வயதானபின் கணவன்மனைவிக்குள் போட்டி என்னவென்றால், யார் முதலில் கிளம்பவேண்டுமென்பதுதான். ஆனால் அவர்கள் சக்திக்குள் எதுவுமேயில்லை. ஆனாலும் சொல்லப்போனால், மனிதர்களாக பிறந்துள்ள நமக்கு, பணம்,பதவி, காசு எதற்குமே அதிகாரம் இருந்தாலும், பழைய தோரணையில் இயங்கி செய்து காண்பிக்கும் சக்தி வயதாக,வயதாக குறைகிறது. அதனால் ஏற்படும் மனகிலேசம் அதிகமாகவே இருக்கும். பணக்காரனோ,ஏழையோ,இளைஞனோ,கிழபிராணனோ,ஆண்டவனின் அழைப்பு வந்தாலொழிய எவராலும் கிளம்பமுடியாது என்பது தெரிந்தும் வாழ்க்கையின் நோக்கமே தெரியாது தவிக்கிறோம்.

ஆனால் சாவையும் எதிர்பார்த்து,எதிர்பார்த்து வாழ்வதுதான், கடைசியில் தண்டனையாகி, மனதிற்கு அலுப்பு ஏற்பட்டு, வேறெதுவும் பேசுவதற்கும் எவருமே இல்லாது போனாலும், நாம் எதற்கும் உபயோகமில்லை போன்ற உணர்வு ஏற்பட்டு மனம் தானாகவே  உடைந்து, உடலைவிட மனம் தளர்ந்து விடுகிறது. அவர்களுக்குள் முன்பைவிட அலுப்பு ஏற்பட்டு ஆத்திரம் கட்டுக்கடங்காதபடி எழுகிறது. வெளியில் காட்டிக்கொள்ளமுடியாமல் நீரிலிருந்து எடுத்துப்போட்ட மீன்கள் மாதிரி தவிக்கவும் நேர்ந்து விடுகிறது. மரணபயம் ஒருபக்கமிருக்க,தனியாகி விடுவோமோ என்ற பயமும் சேர்ந்து கிழங்களின் ஆயாசம் அதிகரிக்கிறது. ஆனால் பேச்சில் இருக்கும் வீராப்பு குறைவதில்லை.

தினந்தோறும் காலை, மாலை வேளைகளில், பிள்ளைகளுடன் வசித்து வரும் பெற்றோர்களை, பிள்ளைகள் என்னப்பா,இரவு நன்றாக தூங்கினீர்களா, கொசு தொந்திரவுகளும் இல்லாமல் இருந்ததா, நியூஸ் பேப்பர் படிக்கிறீர்களா என்று இப்படி ஏதாவது பேச்சு கொடுத்து அவர்களுக்கு முக்யத்துவம் கொடுக்கிறாற் போல் பேசினால்தான்,மனம் நொந்து போகாது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கு மதிப்பு கொடுத்து பேசுவதுபோல் நினைப்பார்கள். இல்லாவிடில் இயந்திரம் இயங்குவது போல் வேளைக்கு உணவு, மருந்து கொடுத்து கவனித்தாலும்,பேச்சு இல்லையென்றால் மூளை செயல்படுவது நின்று விடுகிறது, ஆகையால் பெரியவர்களிடம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும்.

வயிற்றுப்பசிக்கு ஆகாரம்கொடுப்பது போல், மூளைக்கும் வேலை கொடுத்தேயாக வேண்டும், இல்லாவிடில் எதையுமே அவர்களால் உணர முடியாது போய்விடும். இது வெளியில் தெரியாது. இந்த நிலை காயை வைத்துவிட்டு வெம்பி போகிற மாதிரிதான். இந்த நாட்களில் டிவியை பார்த்துப் பார்த்து சராசரி மனிதர்களின், மூளையே சுத்தமாக வேலை செய்வதையே நிறுத்திவிட்டன. நம் மனதால் நினைத்து, நம் மனதை உசுப்பிவிட்டால்தான் மனதுக்கு எதையாவது பார்த்தால் புரிபடுகிற மாதிரி உள்ளது. பிறர் செய்வதையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நமக்கு  தேவையானவைகளே தெரியாமலும் போய் விடும். இல்லாவிடில் மனதுபோலவே, சரீரமும் வேலை செய்வதை நிறுத்திவிடலாம். கிடைத்தால் சாப்பிடுவோம், இல்லாவிடில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை வந்தும் விடலாம். மூளையின் அந்த பாகமே மறக்கடிக்க பட்டுவிடலாம். இன்றைய நாமும் நாளைய உதிரப்போகும் இலைகள்தான். தனக்கும் இதே கதிதான் வரக்கூடும் என நினைத்து இளைய தலை முறைகள் செயல்படலாமே. பெரிசுகளுக்குத்தான் எதுவுமே புரியாமல், தெரியாமல் காலத்தை கடத்திவிட்டார்கள். இன்றைய இளசுகள்தான் அறிவாளிகளாயிற்றே, புத்திசாலித்தனமாக செயல்படலாமே. என்று கூறத்தோன்றுகிறது.