மனதில் வெறுமை தோன்ற ஆரம்பித்துஙிட்டால், மனம் உளுத்துப்போனாற் போல் கொஞ்சம்,கொஞ்சமாக அடங்க ஆரம்பித்து விடும். இளம் பருவத்தில் பிள்ளைகள் பேச்சுக்களை, பெரியவர்கள் காதுகொடுத்து கேட்டுக்கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கவேண்டும். ஒரு சில பிள்ளைகள் பெரியவர்கள் கூறுவதே சரியென்று நினைத்து வாயை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டு நடப்பார்கள். மற்றும் பலர் ஏன் நாம்இப்படி மாற்றி செய்தால் என்ன ஆகிவிடும் என நினைத்து அவர்கள் மனம் போன போக்கில் நடப்பார்கள். முதலில் கூறியவர்கள் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுபவர்களாக வளர்ந்திருப்பார்கள்,அடுத்தபடியாக வருபவர்கள் சுதந்திரமான எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். இருசாராருமே புத்திசாலிகளாகவே இருப்பார்கள், ஆனால் வெளிப்பார்வைக்கு வித்யாசமாக தெரிகிறார்கள். அவர்கள் யோசனை செய்வதில் குழப்பம் எதுவுமில்லை, அதை நடைமுறையில் கடைபிடிப்பதில்தான் வித்யாசம் வருகிறது. பிள்ளைகளை ஓரளவுக்கு சுதந்திரமான போக்கில் விட்டாலே நன்கு முன்னுக்கு வருவார்கள். அவர்களின் வெளிப்பார்வைகள் சரியான கோணத்தில் உள்ளதா, படிப்பில் ஓரளவுக்கு சரிவில்லாமல் போகிறதா, எதையுமே யோசித்து செயல்படுகிறார்களா என அவ்வப்போது கவனித்துக்கொண்டிருக்கவேண்டும். பள்ளியில் படிக்கும் அத்தனை பிள்ளைகளும் நூற்றுக்கு நூறு எண்கள் எடுத்துக்கொண்டு வரமுடியாது. பிள்ளைகள் படிப்பில் வாங்கும் மதிப்பெண்களை வைத்துக்கொண்டு அவர்களின் மன இயல்புகளையும், நோக்கங்களையும் பெற்றோர்கள் புரிந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்தவேண்டியது மிகவும் அவசியம்.

நான்கு இடங்களில் டியூஷன் போவதால் மூளை சிறப்பாக வேலை செய்யாது. எதை எடுத்துக்கொண்டு படிக்க நினைக்கிறார்களோ அதை படிக்கும்போதுதான் பிள்ளைகளுக்கும் பொறுப்பு கூடிவிடுகிறது. ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியான திறமை கண்டிப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு அதை எடுத்துக்கூறி, விளக்கமாக பேசி அவர்களை உற்சாகப்படுத்தவேண்டியது பெற்றோர்கள், கூடப்பிறந்தவர்கள், சிநேகிதர்களின் கடமையுமாகும். பிள்ளைகளைப்பற்றி அதிகமாக பிறமனிதர்களிடம் விமர்சிக்காமல் இருப்பதே நலம்பயக்கும். திறமையில்லாத பிள்ளைகள் கிடையாது என்பதை நம்பவேண்டும். நம்பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப்பேசி அவர்கள் மனதை உடைத்து விட்டால், தனக்குள்ளேயே மறுகி மாய்ந்து போவார்கள். பிள்ளைகள் மனம் உடைந்து விட்டால் மறுபடி ஒன்று சேர்ப்பது கடினமே. ஆகையால் பிள்ளைகளை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்பது மிகவும் அவசியமாகும்.