உயிரிழப்பு என்பதை எவராலுமே தடுக்க முடியாத ஒன்று யாவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவரவர் இழப்பின் கொடுமை, இழந்து தவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும், எப்படிப்பட்டது என்று. உனக்கென்று ஒரு சட்டம், எனக்கென்று ஒரு சட்டம் என்பது ஆண்டவன் அகராதியில் கிடையாது, என்பதால் நியாயம் யாரிடம் கேட்கமுடியும்? நம் உள்ளமானது, ஆவலுடன் எதிர்பார்ப்பதை நிறுத்தப்பார்க்கிறது. ஆனால் நாம் நம்மைப்ற்றி, நம்தோற்றத்தை, நம் வளர்ச்சியை, நம்முடன் இருப்பவர்களை யோசித்து, நம்மை நாமே இழந்தும், இழந்தேதான் ஆகவேண்டும் என நினைத்தும் மனதை தேற்றிக்கொண்டும், மனதிற்கு தைர்யம் அளித்து தேற்ற பார்க்கிறோம்.
உயிரை இழக்க வேண்டாத சமயம், உயிரிழக்க ரெடி என்று நமக்கு ஒரு தீர்மானமான முடிவெடுத்த பின்,உயிரிழப்பு வரவேண்டுமென்று ஒரு சட்டமிருந்தால், அதை எவர் அனுபவிக்கலாம், என்பதற்கும் ஒரு வரைமுறை இருந்தால் சரியாக இருக்குமா? நடப்பதை தடுக்க யாருக்குமே சக்தியில்லை. இந்த அல்ப வாழ்க்கையில் எதை சாதித்து, கரையேற பார்க்கிறோமோ, அதைப்பற்றி நமக்கே தெரியாது. நம் வாழ்வில் நடப்பது ஒவ்வொன்றும் அவன்போட்ட பிச்சையென்றாலும், அந்த பிச்சையை நிறுத்திவிட்டால் நாம் எங்கு போய் நிற்போம், வாழ்க்கை முடிந்து விடுகிறது என்று உணர்கிறோம், ஆனால் உண்மை அதுவல்ல. எவருடைய வாழ்வும், எந்த இழப்பிற்காகவும் நின்று போவதில்லை, இழப்பினால் இன்றுவரையில் எவருக்கும் வாழ்க்கை நின்று போய் பார்த்ததில்லை. வாழ்க்கையை வாழ்ந்தே முடிக்கிறோம். ஆனால் அடிபட்ட மனது அடங்க டயம் கேட்கும்.
வாழ்க்கையின் நோக்கம் தடைப்படுகிறது, தாற்காலிகமாக, அவ்வளவுதான் என்பதை உணர்கிறோம், மனது ஒடிந்து போய் தேடுவது குறைகிறது. ஒரு வேளை ஆகாரம் பிடிக்காமல் துக்கத்தில் வாடுகிறோம். மறுவேளை சாப்பிடுகிறோம். நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள எல்லாவிதமான யுக்திகளையும் கையாளுகிறோம். பிறப்பும், இறப்பும் அவன் கையில்தான் என்பதை பேசவும், கேட்கவும்தான் முடியும். ஆனால் கடைபிடிக்க முடியாது திண்டாடுகிறோம். நன்றாக வாழும் சமயத்தில், நாமேதான் இந்த உலகிற்கே நாயக, நாயகி மாதிரி நடிக்கிறோம். நம்மால் முடியாத வேலையே கிடையாது என நினைக்கிறோம். நம்மால்தான் எல்லாமே இயங்குவதாக தீர்மானிக்கிறோம். ஆண்டவனின் கைப்பொம்மையாக ஆடுகிறோம் என்பது, உயிருக்கு ஆபத்து என வரும்போது மட்டுமே யோசிக்கிறோம். ஆபத்து நீங்கியபின் நாம் பழையபடி வாழ ஆரம்பிக்கிறோம்.பார்க்கப்போனால் நாம் யாருக்காகவுமே வாழவில்லை, நமக்காக மட்டுமே நாமும் வாழ்ந்து கொண்டு பிற மனிதக்கூட்டத்தையும் நமக்காக வாழவைக்கப்பார்க்கிறோம், என்பதே உண்மை.
Leave A Comment