ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்க்கு என்ன தோன்றுகிறதோ, அதையேதான் செய்து முடிக்க ஆவலாக உள்ளது. ஆனால் நம்எண்ணங்கள் ஓடுவது போல் எல்லாமே நடப்பதில்லை. ஆனால் நம் விருப்பத்திற்கு எதிராக இருந்தால் மனதார ஒத்துக்கொள்ளமுடிவதில்லை. மனதை நம் வசத்தில் வைத்திருப்பது நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லை என்பது புரிவதற்கு அனுபவங்கள் அவசியம் தேவை. ஆகவே நம் பெரியவர்கள் எதையுமே சாத்திர சம்பிரதாயங்கள் படியேதான் செய்ய வேண்டும் என கூறுவதை நம் இளவயசு சிங்கங்களுக்கு புரிபடுவதில்லை. ஆகையால் எங்கு சென்றாலும் தாங்கள் நினைத்தபடியேதான் எதுவும் நடக்கவேண்டுமென நினைத்து ஏமாற்றமடைந்து மனமொடிந்து விடுவது சகஜமாகிவிட்டது. எந்த உறவினருடனும் ஒத்து வாழ பிடிப்பதில்லை. இந்நாட்களில் அநேகமாக வீட்டுக்கு வீடு அதிக பட்சமாக இரு பிள்ளைகள் இருந்தாலே போதுமென்றாகி விட்டது. பெற்றவர்களுக்கும் சங்கடமான நிலைமைதான் , பிள்ளைகளுக்கும் அதே போலவே உள்ளபடியால் அவரவர்க்கு எந்த சம்பிரதாயம் ஒத்து வருகின்றதோ அதையே கடைபிடிக்க ஆரம்பித்தும் விடுகிறார்கள். ஒருசில இக்கட்டான நேரத்தில் நாம் எதைகடைபிடிக்கிறோம் என மனதும் வெறுத்துப்போய் எப்படியோ வாழ்ந்தால் சரி என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இன்றைய நாட்களில் அவரவர் பெற்றபிள்ளைகளுக்கே வேறுஎவரையாவது உதாரணம் காண்பித்து பேசினால் , பிள்ளைகளுக்கு ஒத்துவருவதில்லை. அந்த புராணநாட்களில் பெற்றோர்களின் புத்திமதிகளை கேட்டு நடந்தால் மட்டுமே நல்வாழ்க்கையை அடைய முடியும் என்ற நம்பிக்கை மகத்தானதாக இருக்கும். சதா சர்வகாலமும், நீயும் என் அண்ணாபிள்ளைமாதிரியே கலெக்டர் , டாக்டருக்கு படிக்கவேண்டு மென வற்புறுத்துவது எல்லாம் இன்று செல்லுபடியாவதில்லை . காலங்கள் மாறிவருகின்ற நேரத்திலும் காட்சிகளும் மாறிவிடுகின்றன. பழம் பெருச்சாளிகளுக்கு படித்து முடித்து வேலையில் சேர்ந்தது போலவே கடைபிடிக்கவேண்டுமென வற்புறுத்துவதில்லை. மனம்போல் எந்த படிப்பையும் தேரந்தெடுக்க சம்மதிக்கிறார்கள். முற்காலத்தில் பெற்றோர், சுற்றம், அக்கம்பக்கத்தவர்கள் படிப்பைவிட தன் பிள்ளைகள் நன்கு படித்து கடைத்தேறிவிடவேண்டுமென்பதிலேயே குறியாக இருப்பார்கள். இன்றைக்கோ பிள்ளைகள் தேர்ந்தெடுப்பதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவர்கள் எதைதேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அதையே ஆமோதித்து விடுகிறார்கள். பிள்ளைகளே தங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்க முடிவெடுப்பதில் பெற்றோரின் மனோபலமும் அதிகரித்து விட்டது, அதாவது பொறுப்பு குறைந்துவிட்டது எனவும் கூறலாம். ஒருகாலத்தில் பிள்ளை என்ஜினியர், டாக்டர் என்றால் கல்யாண மார்க்கெட்டில் தன் பிள்ளைகளுக்கு மவுசு அதிகமிருக்குமென்ற கர்வத்தில் பக்கத்தில் வருபவர்களை சாமர்த்தியமாக ஓரம்கட்டி ஒதுக்குவார்கள். இன்றைக்கோ பெண்புலிகளை கண்டு ஒதுங்கியே நிற்கிறார்கள். வரப்போகும் நாட்களில் இந்த காட்சிகள் வளர்ந்து கொண்டே போகுமென்பதில் சந்தேகமில்லை.
Leave A Comment