளும் ஒருவர் வீட்டிலிருந்து இன்னொருவர் வீட்டிற்கு பிள்ளைகளை அனுப்புவார்கள். பிள்ளைகளும் மற்றவர் வீட்டிற்கு போனால் எப்படியிருக்கவேண்டுமென்பதையும் கற்றும் கொள்வார்கள். இன்றைக்கு வீட்டுக்கு வீடு ஒருபிள்ளையை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எங்கு போனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ள தெரியாத நிலைமை உருவாகிக்கொண்டு வருகிறது.ஊரை விட்டு காலேஜ் படிப்பென்று போனால் ஹாஸ்டலில் இருந்து படித்தால், ஒரு சிநேகித்த்திற்கு பதிலாக நான்கு ஆட்களை தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் மற்றவர் வீட்டிற்கு போனால் எங்கு எப்படி இருப்போம் என்ற மலைப்பு ஏற்பட்டு ஹோட்டலிலேயே தங்கிகொண்டு, உறவினர் வீட்டிற்கு போய் தலையை காண்பித்து விட்டு வருகிறார்கள். அதுவும் இந்தக்கால்த்தில் வீட்டுக்கு வீடு ஒருபிள்ளை அல்லது இரண்டுபிள்ளைகளே இருக்கிறபடியால் எவருக்கும் வீட்டிற்கு விருந்தினர் வந்து தங்குவது போன்ற பழக்கங்களும் பிடிப்பதும் கிடையாது. பிள்ளைகள் தங்களுடைய சுதந்திரம் பறிபோய்விட்டதாக நினைத்து செயல்படுகிறார்கள். பொதுவாக கூட்டுக்குடும்பங்கள் கலைந்து வருகின்றன, ஒருவருக்கொருவர் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் பழக்கம் அழிந்து வருகிறது.