நிறைய மனிதர்களுக்கு தன் உடல் பருமனாகி வருகிறது என்றே தெரியாமலிருக்கும். எல்லோருடைய வீட்டிலும் வெயிட் எடுக்கும் மெஷின் இருக்காது. கால்களை குடைகிறது, இரவு தூக்கமில்லை , பசியேகிடையாது என்றெல்லாம் கூறிக்கொண்டிருப்பார்கள். தனக்கு வேறு ஏதோ மேஜர் வியாதி வந்து விட்டதைப்போல் கூறுவார்கள். நாட்கள் நகர,நகர தொந்தி,தொப்பை ஒட்டு மொத்தமாக வளரும் நேரத்தில்தான் புரியவரும்உடல்கனமாகிறது. ஆனால் உடல் கனம் அதிகமாகி வரும்போது பர்ஸ் இளைத்துவிட ஆரம்பிக்கும். டாக்டரிடம் போயாகவேண்டிய கட்டாயம் ஏற்படும்போதுதான் புரிய ஆரம்பிக்கும். உடல்நலமாக இருக்கவேண்டுமானால், நமக்குள்ளே போகும் விஷயங்களை குறைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சாப்பாட்டின் கவனக்குறைவுதான் உடல் பருமனுக்கு காரணம். பசிக்கும்போது ஒரு அளவுடன் சாப்பிடுவது என்பதை பழக்கத்தில் கொண்டுவரவேண்டும். நமக்கு முக்கால் வயிறு நிரம்பியவுடன் தண்ணீர் குடிக்க வயிற்றில் இடம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என்பதை மறக்கக்கூடாது. வட இந்தியர்கள் சப்பாத்தி சாப்பிடுவதால் அவர்களுக்கு எத்தனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணிக்கை தெரியும்.

ஆனால் தென்னிந்தியர்களுக்கு அரிசி சோறு உண்ணுவதில் அளவு தெரிவதில்லை. மேலும் கறிகாய்களும் தாராளமாக சாப்பிடலாம். வட இந்தியாவிலும் பருமனான ஆட்களை காண்கிறோம். வெண்ணை, நெய், எண்ணையில் பொரித்தெடுத்த பூரி உருளைக்கிழங்கு, பக்கோடாக்களை வெளுத்துக்கட்டினாலும் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது. நம் வயிற்றுக்குள் செல்லும் ஆகாராதிகளை ஜீரணிக்க அதற்குத்தக்க வேலகளை செய்யவேண்டும். இல்லாவிடில் உடம்பு ஊதிவிடுகிறது என்பது உண்மையே.ஒரு சாக்குப்பையில் எத்தனை கொள்ளுமோ அவ்வளவுதானே அடைக்க முடியும்? அதற்கும் மேலே, மேலே போட்டு கட்டினோமானால் சாக்குப்பை கிழிந்துதானே போகும்.

நம் உடல் எத்தனை எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவுதான் உண்ணவேண்டியது மிகவும் அவசியம். ஆகாரம் உள்ளேபோவதற்கு தகுந்தாற் போல் சரீரம் வேலை செய்து சாப்பிட்டவற்றை ஜீரணம் செய்யவேண்டும்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகிவிடும் என்பது உண்மையான வார்த்தைகள்தான். பழையகாலத்தில் நம் பெரியவர்கள் நிறைய விரதங்களை கடைபிடிப்பார்கள். வாரம் ஒருமுறையாவது லங்கணம் போட வேண்டுமெனக்கூறுவார்கள். வீட்டில் செய்வதை விட வெளியில் வாங்கி உண்ணுவது அதிகமாகிவிட்டது, இன்றைய நாட்களில். வீட்டுக்கு வீடு உடற்பயிச்சி மெஷின்களை வாங்கிப்போட்டு உடல் கனத்தை குறைக்கப்பார்க்கிறார்கள், ஒட்டிக்கொண்ட கொழுப்பைக்கரைக்க.

முன்காலத்தில் என்றோ விசேஷநாட்களில்தான் பாயசம், பாதாம்கீர் என செய்து சாப்பிடுவார்கள். இன்றோ சிநேகித கும்பலில் எவருக்கு பிறந்தநாளானாலும் பார்ட்டி கொடுக்கிறார்கள், பார்ட்டியில் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் இருக்க முடியாது. தீபாவளிக்கு தின்பண்டங்கள் செய்தால் கணக்காக கொடுப்பார்கள், தின்பதற்கு. இன்றோ தினமே தீபாவளி போல் வித, விதமான தின்பண்டங்கள் தின்பது பழக்கத்தில் உள்ளது. சரீர கனத்தால் நல்லவேலைகள் கூட கைகளை விட்டு நழுவி விடுகின்றன. நம் ஆயுள் நாட்களும் குறைகின்றன என்பதை தெரிந்து கொள்ளாமலே, கிடைத்தவைகளை குப்பையில் போகவேண்டியவைகளை நம் வயிற்றில் போட்டுக்கொண்டு தவிக்கிறோம்.