மனித வாழ்க்கையில் தனக்கு எதை தேர்ந்தெடுத்துக்கொண்டால் வெற்றி நடை போட்டு வாழலாம் என தெரியாதவர்களுக்கு, எதைகண்டாலுமே நம்முடையதுதான் என நினைத்து பெருமிதமடைவார்கள். காலம் எதற்காகவும் காத்திருக்கப்போவதில்லை என்பது தெரிந்தாலும், அவலை நினைத்து  வெறும்  உரலை இடிப்பது போல் என கூறுவது போல நடந்து கொள்வார்கள். பலருக்கும் உண்மை நிலை புரிவதில்லை. வாயில் வருபவைகளை பேசிவிடுவார்கள். தன்னால் முடிக்க முடியாதவைகளை பிறர் மீது குற்றங்களை போட்டு விடுவார்கள். மற்றபடி வேறெந்த தன்னுடைய தவறுகளையும் கண்டு கொள்ளமாட்டார்கள். மனித மனதிற்கு திருப்தியை வெளியிலிருந்து கொடுப்பது மிகவும் கடினமான வேலையே. தனக்கு என்ன வேண்டுமென்பதே பலருக்கும் புரிவதுமில்லை. ஏனெனில் யாவரும் அவரவர்  செய்துவரும் வேலைதான் சிறந்ததாக நினைத்து செயல்படுகிறார்கள். மனித மனம் புகழுக்குக்காக ஏங்குகிறது என கூறுவது உண்மையே. ஆனால் மனிதர்கள் மற்றவர்களை ஏமாற்றி,எதையும் செய்து விட முடியாது. கனவுகள் எவர் வேண்டுமானாலும் காணலாம், யாருடைய கனவு பூர்த்தி ஆகும் என நம்மால் நினைத்துப்பார்க்கமுடியாது. கனவே காணாமலும் பலர் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள். கனவு நனவாக வேண்டுமானால் நம்முடைய தீராத முயற்ச்சியும், கடின உழைப்பும் அவசியமே. மனிதர்கள் கனவு காண்பது அவசியமே.ஆனால் ஆண்டவனின் பரிபூரண ஆசிகளும் தேவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

எத்தனையோ மனிதர்கள் கனவு காண்பதையே தொழிலாக கொண்டு வாய்கிழிய பேசுவார்கள். நாம் உழைத்தால் மட்டுமே நமக்காக ஆண்டவன் வைத்திருப்பது கிடைக்கும், என்பதை மறந்துவிடக்கூடாது. எதையுமே கனவில் காண்பதெல்லாம் நமக்கு கிடைத்துவிடும் என நினைத்து அலட்சியம் செய்து விடக்கூடாது. பலர் தனக்கு எதுவும் கிடைத்து அனுபவிக்கும் முன்னரே எல்லாவித சுகங்களையும் அனுபவித்து விட்டது போல் பேசி கிழிப்பார்கள்.இப்படியாக பலவிதமான மனிதர்களுக்கு நடுவில் உயர கொடிகட்டிப்பறந்தாலும் தன்னுடைய பழைய நிலைமையை மறந்து தாண்டவமாடாமல் வாழ்ந்து வரவேண்டியது நம் சுபாவமாக இருக்கவேண்டும்.