ஹிந்துக்கள் கொண்டாடும், தீபாவளியும், சங்கராந்தியும்  நம் தேசத்தில் உயர்வாக கொண்டாடப்படுகின்ற பண்டிகைகள். இரண்டும் முடிந்து விட்டன.  ஆனால் எந்த  மதத்தின் பண்டிகையும்  மனிதர்களின்  துக்கத்தை மாற்றும்   சக்தியில்லை. காலதேவனின் சக்திதான் துக்கத்தை மாற்ற முடியும். இதை புரிந்து கொண்டுதான் நம் பெரியோர்கள் நம்வீடுகளில் ஒருவருடம் துக்கத்தை அனுசரித்து விட்டு மறுவருட துவக்கத்திலிருந்து பண்டிகை பருவங்களையும் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். இழப்பு என்பதை எவராலும் ஈடு செய்து காட்டமுடியாது.

வட இந்தியாவில் வெயில் காலம் ஆரம்பிக்கும் நேரம் , ஹோலி என்றதொரு பண்டிகையை பிரசித்தமாக கொண்டாடுகிறார்கள். ஹோலியன்று காலை வெள்ளை பைஜாமா,குர்தாவை அணிந்துகொண்டு, ஆண்டவன் சந்நிதியில் வைத்திருக்கும் கலர்பவுடரை  வீட்டு பெரியவர்களின் முகத்தில் தடவி காலைத்தொட்டு,   ஆசிகளை பெற்றுக்கொண்டு  உறவினர்கள், சிநேகிதர்கள் வீடுகளுக்கும் சென்று பெரியவர்களுக்கு பாதங்களில் கலர் தடவி , சிறியவர்களுக்கு முகங்களில் கலர்பொடியை அப்பி, இனிப்பு சாப்பிட்டு, சிறு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு , தனக்கு தெரிந்தவர்களுடைய வீடுகளுக்கு சென்று, தின்பண்டங்கள் உண்டு, அறிந்தவர்கள்,தெரிந்தநண்பர்கள் முகங்களில் கலர்பவுடரை தடவி ஹோலி விளையாடுவது  ஒரு பழக்கமாகும்.

எதிரிகளை  கூட சிநேகிதர்கள் போல் பாவித்து, தவறுகளை மறந்து ஒற்றுமையாக  வாழ வேண்டுமென இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நன்னாளில் கலர் பவுடரை எவருக்கு வேண்டுமானாலும் தடவி, இனிப்பு பதார்த்தம் ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது  வட இந்தியாவில் கடைபிடிக்கும் விசேஷமான பண்டிகை. இந்த பண்டிகை எதிரி மனப்பான்மையை அறவே ஒழித்து விடும் என நம்புகிறார்கள். ஹோலியன்று யாவருமே , பெரியவர்கள், சிறியவர்கள், ஏழை, பணக்காரர் வித்யாசமில்லாமல் ஒருவருக்கொருவர் மீது கலர்பொடி தடவி, சிறியவர்களை ஆலிங்கனம் செய்தும், பெரியோர்களின் பாதத்தில் கலர்பொடி தூவி  பாதத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வது பழக்கம். வேற்றுமையை மறந்து ஒற்றுமை எண்ணத்தை உண்டாக்குகிறது என்பதால் இந்தபண்டிகை பிரசித்தமாக  நினைக்கப்படுகிறது.

வட நாட்டில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் மற்ற மாகாணத்திலிருந்து வட இந்தியாவில் வாழும் மக்களும் ஹோலி விளையாடி, ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப அவர்களும்  ஹோலி  பண்டிகையன்று,  வட இந்தியர்கள் போலவே ஹோலி விளையாடி மகிழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஹோலியன்று வீட்டிற்கு வருபவர்களுக்கு  குஜியா என்றதொரு , தமிழ்நாட்டு சோமாசி போன்றதொரு பணியாரம் செய்து கலர் பூசிக்கொண்டு வருபவர்களுக்கு தின்பதற்கு கொடுத்து மகிழ்கிறார்கள். இந்த பண்டிகை  தினத்தன்று எதிராளிகள் பகையாளியாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் முகத்தில் கலர்தடவி விட்டு ஆலிங்கனம் செய்துகொண்டு இனிப்பு பண்டங்களை பகிர்ந்து கொண்டு விரோத குணத்தை மறந்து   ஹோலி  விளையாடுவார்கள் என்பது ஒரு நல்ல  பழக்கமே .ஹோலிபண்டிகையினால் விரோத மனப்பான்மையை அகற்ற முடியும் என வட இந்தியர்கள் நம்புகிறார்கள். ஹோலி என்னும் பண்டிகை வட இந்தியாவில் ஒரு முக்யமான பண்டிகையும் கூட.