உயிரிழப்பு என்பதை தவிர்க்க முடியாதுதான். ஆண்டவன் விளையாட்டில் உனக்கொரு சட்டம், எனக்கொரு சட்டம் என்பதே கிடையாது. எது நமக்கு நடக்கவிருக்கிறதோ  அது நடந்தே ஆகும். நம் வாழ்க்கையில் உயிரிழப்பு என்பது வந்து விட்டால்நடப்பதை தடுக்க யாருக்கு சக்தியிருக்கிறது. எதைக்கண்டுமே கலங்காத மனது கூட கலங்குகிறார் போல சாவு வந்துவிட்டால், யாரை குற்றம் சொல்லமுடியும் ? தாயை இழந்து கலங்கும் பிள்ளையைவிட, பிள்ளையை இழந்து வாடும் பெற்றோர்களின் கதியை நினைத்துக்கூட பார்க்க கூசுகிறது. முளை வரும்போதே கிள்ளி எறிவதின் அர்த்தம்தான் என்னவாக இருக்கும்? உனக்கு யோக்யதை இல்லாத ஒன்றை கொடுத்து விட்டேன், எடுத்துக்கொண்டு விடுகிறேன் என்று கூறுவது போல் உள்ளது.

நம் வாழ்வின் ஒவ்வொரு விளைவும் அவன் போட்ட பிச்சைதான். ஆனாலும் உயிரை பறித்துக்கொண்டால் சமயம்தான் நம்மை  காப்பாற்ற வேண்டும். தாற்காலிகமாக வாழ்க்கையின் நோக்கம் தடைப்பட்டுவிடுகிறது, மனது ஒடிந்து விடுகிறது. பிறப்பும், இறப்பும் அவன் கையில் உள்ளது என்பதை கேட்பதற்கும், மற்றவர்களுக்கு உபதேசிக்கவும் நன்றாக இருக்கிறது. இழந்தவர்களுக்கு  மனம் சுருங்கி போய் தேடுவது குறைந்து விடுகிறது. எதைப்பார்த்தாலும்  வெறித்துப்போய் பார்க்கிறோம். உண்மையாகவே எதுவும் தெரியவில்லை.

காலன் எடுத்துப்போனதை திரும்ப தரப்போவதில்லை. இழந்தது நமக்கு ஒரு முறை பார்க்க கூட இனி கிடைக்காது. நமக்கு இந்த உண்மை நன்றாக புரிகிறது. நம் வாழ்நாளில், சில சமயங்களில் நாமே வழிகாட்டி போல் இருந்தது போக, நாமே தடுமாறி விழுந்து விடுவது  போல திண்டாடுகிறோம், நம் இழப்பினால். இதுதான் பந்தபாசத்தினால் நமக்கு கிடைத்த பரிசு. இந்த பந்த பாச பிணைப்பை அறுத்தெரிவது சராசரி மனிதனுக்கு எப்படி சாத்தியமாகும்? காலன் செய்த வேலையை காலம்தான்  மனதை தேற்றி சமாதானம் செய்யமுடியும்.  துக்கத்தை ஆற்றிக்கொள்ள கிளாசுக்கா போய் கற்றுக்கொள்ள முடியும்?