வெளிநாட்டில் வாழ்ந்தால் எல்லாமே நல்லதாக நடக்குமென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். பகவான் எங்குமிருப்பது போல திருடர்களும் வெள்ளையாகவும், கருப்பாகவும், சிடுமூஞ்சியாகவும், சந்தோஷமாக உதவி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள், என்பதால் நாம்தான் எங்கிருந்தாலும் அதி கவனத்துடன் இருக்கவேண்டும்.
வெளிநாட்டில் வாழ்ந்துவரும் என்பெண் தன் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு ஸ்டோருக்கு அழைத்துக்கொண்டு போயிருந்த சமயம் ஒரேஒரு சாமான்தான் வாங்கப்போவதால் உடனே வந்துவிடுவேன், நீங்கள் மூவரும் காருக்குள் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருங்கள் எனக்கூறி ஸ்டோருக்குள் போய்விட்டாளாம். அன்றைக்கென்று சோதனையாக அவளுக்கு தலைசுற்றல் வந்து விழுந்து விட்டாளாம்.
ஸ்டோரில் வேலை செய்தவர்கள் அவளை ஆசுவாசப்படுத்தி, உட்கார்த்தி வைத்து ஆவன செய்து கொண்டிருக்கும்போது ,அவளுக்கு தன் பிள்ளைகளை காரில் உட்கார்த்தி விட்டு வந்தது நினைவில் வந்ததாம். உடனடியாக கடையில்வேலை செய்பவரிடம் விபரத்தை கூறி அழைத்து பிள்ளைகளை அழைத்துவர கூறினாளாம். அந்த மனிதர் போய் கார் கதவின் கண்ணாடியை தட்டியவுடன் பெரிய பிள்ளை, ஆறுவயது இருக்கும், அவன் கண்ணாடியை லேசாக தாழ்த்தி, விஷயத்தை கேட்டு எங்களுக்கும் அம்மாவிற்கும் ஒரு ரகசிய வார்த்தை உள்ளது. அதை கேட்டுவந்து கூறினால்தான், கார் கதவை திறப்பேன் எனக்கூறி உடனே காரின் கண்ணாடியை மேலே ஏற்றி விட்டானாம். ஸ்டோர் ஆள்உள்ளே வந்து என் மகளிடம்கேட்டு , அந்த ரகசியத்தை பெரிய பையனிடம் கூறியபின் அவருடன் பிள்ளைகள் கடைக்குள் வந்து அம்மாவை பார்த்தார்களாம்.உலகம் முழுவதும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். ஏமாற்றுக்காரன் கருப்பாக இருப்பான்,வெள்ளையாகவும் அழகாகவும் இருந்தால் கெட்டவர்களாக இருக்கவே மாட்டார்கள் என்ற முடிவுக்கு வரக்கூடாது, என்பதற்கு இது ஒரு உதாரணம். வெள்ளையாக இருப்பவர்கள் யாவருமே பவித்திரமானவர்கள் என்றால் ரகசிய வார்த்தைக்கு என்ன அவசியம் இருந்தது?
Leave A Comment