மனித வாழ்க்கையின் மகத்துவமே எத்தனை கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் வாழ்ந்து காட்டினார்கள், சில முன்னோடிகள். வாழ்க்கை பிரயாணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாகவே அமைகிறது. ஒவ்வொருவரும்  அவரவர்கள் பட்ட சிரமங்களைப்போல் இன்னொருவருக்கு  கிடைத்திருக்க முடியாது என்றுதான் பேசிக்கொள்வோம். விவாகம் ஆகவேண்டும் என்பதற்காகவே சிலர் கல்யாணம் செய்துகொண்டு திண்டாடுகிறார்கள். கல்யாணமே ஆகாவிட்டாலும் வாழ்க்கை பயணம் கடினமே. பிள்ளைகள் பிறந்து விட்டால் ஒரு மாதிரி தலைவலி. பிறக்காவிட்டால் வேறுமாதிரியான தலைவலி. வீட்டில்  பெரியவர்கள் இருந்தால்தான்  சௌகர்யமான வாழ்க்கை என நினைப்போம். ஆனால் மகா தொந்திரவுகளும் நிச்சயம்இருந்தேயிருக்கும்.

வாழ்க்கையில் முன்னேற  ஒரு நிச்சயமான பார்முலா கிடையாது. இப்போதைய காலத்தில் இருமியபோது கட்டிய தாலியை  தும்மியதும் அறுத்தெறிந்து விட்டு பெண்புலிகள், கல்யாணத்தளையிலிருந்து சீறிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். எதையும் எதிர்த்து நிற்க தயாராகவும் ஆகியுள்ளார்கள். விவாகரத்துக்கள்  நடக்கின்றன. அதற்காக எந்த விதமான சங்கோசம்,  மனகிலேசம்  இல்லவேயில்லை  என்றுதான் கூறவேண்டும். பெண்களும் ஆண்களைப் போல், சொல்லப்போனால் ஆண்களைவிட தைர்யமாகவும், வேறுவகையில் யோசித்துத் செயல்படுகிறார்களோ எனவும் நினைக்க வைக்கிறது. இரண்டு தரப்பு பெற்றவர்களும் வேறுவிதமாகவும் சிந்தித்து, கவலைக்கும்  ஆளாகாமல் பிள்ளைகளுக்கு   புத்திமதி கூறி செயல்படுவதாகவும், தெரியவில்லை. எத்தனைகாலமாக நம் மனதில் இந்த அடிமைத்தனம் ஊறிப்போயிருக்கிறது ,பவித்திரமானது என நினைப்பதற்கு மாறாக ஒரு சிலர் அதிர் வெடியை வெடித்த பின் வேடிக்கையாகவும், நினைத்து உதறிவிட்டு மேற்கொண்டு, எது நடக்கவேண்டுமோ அதை நடத்த முன் வருகிறார்கள். நடந்தவைகளிலேயே உழன்று கொண்டிருக்காமல் மற்ற கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் பிள்ளைகளின் மனோதைர்யத்தை கண்டு வியந்து போகிறேன். நம்மை யார் என்னசொல்லமுடியும் , என்ற ஒரு தோரணையுடன், தங்கள்  மன கிலேசத்தையே மறைத்துப்பழகியவர்கள் எதையும் தாங்கிக்கொள்ள  தயாராகி யுத்த  களத்தில் இறங்கி விட்டார்கள்.