வாழ்க்கை என்பது மேலும் கீழுமாகவே போக கூடியது என்றாலும், அதை எதிர்பார்த்து மேலே ஏறும் சமயம் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது, சரியும் காலத்தில் நொந்து கொள்கிறோம். ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்ற ஒரு அல்ப நம்பிக்கையே காரணம். வீழ்ந்தாலும் குதித்து எழுந்தவுடன் மறுபடி மண்டைகனம் தூக்கலாகவே இருக்கின்றது. ஏனென்றால் தனக்கு எதுவுமே தப்பாக நடக்காது என்ற நம்பிக்கையும் ஒருகாரணமாகும். ஆனால் ஆண்டவனின் கணக்கு வேறு கணக்காகவும் இருக்கலாம், என்பதையே மனிதர்கள் மறந்தும் விடுகிறார்கள்.

காலத்தின் போக்கின் கணக்கு எவருக்கும் புரிபடுவதில்லை. நாமும் எதற்கெல்லாம் காத்திருக்கிறோம்,  என்ன செய்ய நினைக்கிறோம் என்பதும் சரியாக புலப்படுவதில்லை . தோல்வியை தவிர்க்க முடிவதில்லை. வெற்றியின்அடிச்சுவடுகள் தெள்ளத் தெரிந்தாலும் பின்பற்ற துணிவில்லை. துணிந்து செயல்பட ஆரம்பித்தோமானால் நினைத்திருந்த முடிவு கிடைக்காவிடில் எங்கு போய் சேருவோம் என்ற எண்ணமே தூக்கலாக உள்ளது. நமக்கே இதற்கெல்லாம் ஆரம்பம் எது, முடிவு எது என்பதும் தெரியவில்லை. நாம் யாருக்கு பதில் கூறியாக வேண்டி வரும் என்பதும் தெரியாது.

எதை செய்வதாக இருந்தாலும் மனதில் ஒரு தயக்கமேற்படுகிறது. சிறிய வயதில்  இருக்கும் உற்சாகம் வயதாகி வரும்போது குறைந்து விடுகிறது. புதிய எண்ணங்களும் புதைந்து விட்டாற்போல்  தோன்ற ஆரம்பித்தும் விடுகிறது. பழசுகளின் யோசனைகளும் சிறிசுகளுக்கு புரிபடுவதில்லை . அதற்காக விட்டுக்கொடுக்கும் மனதும் வருவதில்லை. மகா சங்கடத்தில் மாட்டிக்கொண்டு  திணற வேண்டியதாகிறது . யார்சொல்லி கொடுத்தது, இந்த ஐடியா என்று கேட்டதற்கு பதிலளிக்க வேண்டியதாகவும் உள்ளது. இப்படி ஒரு இரண்டுகெட்டான் நிலையில் நாம் நிற்பது நமக்கே பிடிக்கவில்லை. நின்றேயாகவேண்டுமென்ற கட்டாயத்தில் வாழ்க்கையை ஓட்டப்பார்க்கிறோம்.  வாழ்வில் நமக்கென்று ஒரு சாட்சி இருந்தால் நன்றாகவே இருக்கும்.