வீட்டில் பூனையை வளர்த்து வந்தோமானால் , பாலை ஜாக்கிரதையாக பார்த்து மூடிவைக்கவேண்டும். பால்என்றால் பூனைக்கு உயிரை விட அதிகமாக பிடிக்கும். ஆனால் தெனாலிராமன் கொதிக்கும்பாலை பூனைக்கு, கிண்ணத்தில் ஊற்றி குடிக்க வைத்ததிலிருந்து பூனை பாலை கண்டு விட்டால் ஓட ஆரம்பிக்கும், என கூறுவார்களே தவிர அது உண்மையில்லை, அது கதைதான். பூனைகளும் மனிதர்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்ததிலிருந்து, பூனைகளும் கொஞ்சம் சாமர்த்தியமாகவே நடந்துகொள்ள ஆரம்பித்து விட்டன. ஆனால் எப்படியும் பூனைகளுக்கு பால்என்றால் தன் உயிரை விட மேலாக பிடிக்கும் என்பதில் இன்று வரை சந்தேகமேயில்லை.
எங்கள் வீட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எங்கள் வீட்டில் இரவில் பிள்ளைகளுக்கு தினந்தோறும் பால் குடிக்கும் பழக்கமிருந்தது. அம்மா ஐந்து, ஆறு பிள்ளைகளுக்கு பாலைக் கொடுத்துவிட்டு பால் மீதமிருந்த கொஞ்ச பாலுடன் வெள்ளிசெம்பை அப்படியே வைத்துவிட்டார். பூனை வீட்டிற்குள் நுழைந்தது எவருக்கும் தெரியவில்லை.
பூனை அந்த செம்பின் வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டு , பால் இருந்த செம்பினுள் கஷ்டப்பட்டு தலையை செருகி விட்டுக்கொண்டு மீதமிருந்த பாலைக்குடித்து விட்டு தலையை வெளியில் எடுக்க முடியாமல் , வெள்ளிச்செம்புடன் லொட, லொடசத்தத்துடன், தலையை ஆட்டி உருட்டிக்கொண்டுஓடிக்கொண்டிருந்தது. அதன் தலையை எப்படி விடுவிப்பதென்று புரியாது நாங்கள், ஐந்து, ஆறு பிள்ளைகளும் பயந்து கொண்டு ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.
எங்கள் பெரிய அண்ணா சமயோசிதமாக பூனையை பெஞ்சை ஒரு பக்கமாக தூக்கிக்கொண்டு பூனையை பெஞ்சுக்கடியில் ஓடும்படி துரத்தி, துரத்தி டக்கென்று பென்ஞ்சை வைத்து விட்டார் .பென்ஞ்சுக்கு அடியில் போன பூனை வெளியில் வருவதற்கு முயன்றுபார்த்து தோல்வியடைந்து , களைத்துப்போய் பென்ஞ்சுக்கடியில் படுத்துக்கொண்டு விட்டது. வெகு நேரம் கழித்து, மறுபடியும் தலையில் மாட்டிக்கொண்டுள்ள வெள்ளிச்செம்புடன் தலையை உருட்டிக்கொண்டே போய் பின்பக்கத்தால் வெளியில் வர முயன்றதில், தலையில் மாட்டிக்கொண்டிருந்த செம்பு பென்ஞ்சுக்கடியில் விடுபட்டு போயிற்று. விடுதலையான பூனை தலை , கால் புரியாது எடுத்ததே ஒரே ஓட்டம். வெள்ளிச்செம்பு பிழைத்தது , ஆனால் ஒரே நசுங்கல்கள். பூனை வீடுகளில் சாக கூடாது என்றதொரு சாஸ்திரம் வேறுசொல்வார்கள். பெரியவர்களுக்கு அது வேறு ஒரேகவலை. இது நடந்து பல வருடங்கள் ஓடிவிட்ட போதிலும் எப்போது இந்த சம்பவத்தை நினைத்தாலும் மனது கலங்கும், அந்த பூனைக்கு எப்படி கதி கலங்கியிருக்குமென …..
Leave A Comment