என் அத்தை துளசி அத்தை. எனக்குப்பிரியமானவள். எனக்கு எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுவாள். லீவு நாட்களில் குழையக்குழைய தயிர்சாதம் பிசைந்து கையில் போடுவாள், நான் ரசித்து சாப்பிடுகிறேனா என்று என் முகத்தையும் பார்த்துக்கொண்டேயிருப்பாள். இதே போலவே எந்தகுழந்தைகள் லீவுக்கு வந்தாலும், அவர்களையும் நன்கு கவனித்துக்கொள்வாள். என் தம்பி சுதாகர் என்னிக்குமே அத்தைக்கு ஸ்பெஷல் என்பதில் சந்தேகமேயில்லை.
என் கல்யாணமும் முடிந்து பிள்ளைகளும் பிறந்து அம்மாவீட்டிற்கு போகும் போதெல்லாம் அதே அத்தையாகவேதான் இருந்தாள் . அத்தை துளசிமாடத்தின் எதிரில் உட்கார்ந்து கொண்டு துளசிசெடியை பார்த்தபடி மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பாள். இந்த விஷயத்தை, பெற்றோரிடமோ, பாட்டியிடமோ கேட்க தைர்யமிராது. தனக்கென்று எதுவுமற்ற நிலை அத்தைக்கு எப்படி வந்தது என்று தெரிந்து கொள்ள அவ்வப்போது ஆர்வம் வரும், கூடவே தயக்கமும் வரும். சுமங்கலி என்று மட்டும் புரிந்தது. இந்தமுறை அத்தையிடமே கேட்டு விடலாமா என்று தோன்ற , அத்தை, நீயே துளசி நீ ஏன், துளசி மாடத்தையே, பார்த்துக்கொண்டேயிருக்கிறாய், என்று தைர்யத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டு விட்டேன். துளசிக்கு பக்கத்தில் கிருஷ்ணன் நிற்கிறானோ என்றுபார்க்கிறேன், என்றாள். எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கும் , சிறியவயதில்.
எனக்கும் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளும் பிறந்து வளர்ந்து வருவதால் அத்தையும் பார்க்க நேரும்போது மனதுக்கு வேதனையாகவும் இருக்கிறது. அம்மாவுடன் ஓடியாடி உழைத்து அத்தை எங்களை ஆளாக்கியதை என்னாலும், என் தம்பி சுதாகரினாலும் மறக்கவே முடியாது. தற்போது அப்பா காலம் முடிந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. பாட்டி காலமாகி 8 வருடங்கள் உருண்டோடி விட்டன. நானும் என் தம்பியும் இருந்தும் அம்மாவும், அத்தையும் தனியாகிவிட்டார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது . அத்தையின் ரத்தபந்தங்கள், சொந்தபந்தங்கள் மறைந்துவிட்டதாகவும் அம்மாகூறினாள்.என் தம்பிக்கு அத்தையை ரொம்ப பிடிக்கும்தான். ஆனால் அவனுடைய மார்டன் மனைவிக்கு அத்தையின் நடவடிக்கைகள் பிடிக்கவேயில்லை. 60 வயதான அத்தையை மாற்றுவது என்பது மீனை மரத்திலேற சொல்வதற்கு ஒப்பானதுதான்.
நான் லீவில் போயிருக்கும் சமயம், ஏண்டிம்மா, குளித்துவிட்டு குக்கர் வைக்கவேண்டும் என்று உனக்குத்தெரியாதா? என்று என் அத்தை கேட்க நான் உங்களுக்காக சமையல் செய்யவில்லையென்று பட்டென்று பதில் வருகிறது , நளினியிமிருந்து. அம்மா நடுவில்போய், அவள் அவசரமாக அவர்களுக்கு செய்து கொண்டபின் நாம் நமக்கு பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். நாமும் 12 மணிக்குத்தானே சாப்பிட போகிறோம் என்று சமாதானமாக கூறுகிறார். அத்தையா வாயை மூடுவாள்? இருக்கிறது நாலுபேர், நாலு தடவையாக சமைக்கணுமா என்ன என்று முணுமுணுப்புடன் நகருகிறாள். இப்படி தினம் ஒரு புகார், தகராறு. ஒருநாள் சாயங்காலம் நளினி தன் நீளமான தலை முடியை கழுத்து மட்டும் பாப் பண்ணிக் கொண்டுவர, மன்னி, மன்னி, இங்கே வந்து பாருங்கள் – வியாழனும் வெள்ளியும் கூடற வேளையில், சுதாகர் பெண்டாட்டி முடி வெட்டிக்கொண்டு வந்து நிற்கிறாளே என்று கூச்சலிட, எல்லாம் நீ கொடுக்கிற இடம்தான் என்று மேலும் பேச ஆரம்பித்தவுடன், அம்மா அத்தையை பேச்சை மாற்ற முயற்ச்சிக்கிறாள். அத்தையை மாற்ற முயல்வது முடியாத வேலை. நேராக நளினியிடமே போய், நான் சொல்கிறேன் என்று நினைத்துக்கொள்ளாதே, சந்தியாகாலத்தில் முடி வெட்டிக்கொண்டு வந்து விட்டு தலையில் தண்ணீர் கூட போட்டுக்கொள்ளாதபடி இதெல்லாம் என்ன பழக்கம் ? அதுக்கும் மேலே ஒற்றைத்துணியை nightie போட்டுக்கொண்டு நிற்கிறது, வாழற வீட்டுக்கு நல்லதா என்று படபட வென்று நிறுத்தாமல் பேசிக்கொண்டே போக, அம்மா விக்கித்துப்போய் நிற்கிறாள்.
அக்கா, நமக்கு இடைஞ்சலாக இல்லாத போது வாயைக்கிளறி வாங்கி கட்டிக்கொள்வானேன் எனஅம்மாஎன்று ரகஸியமாக கூறுகிறாள். இந்த சமயத்தில் என் பெண் சொல்கிறாள், மாமி, யூ லுக் Smart! எனக்குத்தோன்றியது இந்த கூட்டுக்குடும்பம் எத்தனை நாளுக்கு நிலைக்க போகிறதோ என்று .
என்ன மன்னி, தப்பா நான் எதை சொன்னேன்? என் அண்ணா எத்தனை கஷ்டங்களுக்கு நடுவில், குடும்பத்தை வக்கணையாக நடத்தினார், என்றும் போகிற போக்கைப்பார்த்தால் ரொம்ப நாள் ஓடாது போலிருக்கே என்றெல்லாம் 1960 ல்வாழ்வது போல் 2005 பேசுகிறாள்.
நளினி ஒரே அழுகை, அன்றிரவு நளினியும் சாப்பிடவில்லை. அம்மாவும், அத்தையும் கிண்டிய ரவா உப்புமாவை சாப்பிட்டுவிட்டு தூங்கப்போனார்கள். அத்தை எதுவுமே நடக்காத மாதிரி பலமான குறட்டையுடன் தூங்குகிறாள். இரவு 11 மணிக்கு வந்த சுதாகருக்கும் நளினியின் வெட்டிய முடிபார்த்து அதிருப்தியை வெளியில் காண்பித்துக்கொள்ளமுடியாத நிலைமை.
பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான் . போன வருடமே அத்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும்படி பேச்சுநடந்ததாக அம்மா சொன்னதும், என் ஞாபகத்தில் நெருடியது. எனக்கு மனது உறுத்துகிறது. நாளைக்காலை நான் கிளம்பியாக வேண்டும் . அம்மாவும் தூங்கவில்லை போலிருக்கிறதே என நான் நினைக்கும்போது ,
என்னருகில் வந்தமர்ந்த அம்மா சொல்கிறாள், நாளை மறுநாள் கிளம்பி போகமுடியுமா என்று தாபத்துடன் கேட்க நானும் தலையை ஆட்டுகிறேன். நீ சொன்னால் அத்தை கொஞ்சம் கேட்பாள் , நான் தனியாக மாட்டிக்கொண்டு விட்டேன் என்று அம்மா வருத்தப்படுகிறார். அம்மா, அத்தை வாயை அடக்குவது முடியாத காரியம்தான் என்று நான் சொல்ல அம்மாவின் முகம் சுண்டிப்போயிற்று. அம்மா, என்னை வம்பில் மாட்டிவிடாதே. நளினி சொல்கிறபடி முதியோர் விடுதியில் விடுவதுதான் உனக்குமே நல்லது , இந்த மாதிரி தகராறு இனி அடிக்கடி வரத்தான் போகிறது என்றேன். அத்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டால் சுதாகரும் நிம்மதியாக இருப்பான் என்றதும், அம்மாசொல்கிறாள், நானும் அத்தையோடு முதியோர் இல்லம் போய்விடுவேன் என்று கூற, அத்தை எதுவுமே நடக்காத மாதிரி அசந்து குறட்டை விட்டுக்கொண்டு தூங்குகிறாள். எனக்கும் அம்மாவிற்கும் சிவராத்திரி தான் என்று நினைத்துக் கொண்டே தூங்க முயற்சித்தேன். ராமா, ராமச்சந்திரா, அக்கா என்னோடுதான் இருக்கவேண்டும், கிருபை பண்ணு என்றெல்லாம் அம்மா புலம்பிக்கொண்டே ,எப்போது தூங்கினாளோ தெரியவில்லை. காலை 4.30 க்குள் டாண் என்று எழுந்துவிடும் அத்தை 6 மணியாச்சே எழுந்திருக்கவில்லையே , என்றுஅம்மா வாரி சுருட்டிக்கொண்டு அத்தையை எழுப்ப தொட்டவள், உடம்பு சில்லிட்டு கிடக்கிறதே , என்று கூறி ராமசந்திரமூர்த்தி அத்தையை அழைத்துக்கொண்டு விட்டான், என்று சத்தமாக கூறி திருப்தியுடன் உட்கார்ந்து அழ ஆரம்பித்தவுடன் எனக்குத்தோன்றியது , அம்மாவிற்கும் எத்தகையான பொறுப்பான அன்பு தன் நாத்தனாரிடம் இருந்திருக்க வேண்டும் என நினைத்து கண்ணீர் விட்டேன்.
வேகு நாட்களாக மனதை நெருடிய நிகழ்வை ஒட்டிய கதை netயில் படித்த போது என் நெஞ்சு வொடிக்கிறது…