பிள்ளைகளுக்கு பள்ளிப்படிப்பின் ஆரம்பத்தை விட முடிவுதான் கடினமான நேரம். ஆரம்பிக்கும் நேரம் ஸ்கூல் கட்டணம் கட்டுவது , யூனிஃபார்ம் வாங்குவது, புதிய புத்தகங்கள், நோட்டுக்கள், பேனாக்கள், பென்ஸில்கள், கலர் பென்ஸில்கள் என வாங்குவதில் நேரம் செலவழிப்பார்கள். பிள்ளைகள் பள்ளிமாறி வரவேண்டியதாக இருந்தால், மிகவுமே சங்கடமான நேரம்தான். ஆனால் ஒரே பள்ளியில் படிக்க நேர்ந்துவிட்டால் மற்றகவலைகள் தேவையில்லை. பள்ளியை மாற்ற வேண்டிய அவசியமேற்பட்டால் பெற்றோருடன், பிள்ளைகளுக்கும் திண்டாட்டம் என்பதை அனுபவிக்கும்போதுதான் தெரியவரும். ஒரே பள்ளியில் படித்து முடித்து வெளியில் வருவதுபோல் ஒரு நிம்மதியான நிலைமையை அனுபவித்தால் மட்டுமே இந்த பிரச்னை புரியும். மனிதர்களாகிய நம் யாவருக்கும் ஓரளவு மட்டுமே சமாளிக்க முடியும். சில நேரங்களில், நம்மை சோதிப்பது போல் நிலைமை தடுமாற ஆரம்பித்து விடும்போது கடினமாகி விடுகிறது. அதுவும் பெற்றோர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற்றலாகும், உத்யோகமாக இருந்தால் பிள்ளைகளும் பெற்றோருடன், ததிங்கிணத்தோம் போட்டுத்தான் சமாளிக்கவேண்டி வரும்.
ஒரே ஊரில் , ஒரே பள்ளியில் படிப்பதற்கும், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றலாகும் உத்யோகமாக இருந்தால் பிள்ளைகள் பாடு பெரும்பாடுதான். புதிய சூழ்நிலை, புதிய இடம், புதிய மனிதர்கள் என பிள்ளைகள் காணும்போது மனது வெறுத்தேவிடும். புதிய சூழ்நிலைகளுக்கு ஒத்துப்போய்இருக்க வேண்டிய கதியைத்தவிர வேறு வழியில்லையென்றால் ஒத்துப்போய்த்தான் ஆகவேண்டும். மூன்று அல்லது ஆறு மாதங்களாவது எடுக்கும், வந்து சேர்ந்த இடத்தை மனதார ஏற்றுக்கொள்ள. அதுவும் அத்தனை சுலபமில்லை. பெரியவர்கள் பிரமோஷனில் ஊர் விட்டு மாறியிருந்தால் , புதிய சூழ்நிலைகளை சந்திக்க தங்களை தயார் செய்து கொண்டிருப்பார்கள். பெற்றோர்கள் வீட்டுசாமான்களை எப்படி பங்கிட்டு, பார்சல் செய்து அனுப்பபோகிறோம் என்கிற கவலையில் உழன்று கொண்டிருப்பார்கள். புதிய இடத்தில் நம் வசதிக்கேற்றாற் போல் இடம்கிடைத்து சாமான்களை பங்கிடு செய்தாக வேண்டுமே என்னும் கவலையிலும் ஆழ்ந்திருப்பார்கள். ஆனால் புது ஆபிஸில் தான் பிரமோஷனில் வந்துள்ளேன் என்ற தலைகனமும் சேர்ந்து கொண்டுவிடும் என்பதும் உண்மையே.
பிள்ளைகளின் வாழ்க்கையிலும் இதே போலவே ஒவ்வொருபடியிலும் வித, விதமான பிரச்சனைகளை எதிர்பார்த்துக்கொண்டும், சமாளித்தும் வாழ்வதில்தான் வாழ்வின் ரகசியம் பொதிந்து உள்ளது. பிள்ளகளுக்கும் அவரவர் கவலையில் ஆழ்ந்து எப்படி புது இடம் இருக்குமோ என்ற எண்ணங்களை , பரிமாறிக்கொண்டு, இருக்குமிடத்தில், நண்பர்கள், சிநேகிதங்களுக்கு ஞாபகத்திற்கு எதையாவது கொடுத்து மனங்கள் மாற்றிக்கொள்ளும் எண்ணத்தில், தனக்கு இந்தமாதிரி எவருடனும் தனிப்பட்ட ஆசை அபிலாஷைகள் கிடையாது என்பதை காண்பித்து கொள்ளும் முயற்ச்சிகளில் ஈடுபட்டு அடங்கி விடுவார்கள். புதிய இடம், புதிய அறிமுகமேயில்லாத சிநேகங்கள், வாழ்க்கையின் பழக்க வழக்கங்களுடன் வருவாயின் ஏற்றத்தாழ்வுகளும் இருந்து விட்டால் வேறு வினையே வேண்டாம்.
Leave A Comment