ஒரு சில குடும்பங்களில் அவரவர் புத்திரன், புத்திரிகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கும்  நேரத்தில் நிறைய சந்தேகங்களும், கவலைகளும் ஏற்படுவது இயற்கையே. ஆனால் இதே  வேலையை பிறர் செய்துவிட்டால், அதிசயமாக இவர்கள் மட்டுமே, பெண்ணுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்வது போல ஒரு தோற்றத்தை உண்டாக்கி விடுகிறார்கள். என் நாத்தனாரின் மச்சினர் பேத்திக்கு பெண்பார்க்க வந்தார்கள் என பேசினார்கள், ஆனால் அதைப்பற்றி வேறு எந்தவித படாடோபமும் இல்லாது காதும்,காதும் வைத்தாற்போல்  கல்யாணம் முடிந்து விட்டது என்பார்கள்.

அந்தக்கல்யாணத்தில் ஒரு சிறிய தகராறு வந்துவிட்டாலும், எனக்கு அப்போதே  தெரியும் வேறு என்னவோ ரகசியம் உள்ளது இதில், இல்லாவிடில்  இத்தனை கட்டுப்பாடுகள் எதற்கு ,இப்படி, அப்படி என்றெல்லாம் அவரவர்களால் எத்தனை துப்பறிய முடியுமோ அத்தனை பேச்சு அடிபடும். ஊர், உலகத்தாரின் வாயைமூடவே முடியாது எனபதை அவர்கள் மட்டுமே கண் கூடாக கண்டது போல் பேசுவார்கள்.  அவர்கள் பேசுவதிலும்,  ஒரு சில விவரங்களில் உண்மையற்றவைகளும், உண்மை போலவே தெரியும். கவலைகள் என்பது மாறுவேடம் போடுவதைப்போலவேதான் .   சில உண்மைகள் பொய்யாகவே தெரியும் காதால் கேட்பதற்கு.    விபரங்கள் பூராவும் தெரியவந்தால்தான் பாகுபாடு புலப்படும் என்பதே உண்மை. ஆனால் அதை தெரியப்படுத்திக்கொள்ள இரு சாராருக்குமே தோன்றவேண்டும். மனதார எதையுமே ஏற்றுக்கொள்ளவும் முன் வரவேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள தாராளமான, கல்மிஷமில்லாத மனம் இருக்கவேண்டும்.  மனிதர்கள் அவரவர்களுக்கு  எப்படி மனதில் உதிக்கின்றதோ அதைப்பற்றியெல்லாம் பேசி விடுவார்கள்.  பிறகு வருத்தப்படுவார்கள்.