உயிருக்குயிரான சிநேகங்கள் இருந்தாலும், தனக்கென உறவு எவராவது இல்லையேல், மனது ஏங்கிக்கொண்டுதானிருக்கும். மனிதர்களுக்கு எது வேண்டுமோ, அந்த இலக்கை எட்டிப்பிடிக்கும் வரை மனது ஆடிக்கொண்டேதான் இருக்கும். எவரையும் குற்றம் குறைகள் கூறி காரியம் ஆகாது.சிநேகங்களைவிட ரத்தஉறவுகள் மேன்மையானது.

ஆங்கிலத்தில் கூறுவார்கள் நீரைவிட ரத்தத்திற்கு கனம் அதிகமென. அது உண்மைதான். நம்மை சுற்றி சிநேகிதம் நூறு இருந்தாலும், ரத்தபந்தம் ஐந்து இருந்தாலே போதும். சர்க்கரை என்பதை வாய்க்குள் போட்டால் தித்திக்கும். மிளகாய்பொடியை வாயில் போட்டால்தான் எரியும், இல்லை பார்த்தாலே எரியுமா?நமக்கே நமக்கென ஒரு உண்மையான சிநேகமிருந்தாலும் போதுமானது. ஊர் பூராவும்சிநேகம் வைத்துக்கொண்டு தவிக்கவேண்டிய அவசியமில்லை. நாம் கூப்பிட்டகுரலுக்கு ஏன் எனக்கேட்கவும், உண்மையாக நம் நலத்தை பேண, இரண்டு ஆட்கள் போதுமானது. சிநேகங்கள் ஊர்பூராவும் வைத்துக்கொண்டு வம்புகளில் மாட்டிக்கொண்டு தவிக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு சில மனிதர்கள் நம் விவரங்களை நம்மிடமிருந்தே கேட்டு பிறரிடம் பரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள்.

ஆனால் எல்லாவற்றையுமே பார்த்து, கவனித்து, சிநேகத்தை பொறுக்கியெடுத்து பழக முடியாது. வாழ்நாட்கள் முழுவதும் ஏதோ வரப்போவதாக நினைத்துக்கொண்டு, அவலை நினைத்து வெறும் உரலை இடித்துக்கொண்டிருந்தால் அவல் வருமா என்ன? வாழ்க்கையில் சிநேகங்கள் நம்மை கேட்டுக்கொண்டு வருவதில்லை.கிடைத்தவற்றில் நமக்கு எது கொஞ்சம் ஒத்துவருவது போலிருந்தாலும் வரும்போது நற்காரியங்கள் நடந்து விடுகின்றன. மக்களும் அதை வழக்கம்போல் எடுத்துக்கொண்டு பழகி வந்துவிடுவார்கள்.அவசியமில்லாத பேச்சுக்கள் ஆபத்தையே விளைவிக்கும்.

அவரவர் மனம்போல்சிநேகம் கிடைக்காது. நாம் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும்,அவர்க்ளும் நமக்காக விட்டுக்கொடுப்பார்கள். இப்படி முன்னால் கொடுத்து பின்னால் வாங்கிகொள்வது போலவும் இருக்கவேண்டும்.எவருக்குமே வாழ்க்கை ஒரேமாதிரி இருப்பதில்லை, அமறைவதில்லை. காலம் என்பது மாறியேதான் ஆகும். நாமும் அதற்கு தகுந்தாற்போல் நம்மை தயார் செய்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.நிறைய குடும்பங்களில் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்துவைப்பார்கள், மனமொத்து வாழ்கிறார்கள், திருப்தியுடன்வாழ்கிறார்களா என்பதெல்லாம் கவனிக்க மாட்டார்கள். பிள்ளைகள் பிறக்கவில்லையென்றால் மட்டும் அவர்கள் மனமொத்து வாழவில்லையோ என நினைத்து அவர்களிடம் பெரியவர்கள் பேச ஆரம்பிப்பார்கள்.உற்பத்தியில்லாது போனால் மட்டும் யோசனை செய்ய ஆரம்பிப்பார்கள்.

மற்றபடி துளிக்கூட அவர்களை பற்றி கவலை படமாட்டார்கள் முன் காலத்தில். இன்றைக்கு அப்படியில்லை. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நோட்டம் விட்டபடி இருந்து வருகிறார்கள்.மருமகளோ, மருமகனோ நம்வீட்டிற்கென்று வந்து விட்டால் நாமும் அக்கறையாக கவனிக்கவேண்டுமென்ற எண்ணங்கள் இரு பெற்றோர்களுக்கும் உதயமாகிவிட்டது.