பசி என்பது வரும்போது , உண்பதற்கு எதுவுமே இல்லாமல், கிடைக்கவும் கிடைக்காது என்று இருந்தால்தான், பசி என்னும் கொடுமையை உணர்வோம். பர்ஸில் பணம்அடைத்து வைத்திருப்போம் எந்த ஒரு தீனியுமே கிடைக்காத ரோடில் நம் பெரிய வாகனம் நின்று விட்டால் என்னவாகும்? குடிசைகளில் வசிப்பவர்கள் தனக்கென்று வைத்திருப்பதை பங்கிட்டு தருவார்கள், அதையும் உண்போம், அவர்கள் செய்து கொடுக்கும் டீத்தண்ணீரையும் குடித்து விடுவோம்.
அந்தசமயத்தில் மட்டும் நம் கண்களுக்கு அந்த அம்மையார் , காசியில் வீற்றிருக்கும் விசாலாட்சியாகவும், அம்மையாருடைய கணவர் விசுவநாதராகவும், பெண்குட்டி , கோயிலில் குடியிருக்கும் அன்னபூரணியாகவும் தோன்றுவார்கள். பசியாறி, வாகனம் ஓட ஆரம்பித்தபின் நாம் பழையபடி, நம்மைப்போன்ற பாக்யசாலிகள் எவருமே உலகத்தில் வாழ்ந்ததில்லை என்றும் பேச ஆரம்பித்து விடுவோம். வாகனம் ரிப்பேர் ஆகி வண்டியில் அமர்ந்தவுடன், அந்த மகாவிஷ்ணுவையையும், மகாலட்சுமியையும் , ஆஹா எத்தனை உதவிசெய்து விட்டீர்கள் என உதட்டிலிருந்து ஓடி வரும் வார்த்தைகளை உதிர்த்து, ம்,ம், கிளம்புங்கள் என உடனடியாக என்று நம்மை துரத்தியும் கிளப்புவார்கள். பணம்படைத்த சற்குண கனவான்கள். டூரிங் போன நால்வரிடமும் என்னிடம் நூறு , ஐந்நூறாக நோட்டுக்கள் இல்லை, உங்களிடம் நேற்று ஆயிரம் மாற்றினீர்களே என்று மறந்தாற் போல் இருந்த பெரிய நோட்டை மாற்றியவருக்கு நினைவு படுத்தி அந்த குடிசைவாழ்மக்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்வார்கள்.
டூர் முடிந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடன்நம்மை பார்க்கவருகிறவர்களுடன், கலந்துரையாடல் நடக்கும் போது , தங்களுக்காகவே தெய்வம் ரோடு ஓரத்தில், அன்றைக்குமட்டும் குடிசைகள், அமைத்துக்கொண்டு வசித்தாற் போல், அவர்கள் யாவரும் தங்களுடைய காரை சுற்றிக்கொண்டு நின்றார்கள், எந்த உதவிகளையும் செய்ய ரெடியாகவும் இருந்தார்கள் என்பதையும், எப்பேற்பட்ட புண்ணியவான்கள் தாங்கள் என்பதுபோலவும் பேசிக்கேட்டிருக்கிறேன்.
ஆனால் அவர்களுக்கு சம்மானம் அளிக்கும்போது நம்மவர்கள் நான், நீ என்று அந்த குடிசை வாழ் மக்கள் மாதிரி போட்டி போடவில்லை. பாக்கெட்டுக்குள் போட்ட கைகள் பிசின் போட்டு ஒட்டியமாதிரி வெளியில் வராமல் கைகள் பாக்கெட்டுக்குள்ளேயே மாட்டிக்கொண்டிருந்தன. இந்த மனிதர்கள் தர்மத்தை பற்றி லெக்சர் கொடுக்க எந்த நிமிடத்திலும் ரெடியாக இருப்பார்களே தவிர பாக்கெட்டிலிருந்து பணம்எடுக்க வேண்டிய அவசியமேற்பட்டு விட்டால் உடம்பிலிருந்து சதையை பிய்த்துப் கிழிப்பதுபோல் உணர்வார்கள்.
உலகில் பல தரப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள், என்பது உண்மையே. இப்படியாக நம்வாழ்வில் நம்மிடையே கூட இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்தும் வருகிறார்கள்.
Leave A Comment