பண்டைய காலத்தில், குடும்பத்தின் பணம், நகை  மற்றும்  சொத்து வெளிமனிதர்களுக்கு கிடைத்து விடக்கூடாது எனநினைத்து, உறவுகளுக்குள்ளேயே மணம் புரிந்துகொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அது  தவறு என புரிந்துகொண்டபின், உறவில்லாத அன்னிய குடும்பத்தாருடன் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு வெளி உலக வரன்களைத்தேடி மணம் புரிய வைத்தார்கள்.  அடுத்தபடியாக வெவ்வேறு சாதி மதமென்று பார்க்காமல் யாவரும் மணம் புரிந்துகொண்டு மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். தற்போது தனக்கு எவரை பிடித்துள்ளதோ அவர்களுடன் மணம் புரிந்துகொள்ளலாம் என தீர்மானித்து  கலப்பு திருமணங்கள் புரிந்துகொண்டு, வாழ்க்கையை   நல்லவிதமாகவும், சீராகவும், வாழ்ந்தும் வருகிறார்கள். காலம் முன்னேறுகிறது என்பதை விட மனிதமனம் தனக்கு வேண்டுமென்பதை, பிறர் சிபாரிசு இல்லாமல், தனக்குத்தானே ஏற்றுக்கொண்டு வாழ தீர்மானித்துக்கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை.   தேசத்தின் முன்னேற்றத்திற்கு  இதுவும்  ஒரு  அவசியமான மனோபாவம். நாம் யாவருமே சீரான வாழ்க்கை வாழ்வதற்கே ஆசைப்படுகிறோம். ஆனால் அது கிடைக்குமா என்றதொரு கேள்விக்குறிக்கு பதிலளிக்க எவராலும் முடியாது. நல்லவாழ்க்கை கிடைத்துவிட்டால் ஆண்டவனின் கட்டளையென்றும்,  இல்லையேல் நம்  கர்மவினையென்றும் நமக்கு நாமே சபித்துக்கொண்டு , பொறுத்துக்கொள்ளும் தன்மையை அதிகரித்துக்கொள்கிறோம், என்பதே உண்மை.

மனிதமனமும் தன்னுடைய தேவைகளை நினைத்தே மனிதர்களை உபயோகித்து கொள்கிறது. ஒரு சில நேரங்களில், எவராலும் மாற்றமுடியாத  அளவிற்கு வாழ்க்கை தடம் புரண்டு மாறிவிடுகிறது. வீட்டில் பெண்பிள்ளைகள் மட்டுமிருந்தால் ,  ஆண்பிள்ளைகள் இருப்பது அவசியம் என தோன்றுகிறது.   ஆணோ, பெண்ணோ உபயோகமாகவும், அனுகூலமாகவும் வாழ்ந்தால்தான் வாழ்க்கை  ஒரே தடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் . குடும்பம் என்பதே ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் உதவியாகவும்,  அனுகூலமாகவும் வாழும் நேரத்தில் குடும்பத்தில் அன்னியோன்யம் அதிகரித்து , பிடிப்பு ஏற்பட்டு பொறுப்புடன் நடத்த முடிகிறது. ஒற்றுமைக்கு ஈடுஇணையேகிடையாது என்பதை யாவரும் உணரவேண்டும்.

எந்ததனிப்பட்ட மனிதரும் எல்லா நாட்களையுமே தன்னந்தனியாக கடத்துவது கடினமே. மனித மனம் மாற்றத்தை விரும்பும் என்பதும் உண்மைதான்.     ‘தனிமரம் தோப்பாகாது’ பழமொழிக்கேற்றாற்போல் தனியான ஒரு மனிதன் வாழ்வது ஒரு வாழ்க்கையல்ல.  ஒரு சில          மிருகங்கள் கூட கூட்டத்தில் வாழ்வதையே விரும்புகின்றன.  குரூப்பில்  காணும் மகிழ்ச்சியே அலாதிதான். ஆகையால்தான் பெரியோர்கள்  எந்த ஒரு ஸ்பெஷல் நாளையும் பலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியத்தை நம்மில் உணர்த்தியுள்ளார்கள். அது பிறந்தநாளாக இருந்தாலும் சரி  அல்லது இறந்த சவத்தை அப்புறப்படுத்த வேண்டுமானாலும் சரி , மனித இனம் ஒன்று சேர்ந்து செய்யவேண்டுமென வழி வகுத்து காண்பித்துள்ளார்கள். கூட்டத்தில் மனிதர்களுக்கு தென்பு ஏற்படுகிறது என்பதும்    உண்மையே.