சின்ன வயதிலிருந்தே நான் அடங்கியிருக்க பழகவில்லை. பன்னிரெண்டு குழந்தைகளுக்கு நடுவில் பிறந்த நான், நினைத்ததை சாதித்துக்கொள்ளவே பார்ப்பேன். என் தகப்பனாரை மட்டுமே மதித்துப்பேசுவேன். மற்றபடி எவருக்கும் பயப்படமாட்டேன்.என்ஜாதகப்படி எனக்கு பதினான்கு வயதிற்குள் கல்யாணம் செய்யாவிட்டால் ஆயுள்முழுக்க கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன், என் ஆயுளில் கல்யாணமே நடக்காது என்றதொரு தோஷம் இருந்ததினால் என்னுடைய பதினான்கு வயது ஆரம்பித்தவுடன், என கஸின் அக்காவின் உறவில் ஒரு பையன்இருப்பதாகவும், 28 வயதாகிறது , எனக்கு பார்க்கலாமே நினைத்து பேசினார்கள்.

பையன் டெல்லியில் வேலையிலிருப்பதாகவும் கூறியவுடன், நான் உடனே சம்மதம் என தெரிவித்தும் விட்டேன்.  எல்லா பேப்பர்களிலும் நியூஸ் ஆரம்பிக்குமிடத்தில் புதுடில்லி போட்டுத்தான் ஆரம்பிக்கும். படிக்க ஆரம்பித்த நாளிலிருந்து  புதுடில்லி ஒரு தேவலோகம்போல்தான் இருக்கும் எனக்கு. பாட்டியம்மாவிடம் ஏன் புதுடில்லிக்கு இத்தனை மகத்துவம் எனக்கேட்டபோது , ஆங்கிலேயர்கள் புதுடில்லியில்தான் பார்லிமெண்ட்டு கட்டியிருக்கிறார்கள், நம் தேசத்தின் நல்லது கெட்டது எல்லாவற்றையும் அங்குதான் சர்ச்சைகள் செய்வார்கள், ஆங்கிலேயர்கள் நம்க்கு சுதந்திரம் பற்றி தெரிவித்ததும் அதே பார்லிமெண்ட்டில் எனவும் அந்த கட்டிடம் புது டில்லியில் இருப்பதாகவும் கூறுவார்.

என்னுடைய அந்த காலத்து பாட்டியம்மா படித்தவர், மற்றும் அகில உலக விபரங்கள் தெரிந்து வைத்திருப்பவராகவும் இருந்தார். புதுடெல்லியின் பெயரைக்கேட்டதும், பார்லிமெண்ட்டு ஞாபகம்தான் வரும். பையன் டெல்லியில் இருப்பதால், பையனின் பெற்றோர் மட்டும் வந்து பார்த்து, சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.  கல்யாணத்தின் தேதி வைத்தபின் பிள்ளை வந்துவிட்டான்,  ஆனால் பதினான்கு வயது என்றவுடன், அவன் பெண்ணைப்பார்த்த பிறகுதான் மற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டுமென்று சொன்னதும், கல்யாணத்திற்கு ஐந்து நாட்களேயிருந்தபடியால் என் பாட்டிக்கு கவலையில்  தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.  பையன் பெண்ணைப்பார்த்த  பின் பெண்ணை பிடிக்கவில்லையென கூறி விட்டால், என்னவாகும் என பாட்டிக்கு கவலையாகி விட்டது. அவனை நம் கிராமத்திற்குள்ளேயே, வாழ்ந்து வரும் தேவர்களிடம் காட்டி முடித்து விட வேண்டியதுதான் என்றேன், நான். பன்னிரென்டு குழந்தைகளில் நான் ஒரு குழந்தை. பெற்றோரே பெண்ணை பார்த்தால் சரியென்று சொன்னவன், கல்யாணத்திற்கு ஆறுநாட்கள் முன் வந்து என்னைப்பார்த்து , நான் அவனுக்கு லாயக்கில்லையன கூறிவிட்டால் நாம் செலவழித்து போட்ட பந்தல் செலவை பிள்ளை வீட்டார்கள் தருவார்களா, என கேட்டேன். எனக்கு கல்யாண பந்தத்தைவிட பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து  பார்க்க வேண்டுமென்ற தணியாத தாகத்தை தீர்த்துக்கொள்ள ஒரு சான்ஸ் கிடைக்கும் சமயம் விடக்கூடாது என்றே தோன்றியது. என் புத்தியினாலேயே நானும் ஹிந்தி படித்து  நல்ல மதிப்பெண்கள் பெற்று பரிசு பெற நான் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்த நேரம்தான் என் ஆயுளில் புனிதமான நேரம் என இன்றுவரை கருதுகிறேன்.

என் பாட்டியம்மா வீட்டு நிர்வாகங்களை நன்கு நடத்தியவரானதாலும், விவகாரங்களை  எப்படி கையாள வேண்டுமென நன்கு கற்றவரானதால் விஷயங்களை லாகவமாக கையாளுவார். நல்ல விதமான புத்திமதிகளும்  சொல்லிக்கொடுப்பார். உலக விபரங்களையும் அறிந்து வைத்திருந்தார். அவர்கள் ஐந்து சகோதரிகள்.  அவர்கள் யாவருமே ஒற்றுமையுடனும், ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்வதிலும்  தேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். இந்த உலகில் வாழ யாவருக்குமே ரோல் மாடல்  வைத்துக்கொண்டால் நினைத்ததை சாதிக்கலாம்  என்றே நான் நம்புகிறேன்.