நம் வாழ்நாளில், ஏழ்மை வந்து விட்டாலும் , நம்மனதின் கம்பீரம் குறையாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். வறுமையும், சிறுமையும் நம் எண்ணத்தில் உருவானவைகள்தான். நாம் நம்மைப்பற்றி கம்பீரமாக நினைத்துக்கொண்டோமானால், அந்த கம்பீரம் நம்மை விட்டு பிரிந்து ஓடாது. நமக்கே நம்மை பற்றி குறைவாக நினைத்துக்கொண்டு விட்டோமானால் எவராலும் மாற்றமுடியாது. ஆகையால் நாம் நம்மிடமுள்ள நற்குணங்களை தெரிந்துகொள்வது விட, துர்குணங்களை தெரிந்து கொண்டு தவிர்க்கவேண்டியது மிகவும் அவசியம். மனிதமனம் மிகவும் பலம் வாய்ந்தது. மனிதமனம் எதையாவது சாதிக்க நினைத்து விட்டால் சாதித்து முடித்து விட பார்ப்போம். மனதிற்கு பலம்அதிகம் என நினைத்து மனதை உடைத்து பலத்தை அதிகப்படுத்திக்காட்டமுடியாது.
உதாரணமாக நாம் படித்து புரிந்து கொண்டுதான் பரீட்சை எழுதுகிறோம், ஆனால் ரிசல்ட்டில் வரப்போகும் மார்க்குகளை நம்மால் நிர்ணயம் செய்ய முடியாது. நம்மைப்பொறுத்தவரை , நாம் நமக்குத்தெரிந்தவைகளை விடைத்தாளில் எழுதிவிட்டோம். ஆனால் அதை பரிசீலிப்பவர், எத்தனை மதிப்பெண் கொடுக்கலாமென்று பரிசீலனை செய்த பின்னர் கொடுப்பதுதான் நமக்கு கிடைக்கும். அதை நிர்ணயிக்க வேண்டியது அவருடைய வேலை, நம்மால் எதுவுமே செய்யமுடியாது. ஆகையால் நம்மால் செய்யவே முடியாதவைகளை தலையில் போட்டுக்கொண்டு மனதை கலங்க வைத்துக்கொள்வதில் அர்த்தம் எதுவுமில்லை.
ஒரு சில சாதாரணமான, நடுத்தர குடும்பங்களில் நான் கவனித்திருக்கிறேன், பிள்ளைகள் கண்ணியமாகவும் கம்பீரமாகவும் வளர்ந்து வருவார்கள். சிம்பிளாகவும், அதே நேரத்தில் தன்னை எதிலும் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டு , மாட்டிக்கொண்டு தவிக்க மாட்டார்கள். தன்னுடைய பணபலத்தையோ, ஆசைகளையோ எந்நாளிலும் வெளியில் காண்பித்து அசடுவழிந்துகொண்டு நிற்கவும் மாட்டார்கள்.
நம்வாழ்க்கையில் நமக்கென்று ஆண்டவன் அளந்து வைத்திருப்பதே நமக்கு கிடைக்கும். நாம் தலைகீழாக நின்று தவம் செய்தாலும் நமக்கென்று ஆண்டவன் ஒதுக்காதவைகள் நமக்கு கிடைப்பதேயில்லை. அவசியமில்லாத ஆசைகளை வளர்த்துக்கொண்டு திண்டாடுவதில் அர்த்தமேயில்லை, என புரிந்து கொண்டு வாழ்வதில்தான் கம்பீரமுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை. மனித மனதிற்கு திருப்தி என்பது மிகவும் முக்யமான ஒருமனோபலம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மனதிருப்தியினால் மனம் முழுவதையும் மகிழ்ச்சி வியாபித்து கொள்கிறது. ஆகையால் ஒரு திருப்தி ஏற்படுகிறது. மனித வாழ்க்கையில் மனோபலமும், மனோதிருப்தியும்தான் மிகவும் முக்யமான சமாசாரமாக கருதப்படுகிறது. மனிதர்களுக்கு பணபலத்துடன், மன பலமும் இருந்தால்தான் வாழ்க்கை பரிபூரணத்துவம் அடைகிறது என்பதில் சந்தேகமில்லை. சில்லறை நம்மை விட்டு போய்விடலாம், மனோபலம் என்பது கிடைத்து விட்டால் நம்மால் எதையும் சாதித்துக்காட்ட முடியும், என நம்பி வாழ்ந்தோமானால் நம்மால் முடியாத வேலையே கிடையாது.
Leave A Comment