எங்கள் பாட்டியம்மா தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள பட்டுக்கோட்டை அருகில்இருக்கும் மன்னங்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். அவர்கள் அந்த நாட்களில் எல்லா சௌகர்யங்களுடனும் வளர்ந்து, தங்களுக்கென்றே ஒரு வகையான பழக்கவழக்கங்களை  கடைபிடித்து வாழ்ந்தவர்கள். அந்தக்காலங்களில் மிராசுதார் என்றாலே பெரிய புள்ளியாகவே இருந்திருப்பார்கள் போலும். அவர்களுக்கு படிப்புகற்றுக்கொடுக்க  ஆங்கிலோ இந்திய  டீச்சர்கள் வீட்டிற்கு வந்துகற்றுக்கொடுப்பார்களாம். இப்படியாக ஒருசிலர் வளர்ந்திருக்கிறார்கள் . எப்போதுமே ஆண்பிள்ளைகளை படிப்பிற்காக எங்குவேண்டுமானாலும் அனுப்புவார்கள், ஆனால் பெண்குட்டிகளுக்கு கற்றுக்கொடுக்க வீட்டிற்கு வருவார்களாம். எங்கள்பாட்டியம்மாவும் அவருடைய ஐந்து சகோதரிகளும் மகா புத்திசாலிகள், அவர்களுக்கு சகோதரர்கள்  இல்லை என்ற குறையை தீர்த்துக் கொள்ள,  பெரிய சகோதரியின் இரு பிள்ளைகளிருந்து ஒருவரை சுவீகாரமாக எடுத்துக்கொண்டதை உயர்வாக எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

அந்த சகோதர்ர்  தனக்கென்றிருப்பவர்களை நன்றாக கவனித்து  உதவிகளை செய்தும், கடைசி நாட்கள் மட்டும் சகோதரனுக்குள்ள   கடமைகளையும் பின்பற்றி வாழ்ந்ததைப்பற்றி எங்கள் பாட்டியம்மா பெருமையாக பேசிக்கொண்டிருந்ததின் மகத்துவம்   நமக்கு வயதானபின்னரே  புரியவருகிறது. வாழ்க்கையில் எதற்குமுக்யத்துவம் கொடுத்து  வாழவேண்டும் என்பதற்கு ஒரு நியதி அவசியம் தேவை என்பது பலருக்கும்  இளம் வயதில் புரிவதில்லை.  எங்கள் சிறியவயதில் நாங்கள் யாவரும் அவர்களை பார்த்திருக்கிறோம், அவர்கள் செய்த  உதவிகளையும் அனுபவித்திருக்கிறோம். ஆனாலும் அவர்களுடைய மனதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நிறைய பணம் படைத்தவர்கள், ஆனதால் அவர்கள் உதவி செய்யமுன் வருவதாக  தோன்றியது.   ஆனால் அந்தநாட்களை இன்று திரும்ப நினைத்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட நல்ல மனதுடன் அவர்கள் எங்களுக்காக செய்துவந்த உதவிகளை நினைத்தால் மனம் நிரம்பி விடுகிறது. நாம் யாவருமே நம்மால் முடிந்தளவிற்கு உதவிகள் செய்ய மனம் வரவேண்டும் என்றும் எல்லாம் வல்ல அந்த இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன்

காலம் கடந்த பின்னர் தெரிய ஆரம்பிப்பதில் எந்தவிதமான உபயோகமுமில்லை. ஆனால் எதைப்பற்றியும் அறிந்து கொள்ள சான்ஸ் கிடைக்கும் நேரத்தை நழுவ விடக்கூடாது, என்பதுமட்டும் புரிகிறது. எதுவுமே  காலம் கடந்துவிட்டால் அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமலும் போய்விடுகிறது.

அந்தக்காலத்தில்  பெண்பிள்ளைகளை பள்ளிக்குஅனுப்பி படிக்கவைப்பது பழக்கம் கிடையாதாம் . ஆனால் பெண்பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டுமென தோன்றியதே ஒரு அதிர்ஷ்டம்தான். பணக்கார்ர்களாக இருந்தால் ஒருசட்டம், ஏழைகளாக பிறந்து விட்டோமானால்வேறுமாதிரிதான்.