இந்நாட்களில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு அல்லது ஒரே பிள்ளையிருப்பது என்பது நிதர்சனமாக உள்ளது. அந்த இரண்டுமே திரும்ப வர இஷ்டமேயில்லாத தேசத்திற்கு போய்விட்டால், அவர்களை மறந்து உட்கார்ந்து விடலாம். சம்பாதிக்க மட்டும் சில தேசங்களுக்கு சென்று வரும் பிள்ளைகளும் , அவ்வப்போது நம் ஊருக்கு பறந்து வந்து பணத்தை முதலீடு செய்துவிட்டு திரும்ப, வேடந்தாங்கல்பறவைகள் மாதிரி ஒரு கால நிமித்தம் வைத்துக்கொண்டு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். ஏன் என்றால் நம்தேசத்தின் ஆக்கும் சக்தி குறைவாகவே உள்ளது,என்று பிள்ளைகளுக்கு தோன்றுகிறது.
பெற்றோர்கள், பிள்ளைகள் கிளம்பி சென்ற ஆரம்ப காலத்தில் மனவேதனையோடு இருந்து நாளடைவில் தன் பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு மனமகிழ்ந்து, மனதை தேற்றிக்கொண்டும் தனியான வாழ்க்கையில் தங்கி இருக்க பழகிக்கொண்டும் விடுகிறார்கள். அவர்களுக்காக ப்ளாட் வாங்க, வீடுகளை பார்க்க போவதும் அதன் அமைப்பை பற்றியிருக்கும் பேப்பர்களை வாங்குவதும், மாற்றி,மாற்றி பார்ப்பதுமாக, காலத்தை கடத்துவார்கள். மேலும் பக்கத்து வீட்டு இளம் தம்பதியினருடன் பேச்சுக்கொடுக்க விருப்பமில்லாத பெரியவர்கள் கூட , தன்னை சரிசெய்து கொண்டு எல்லோரிடமும் பழக முற்படுகிறார்கள். எத்தனை நேரம் டிவி பார்ப்பது? நிறைய நேரம் கிழ பெண்சாதியுடன் வம்பிழுக்கமுடியாது . டிவியின் பேச்சை நாம் கேட்கலாமே தவிர, நம் பேச்சை டிவி கேட்காதே. உலக விவகாரங்களையும் அரசியல் பற்றியும் பேசி அலச வேண்டுமே. இத்தனை இன்னல்களை வைத்துக்கொண்டு பெரிசுகளுக்கு எதுவும் செய்யமுடியாதபடி லாட்டரி அடிக்கவேண்டி வருகிறது. நமக்கு பேசவேண்டுமானால் நாம்தான் யாரையாவது சந்தித்து பேசுவதும் மிகவும் முக்யமே, என உணர்வு வரும்போது ஆதங்கமே மிஞ்சுகிறது.
ஆனால், அந்த இளசுகளுக்கு, பெரிசுகளைக்கண்டால், இளக்காரமாக உள்ளது , ஏனெனில் பெரியவர்களுக்கு தங்கள் உதவி தேவைப்படுவதாகவும், அதற்காகவே தங்களை தேடிப்பிடித்து சகவாசம் செய்து கொள்வது போலவும், நினைத்து பெரியவர்களை கண்டாலும் ஓரமாக ஒதுங்கி விட பார்க்கிறார்கள். பெரியவர்களோ, இதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு சங்கோசத்தையும் விட்டு பேச முயற்சித்தால் பெரிசுகளைப்பார்த்தாலே அலர்ஜியாக உள்ளது போன்ற உணர்வுடன் இளசுகள் பழகுவார்கள். அவசியமா, இத்தகைய அவமானம்? உள்ளதை உள்ளபடி கூறப்போனால் நாம் யாருக்கு வேண்டுமோ அவர்களுக்காக நாம் இருந்தாலே போதும், என்ற உணர்விலேயே காலத்தை கடத்த பார்க்கவேண்டும். குடும்பங்கள் குறுகிக்கொண்டுதான் வருவதால் யாரையும் பேச்சுக்காக வளைத்துப்போட்டு வைத்துக்கொள்வது அத்தனை சாத்தியமில்லை. காலம் மாற்றப்பட்டு வருகிறது , இன்றைய இளம்பிஞ்சுகள்தான் நாளைக்கு முற்றி பழமாக நிற்கப்போகிறார்கள். நமக்கே இந்த கதிஎன்றால், இன்றைய இளைய தலைமுறை முற்றி பழமாகும்போது மனித குலமே மாறி விடுமோ என நினைக்க வைக்கிறது…
Leave A Comment