முன்காலத்தில் வீட்டுக்கு வீடு குறைந்த பட்சம் ஆறுபிள்ளைகளாவது இருப்பார்கள். ஆனால் சில வீடுகளில் பத்து அல்லது பன்னிரெண்டு பிள்ளைகள் கூட இருந்திருக்கிறார்கள். அந்த நாளில் இது ஒரு அதிசயமான, ஆனால் உண்மையான வார்த்தைகள்தான். எவரும் உன்னிடம் எத்தனை பணம் சேர்த்துவைத்திருக்கிறாய் என கேட்கமாட்டார்கள். பிள்ளைகுட்டிகள் எத்தனையென்றுதான் கேட்பார்கள், என கூறுவார்கள்.

இன்றைக்கோ நாகரீகமான உலகத்தில் வாழ்வதால் தன்னைப்பற்றிய எந்த விபரங்களையும் அவசியமில்லாமல் யாருமே எவருக்கும் கொடுக்க மாட்டார்கள். நடு ரோடில் நம் காரோ, மோட்டார் சைக்கிள் கூட நின்று விட்டால்,நம்மால் எதுவும் செய்யமுடியாத நிலையில் நாம் நின்றுகொண்டிருந்தாலும் கூட,அதேரோடில் போய்க்கொண்டிருப்பவர்கள் நம்மை பார்த்தும் பார்க்காதது போல் போய்க்கொண்டிருப்பதுதான் நாகரீக மக்களின் பழக்கமாகி விட்டன. நாகரீகம் முற்றிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. இதே போல் நடு ரோடில் நம் கார் பிரேக்டௌன் ஆகி நின்றுவிட்டால் அதே ரோடில் போய்க்கொண்டிருப்பவர்கள் தன் வாகனத்தை நிறுத்தி உதவி தேவையா என மரியாதைக்கு கேட்டால் கூட அவசியமில்லை, நாங்களே சரி செய்துகொண்டுவிடலாம், நன்றிகள் பல எனக்கூறி உதவிக்கு வருபவர்களை கழட்டி விட்டு விடுகிறார்கள்.
இரண்டு நிமிடத்தில் எல்லாம் சரியாகி கிளம்பி விடலாமென்று கூறியும் விடுவார்கள். இதுதான் நாகரீகம் முற்றியுள்ளதற்கு அடையாளம். ஏனென்றால் எவருமே யாரையும் எதற்குமே நம்புவதற்கும் தயாராகவில்லை.

காலம் மாறியதுடன் மக்களின் மனங்களும் அதே போக்கில் மாறி வருகின்றன என்பது உண்மையே. அவரவர் வேலைகளை அவரவர் செய்து கொள்ளும் வரை தனியாக வாழவே நினைக்கிறார்கள், வாழ்ந்தும் வருகிறார்கள். இந்த பரிமாற்றங்களில் அடிபட்டு விடுவது வயதான பெரியவர்கள் மட்டுமே. பெரியவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்ந்து வருவது பிடித்துள்ளது.மேலும் அனாவசிய பேச்சு வார்த்தைகளை கேட்கவோ பேசவோ வேண்டாமல்லவா? ஆனால் பிறர் துணையில்லாது வேறு எங்காவது போய்வரவேண்டுமென்றால் ததிங்கிணத்தோம் போட வேண்டியுள்ளது. காலம் கெட்டுவிட்டது, மேலும் வயதானவர்களை முடித்து விடுவதும் மிகவும் சுலபமே. இப்படியாக எத்தனையோ இடைஞ்சல்களை நாம் சந்திக்க நேர்ந்தாலும், வேறு வழியில்லாமல் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது.தனக்கென இருப்பவர்கள் நமக்காகவே இருப்பார்கள் என்பதை நம்பிக்கொண்டிருப்போம், வேறு வழி தெரியாவிடில்.