பண்டைய நாட்களில் பெண் பிறந்துவிட்டால்,அவளை கல்யாணம் என்ற வலையில் சிக்க வைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாம். அது அசடாகவோ பைத்தியமாகவோ இருந்தாலும் கன்னி கழியவேண்டும், என்று நினைப்பார்களாம். பையனாக பிறந்தால் அப்படி எதுவும் கிடையாது. அதுவும் கிராமங்களில் கேட்கவே வேண்டாம். வம்பு பேசியும் உயிரை வாங்கி விடுவார்கள்.
அந்தக்காலத்தில் எங்கள் குடும்பத்தில் ஒருபெண்ணை, கல்யாணமே செய்து கொள்ளமாட்டேன் என்ற ஒருபையனுடன் கல்யாணத்தை செய்து வைத்து விட்டார்கள். அந்த காலத்தில் சிறிய வயதிலேயே மணமுடிப்பு நடக்கும் என்பது நம் யாவருக்குமே தெரிந்த விஷயம்தான். பையன் டவுனில் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தானாம். இருதரப்பு பெற்றோரும் ஒருவருக்கொருவர் பிடித்து சம்மதமளித்து கல்யாணம் நடந்தாகி விட்டது.
மாப்பிள்ளை படிப்பை தொடர திரும்பி போய்விட்டான், டவுனுக்கு. மாப்பிள்ளை லீவில் வரும் சமயங்களில் எப்போதாவது ஓரிரு முறை புருஷன் வீட்டிற்கு போயிருப்பாள், போலிருக்கிறது. பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்து திரும்ப வந்து விடுவாளாம். அதுவும் பிள்ளை வீட்டார் அழைத்தால் மட்டுமே இவளை அனுப்புவார்களாம். கடைசி வருடம் இவளை கூப்பிடவேயில்லையாம். பிள்ளையே மறுத்திருப்பானோ என்னவோ. இந்த பெண்மணிக்கும் தன் கணவர் என தனியானதொரு அன்பும் இல்லாமலும் இருந்திருக்கலாம். பிறந்த வீட்டு மனிதர்களுடனேயே தங்கியிருந்ததால் புகுந்த வீட்டாரிடம் சம்பந்தமே இல்லாமலும் போய்விட்டிருக்கலாம். அண்ணன், தம்பிகளுக்கு அவரவர் குடும்பம் என்று ஆன பின் யார்,யாரை கவனிக்க முடியும்? காலத்திற்கேற்ப ,பெற்றவர்கள் காலமானதும் அண்ணன் தம்பி குடும்பத்துடன் ஒட்டமுடியாமலும்,ஒட்டிக்கொண்டுதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தினாலும் அவர்களுடனேயே வாழ்ந்து வந்திருக்கிறாள்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, தன் அக்காவின் பேத்திக்கு பிள்ளைப்பேறு சமயம் அக்கா இவளை ஒத்தாசைக்கு அழைத்ததின் காரணத்தால் இவளும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து அக்கா வீட்டிற்கு கிளம்பி போயிருக்கிறாள்.
பிள்ளைப்பேறு நல்லபடியாக முடிந்து இவள் தன் ஊருக்கு திரும்புமுன் அவர்கள் வீட்டில் ஒரு பெரியவரை உணவளிக்க அழைத்திருந்தார்களாம். அவளிடம் அந்த செய்தியை கூறியதும் இவளுக்கு மனதுக்கு மகிழ்ச்சிக்கு அளவில்லாது இருந்ததாம்.
மறுநாள் அதிகாலையிலிருந்து வரப்போகும் பெரியவருக்கு தானே சமையல் செய்து, பரிமாறி, உணவளிப்பேன் என முடிவு எடுத்திருக்கிறாள். சந்தோஷமாக ஓடியாடி வித,விதமாக உணவுகளை தயார் செய்திருக்கிறாள்.
அந்த பெரியவர் காவி உடை அணிந்த சன்யாசியாம்.இவளுக்கு பரம சந்தோஷமாகி ஒடியாடி சாப்பாடுகளை பரிமாறி சாப்பிடும் வித்த்தைபார்த்து பூரித்துப்போனாளாம். அவர் தன்னிடத்திற்கு கிளம்புமுன் யாவரும் அவருக்கு நமஸ்கரித்து ஆசிகள் பெற்றுக்கொண்டார்களாம். இவளும் தானும் நமஸ்கரித்து எழுந்தவுடன் அவளுக்குத்தெரிந்து விட்டது, இந்த சாமியார்தான் தன் கணவன் என்று, புரிந்து கொண்டவுடன் மயக்கமடைந்து விட்டாள். அன்றிலிருந்து சமையல் செய்யவும் மாட்டாள். எந்த விருந்தினர் வந்தாலும் வெளியிலேயே வரவும் மாட்டாள்.
வாழ்க்கையின்ஓட்டம் எந்த பக்கம், எப்படி திரும்பும் என்பதை ஆண்டவன்தான் நிர்ணயிக்கிறான்.
Leave A Comment