தாயார் எத்தனையோ கடினமான நேரங்களை பார்த்திருப்பாள். ஆனால்  எல்லா தாய்மார்களும்  தன்னுடைய சந்தானங்கள் சுகமாக வாழவேண்டுமென நினைத்து ஆவன செய்வதுடன், அவர்களுக்காகவே உழைத்தும்  உருகுவாள். ஆனால் அதைப்பற்றி என்றாவது ஒருநாள் தன்பிள்ளைகள் நினைத்துப்பார்ப்பார்கள்,  தன்கடினமான நேரத்தை போக்கி விடுவார்கள்,  என்ற நம்பிக்கையில்தான் காலத்தை ஓட்டப்பார்ப்பாள்.  ஆனால்  தகப்பனார் என்பவருக்கு பெருமை என்பது தன்னை எப்படியும் சேர்த்துக்கொண்டுவிடும் என்பதில் நம்பிக்கையுண்டு. தாயாருக்கு பெருமை தேவையில்லை. ரிசல்ட் வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும்.

காலங்கள் மாறிவருகின்றன, அதற்கேற்றவாறு காட்சிகளும், ஆட்ட பாட்டங்களும்,  நோக்கங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.  சிலநேரங்களில், மனித மனதுகளும்  மாறிக்கொண்டே வருகின்றன.  மனிதர்கள் யாவருக்கும் தான் நினைத்தது  தங்களுக்கு ஏற்றாற்போல் அமைந்து விடவேண்டும் என ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டே செயல்படுகிறார்கள். யாவருக்கும் வெற்றி கிடைத்து விடும் என கூற முடியாது.  வெற்றியென்பது மனதுக்கு மனது வேறுபட்டும் விடுகிறது. ஒரு சிலர் தங்கள்  மனதுக்கேற்றபடி செய்து தோல்வியடைந்தாலும், வருந்துவதில்லை. ஒரு சிலரோ தோல்வியை எப்போது யார்மீது போடலாமென காத்திருக்கிறார்கள்.

நம் பிள்ளைகள்கூட பரீட்சையில் தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டால்,  எனக்கு இந்த சப்ஜெக்ட் எடுத்துக்கொள்ள மனமில்லை என்றும், நான் வேறுகோச்சிங்கில்    போகவேண்டுமென்றும் கூறினேன் , ஆகையால்தான்   என் மதிப்பெண்கள் குறைந்து விட்டது என்றும் நம்மையே சாடுவார்கள்.  கோச்சிங் இல்லாமல் படிப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு படித்திருக்கலாமே என்று மட்டும் தோன்றாது. பிள்ளைகளுக்காக எதை செய்யவும் காத்திருக்கும் பெற்றோருக்கு வரப்போகும் நாட்களில்  கிடைக்கப்போகும்  வெகுமதி ஏராளம். பிள்ளைகளை  நாம் எத்தனை ஏற்றி விடப்பார்த்தாலும், அவர்களுக்கு மனதிருந்தால் மட்டுமே காது கொடுத்து கேட்டு ஏற முடிந்தால் ஏணியில் ஏறப்பார்ப்பார்கள்.. இல்லையேல் அவர்கள் மனம் போனபடியேதான் நடந்து கொள்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் எதையும் ஜீரணித்துக்கொள்ளும் சக்தியுள்ள மனோபலத்தை ஆண்டவன்  நமக்கு கொடுக்கவேண்டும்.