நாம் எந்த பழக்கவழக்கங்ளையும் நாம் கற்றுக்கொண்ட சற்குணங்களை, சிறிய வயதிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து  வரவேண்டும், அப்போதுதான் பழக்கங்கள் வளர்ந்து வரும். எந்த விதமான நல்ல பழக்கங்களையும் பிள்ளைகளுக்கு வரவேண்டிய பருவத்தில் மனதில் படிய வைக்கவேண்டியது பெற்றோரின் கடமைகளில் ஒன்றாகும்.அவர்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெற்றோருக்காக செய்தே ஆகவேண்டிய நிர்பந்தமென்றும் தோன்றவேண்டியது அவசியமே.

வீட்டுக்கு வருபவர்களை பெற்றோர்கள் வரவேற்று,ஆதரித்து,அன்பாக பேசி நடத்தினால்தான், அவர்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய நடவடிக்கைகளை கவனித்து கற்றுக்கொள்ள முயல்வார்கள். நம்மிடம்,அதாவது பெற்றோரிடம் மட்டும் இல்லை, வீட்டிலுள்ள மனிதர்களிடம் இல்லாத எந்த நல்ல குணங்களையும் பிள்ளைகள் அடைய மாட்டார்கள். போட்டிக்காக கோபம் காட்டுவது,அனாவசியமாக வம்பிழுத்து சண்டைபோடுவது என்பதெல்லாம் நல்லபழக்கங்கள் அல்ல.

வீட்டுப்பெரியவர்களுக்கு இல்லாத உயர்ந்த குணங்கள் பிள்ளைகளுக்கு வருமா என்பது சந்தேகமே. பிள்ளைகளும் தங்களுக்கேற்ற சிநேகிதர்களையும் அடையாவிடில் வாழ்நாளில் எதிலும் ஏமாற்றத்தையே அடைவார்கள். தனி மரம் தோப்பாகாது என்ற பழமொழிக்கேற்ப மனிதன் தனியாகவே எவரையும் சார்ந்திராமல் வாழ்வது என்பது நடக்காத காரியம். ஏனெனில் பிள்ளைகள் சிநேகிதர்களை தேடி கண்டுபிடித்து நண்பர்கள் பெறுவது என்பது மிகவும் கடினம். வாழ்நாளில் கிடைத்த சிநேகத்தை பாதுகாத்து அவர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமே.

எந்நாட்களிலும்,அதாவது எந்த வயதிலும் சிநேகம் செய்துகொள்ள முடியும். அதற்கு நம்மிடம் உண்மையான பேச்சு வளம் இருக்கவேண்டும். நமக்கு வேண்டும் என்கிறபோது பேசுவது, அவர்கள் நம்மை பார்க்க வரும்போது டயமேயில்லாது மாதிரி நடிப்பது போன்ற துர்குணங்கள்,சிநேகம் வளர்வதற்கு பதிலாக துண்டித்து விடும் என்பது நிச்சயம். இந்த பரந்த உலகில் நம் உறவினர்களுடன் ஒரு வரைமுறைதான் நம் சுக,துக்கங்களை பகிர்ந்து கொள்வோம். உன்னதமான சிநேகம் என்றால் அதனுடைய அர்த்தமே பாதுகாப்பது என்றுதான் அர்த்தம்.

சிநேகம் என்பது எக்காலத்திலும் போற்றப்பட்டு வளர்க்க வேண்டிய ஒரு தொடர்கதை.