வளர்ந்து வரும்பிள்ளைகள் தங்கள் இஷ்டம் போலவே வளர நினைக்கிறார்கள்.  படிப்பதற்காக வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி வீட்டிற்கு  லீவில்திரும்பி  வந்தால் வீட்டின் சில கட்டுப்பாடுகள் பிடிப்பதில்லை. ஏனென்றால், ஹாஸ்டலில் வசித்து வரும்போது  டயத்தின் கட்டுப்பாடுகளைத்தவிர, மற்ற பிடுங்கல்கள் இருக்காது.  வீட்டிற்கு வந்தவுடன் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், கூடிய மட்டும் தன் துணிமணிகளை தானே தோய்த்து உலர்த்த அவசியமில்லையென்றாலும் , சில நேரங்களில் வீட்டை சுற்றிலும் வேலைகள், வீட்டிற்குள்ளும் வேலைகள், கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது போன்றவேலைகள் இருந்துகொண்டேதானிருக்கும். பிள்ளைகள்  வீட்டிற்கு லீவில் வரும்போதுதான் வீட்டை சுத்தம் செய்வது, தோட்டமிருந்தால் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதுபோன்ற வேலைகளை அவர்களிடமிருந்து செய்விப்பதில் பெற்றோருக்கும் ஒரு திருப்தி ஏற்படுகிறது .

வீட்டில்  தங்கியிராத காரணத்தினால் பிள்ளைகளுக்கும் வீட்டை,  சுத்தம் செய்வதிலும்  மனமகிழ்ச்சியேற்படும். தோட்டமிருந்தால் தோட்டத்தில் செடி கொடிகளுக்கு நீர் ஊற்றுவது போன்ற வேலைகளும் மனதிற்கு பிடித்தாற்போலிருக்கும். ஒரு வாரம், பத்துநாட்களாவுடன் இந்த வேலைகள் அலுத்துவிடும். வீட்டில் லீவில்தங்கினால்  அவர்களுடைய துணிமணிகள் துவைத்து காயவைத்து மடித்து அவரவர் அலமாரியில் கிடைத்து விடும். ஹாஸ்டலில் தனிமை என்பதே கிடையாது. யாராவது ஒருசிநேகம் இல்லாவிடில் மாற்றி, மாற்றி சிநேகங்கள் கிடைத்து பேச்சு வார்த்தையாட கிடைத்து விடுவார்கள். வளரும் பிள்ளைகளுக்கு  நல்ல சேன்ஞ் கிடைக்கும்.  லீவில் வந்துள்ள   பிள்ளைகளுக்கு என்ன சாப்பிடப்பிடிக்கும் எனக்கேட்டு, கேட்டுத்தான் அம்மாவும் சமையல் செய்து கொடுப்பார். அப்பாவைப்பற்றிக்கேட்வே வேண்டாம். பழங்கள்,  தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து தன்னுடைய  அபிமானத்தையும் காண்பிப்பார். இப்படியாக குறுகிய லீவில் வீட்டிற்கு வருவது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்  என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் வீட்டோடு ஒரு அண்ணன் வேலையில் இருந்து எங்கும் போகாமல் பெற்றோருடன் இருப்பவருக்கு ஆத்திரமாக வரும். வேறு வழியில்லாமல் சகோதர, சகோதரிகளுடன் அதிகமாக வார்த்தையாட வேண்டாமென அவன் நினைத்தாலும் மனதுக்குள் இருக்கின்ற குமைச்சலை எங்கேயாவது காண்பித்துத்தானே ஆகவேண்டும். தனக்கு வயிறு சரியாகவில்லை , இன்றிரவு சாப்பாடு வேண்டாமென ஆரம்பிப்பான். மேலும்  சகோதரிகளை எங்கேயாவது அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்றால், அன்றைக்கு அவனுக்கு எங்கேயோ அவசரமாக போகவேண்டுமென்பான். தான் மிகவும் பிஸியாக இருப்பதாக நடிப்பான்.  ஒவ்வொரு குடும்பத்திலும் இம்மாதிரியான ,வித, விதமான  வில்லங்கங்கள் வந்துகொண்டேயிருக்கும், என்பது உண்மையே. சகோதர, சகோதரிகள் ஒற்றுமையாக இருந்துவிட்டால், அவர்களை கண்டு மற்ற பிள்ளைகளும் மிகவும் கண்ணியமாகவும், நேர்மையாகவும் வளர்ந்து விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.