வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும் நேரம் எவரும் குறைகள் கூறமாட்டார்கள். கொஞ்சம்ஏறுமாறாக நடக்க ஆரம்பித்து விட்டவுடன் அவரவர்க்கு தோன்றுகின்றவைகளை கோடிட்டுக்காட்டி குற்றங்களை பெரிதாக எடுத்துக்காட்டி கூற ஆரம்பித்து விடுவார்கள். எனக்கு அன்றே தெரியும், இப்படியெல்லாம் நடக்குமென, நான் கூறுவதை எவராவது காது கொடுத்து கேட்டால்தானே புரியும் என எவரையுமே குறிப்பிட்டுக்கூறாமல், குறைகளையும் குறிப்பிடாமல் கூறுவார்கள். கூட்டு குடும்பங்களில் கலவரம் ஏற்படாமலிருக்க, இந்த மாதிரி பேசுவது வழக்கமே. நாம் எங்கேயாவது டிக்கட் முன்னுக்கு முன்னதாக வாங்கிக்கொண்டு நாட்டிய கச்சேரிக்குப் போனால் பலரும் அவரவர்அபிப்ராயங்களை தவறாமல் கூறுவார்கள். எல்லாம் சரியாக நடந்து விட்டால் பெருமைகளை எடுத்துக்கொள்ள முன் வந்துவிடுவார்கள். ஆடத்தெரியாத நாட்டியக்காரி நாட்டியமாடிய மேடை சரியாக இல்லை என்பாள். கூட போனவர்கள் ஆமாம், நானும் நினைத்தேன் மேடை சரியாகவேயில்லை என்பார்கள், சரிந்தாற் போல் இருந்தது என்பார்கள். நாட்டியம் பார்க்கவந்தவர்கள், நாட்டியக்காரிக்கு நாட்டியம் தெரியவில்லை என்றும் கூறுவார்கள். ஆகையால் எவரும் தன் தவறுக்கு ஜவாப்தாரி நான்தான் என ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். பொறுப்பை தட்டிக்கழிக்கவே பார்ப்பார்கள். உலக நியதி இதுதான்.
இதனால் நம்மில் பலர் பொறுப்பை எடுத்துக்கொண்டோமானால் எல்லாமே தன்தலையில் விழுந்து விடுமென நினைத்து நழுவிப்போகவே பார்ப்போம். எல்லாவித சமாசாரங்களையும் அறிந்தவர்கள் வாயைமூடி கொண்டு நடப்புக்களை கவனித்தவண்ணம், ஆனால் கவனிக்காதது போல் அமைதியாக இருந்து வருவார்கள்.
ஆகையால்எந்தவிதமானவைகளாக இருந்தாலும் ஒரு சிலர் தன்னை நன்றாக கவனித்துக்கொண்டு, மற்றவர்களின் கடின நேரங்களை கண்டும், காணாத மாதிரி, பட்டும் படாமலும் வாழ்ந்து வருவார்கள். அவர்களால் எவருக்கும் தொந்திரவு இல்லை. பிறருடைய கவலைகளைப்பற்றி கண்டுகொள்ளவும் மாட்டார்கள். அவர்களுக்கு அவரவர் வேலைகள் மட்டுமே பிரதானமாக இருக்கும். முதிர்ந்த மனதிற்கும், முதிராத மனதிற்கும் நிறைய வித்யாசமுள்ளது என்றாலும் தட்டிக்கழிக்க வேண்டி வந்தாலும் செய்துவிடமுடியும். வாழ்க்கையை வெளியிலிருந்து பார்ப்பதற்கும், உண்மையாக வாழ்வதற்கும் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்யாசமிருக்கும்.
Leave A Comment