விவாகம் என்பதற்கு உரிய லட்சணம் பிள்ளைகளை பெற்று வளர்த்து இந்த உலகத்தில் நம்மைப்பற்றி பேச ஆட்கள் வேண்டுமே, அதற்காக மட்டுமில்லை, வயதாகும் காலத்தில் பெற்றோரை கவனித்து மருந்து மாத்திரைகள் கொடுக்கவும் அவர்களிடம் கனிவாக பேசவும், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வாழும் நேரங்களில் நமக்காக, மனதுக்கினிய வாய்வார்த்தைகளை பேசவும் நாம்பெற்ற பிள்ளைகள் அவசியம் என்று மனிதமனங்கள் நினைக்கின்றன.ஆனால் இன்றைய காலநிலவரத்தில் மனிதர்களை பார்க்கும்போது அவரவர்கள் தங்களை பாதுகாப்பாக கவனித்துக்கொண்டிருக்க முடிந்தாலே போதும் என்ற நிலைமை வந்துள்ளது என்றே தோன்றுகிறது. ஆண், பெண் இருவருமே சம்பாதித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆதிகாலத்திலிருந்தே வீட்டு வேலைகளை செய்தேயறியாத ஆண்கள் திருமணம் முடிந்ததும் வீட்டுவேலையில் ஈடுபடுத்தினால் நான் ஏன் வீட்டு வேலை செய்யவேண்டும் என்கிற குதர்க்கமான எண்ணம் தோன்றுகிறது. இன்றைய நாட்களில் எத்தனை சம்பாதித்தாலும் பற்றாக்குறைகள் உள்ளது என்பதும் உண்மையே.ஒருவருக்கு இருவர், இருவருக்கு நால்வர் என்ற சம்பாத்தியத்திலும் துண்டு விழுவதும் சகஜமாக உள்ளது. பணம் என்பது வர, வர இன்னம் வேண்டுமென்ற தாகம் அதிகமாகிறது. சம்பாதித்து வரும் பெண்கள் மாத்திரம் அதே நிலையில்தான் இருக்கவேண்டும் என்ற ஆண்களின் மனோபாவம் மாறவில்லையோ எனதோன்றுகிறது. மனித மனம் மாறவேயில்லை. ஆண்களை பலசாலிகளாகவும், பெண்களை பலஹீனமானவர்களாகவும் காண்பித்த நம்புராணங்களை மாற்றி எழுதவேண்டிய காலம் வந்துவிட்டது.
பெண்மணிகள் இந்தக்காலத்தில் எந்தவேலைகளை எடுத்துக்கொண்டாலும் முடிக்காமல் விடுவதில்லை. அது முன்னேற்றத்தில் ஒரு அறிகுறியேதான் என்பதில் சந்தேகமேயில்லை. கம்ப்யூடரிலிருந்து, வாகனங்களை ஓட்டுவது , கிழிந்த துணிகளை ஒட்டுப்போட்டு தைத்து விலை மதிப்பே போடமுடியாது ஒரு பரிசு அளிப்பது, குடும்பத்தை எப்படி கலைக்காது ஓட்டுவது, நாட்டை நடத்துவது என்பதுவரை செய்து காட்டுகிறார்கள். ஆனால் ஆண்மைக்கு கொடுக்கும் மதிப்பு, மரியாதைகளை பெண்களுக்கு கொடுக்க யோசித்து பார்ப்பதை கண்டால் வெறுப்பு வந்துவிடுகிறது. ஆண்பிள்ளை பிறந்துவிட்டால் பெண் பிள்ளையும் தேவை என்றெண்ணமும் வந்துவிடுகிறது, பெண்பிள்ளை மட்டுமிருந்தாலும் ஆண்பிள்ளையும் தேவை என தோன்றுகிறது. ஆனால் எந்த பிள்ளையும் நமக்கு உதவியாக இல்லையெனில், பிள்ளைகளே வேண்டியதில்லை என யோசித்து முடிவுக்கு வருகிறோம். எல்லாம் காலங்கடந்த ஆலோசனைகள் ஆனதால் யோசித்து செயல் படவேண்டியதும் அவசியமாகிறது.
Leave A Comment