சுமார் ஐம்பது வருடங்கள் முன்பு நான் மனதளவில் அனுபவித்தவைகளின் எதிரொலிதான் இந்தெழுத்துக்கள். நம் வீட்டிற்கு அருகில் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த ஒரு தாய் ஏதோ தீர முடியாதவியாதியினால் மறைந்து விட்டாள். ஆனால் ஆண்மகன் பிள்ளைகளை அவர்களுக்கு தகுந்தாற்போல் நடத்தவோ, ஆறுதல் கூற முடியாமலும் மறுமணம் செய்து கொண்டார். வந்தவளும் நல்லவளாக அமைந்தது பிள்ளைகளின் புண்ணியம்தான், என எண்ணும்போது மனித மனம் எப்போது எப்படி வேண்டுமானாலும், மாறிவிடலாம் என்று எவருமே, நினைக்கவில்லை. பிள்ளைகளை கண்ணுமாக, கருத்துமாக பேணி வளர்த்தாள், இரண்டொரு வருடங்கள் வரை. மனிதர்கள் மனதில் ஏக்கங்களை அடைத்து வைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வது போலவே நடித்து வாழ்ந்துவருவார்கள். கொஞ்சநாட்களில் மனம், அலுத்துபோய்விடும்.எவரை அன்புடன் நடத்தினார்களோ அவர்களைக்கண்டாலே பார்க்கக்கூட பிடிக்காது மனம் மாறியும் விடுகிறது. மணம்முடிந்து புதிய அம்மா கிடைத்த குஷியில் பிள்ளைகள் கும்மாளம் போட்டு கூத்தடிப்பார்கள், புதிய அம்மாவிற்கும், ஒரு சேஞ்ச் இருந்ததோ என்னவோ அவளும் பிள்ளைகளோடு பிள்ளைகளாக அவர்களுக்கேற்றாற் விளையாடி மனதை கொள்ளை கொண்டாள். புத்தம் புதிய அம்மா நன்றாக இருப்பதில் பிள்ளைகளுக்கும் பரம சந்தோஷமே. ஒரு ஐந்து வருடங்கள் உருண்டோடியிருக்கும். தனக்கென ஒரு பிள்ளையாவது வேண்டுமென நினைத்து ஒரு பெண்குழந்தையை பெற்றுக்கொண்டாள். அதன்பின் ஆரம்பித்தது கொடுமையான காலம். காரணமேயில்லாமல், சதா சர்வகாலமும் மூத்தபிள்ளைகளை வாட்டி எடுக்க ஆரம்பித்தாள். இந்த சமயம் பெரிய பிள்ளைக்கு பதினைந்து வயதாகியிருந்தது. எல்லாமே கொஞ்சம் புரிந்தாற்போலிருந்தாலும், புரியாத வயதேதான். எந்த பிள்ளைகளுக்குமே,அம்மா என்றாலே தங்களை காப்பாற்றுபவள்,என்றுதான் நினைப்பு வரும். இந்த நிலையில் எதையும் உத்தேசமாக சொல்லமுடியாமல் தவித்து திண்டாடும் நிலைதான் ஏற்பட்டது. அப்பாவிற்கும் இளையவளை ஏதேனும் கூறி மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற திகிலும் இருந்திருக்கலாம்.
ஆனால் வாழ்க்கையில் எதை கண்டாலும், நமக்காகவே இருந்த,இருக்கப்போகும் உயிர் ஒன்றே ஒன்றுதான், அதுதான் அம்மா என்கிற ஜீவன். அந்த ஜீவன் இல்லாத வீடு வீடாகவும் இருக்காது, சமுத்திரத்தில் திசை தெரியாமல் தத்தளிக்கும் கப்பல் போலவேதான் இருக்கும். வீட்டின் ஜீவநாடியே அம்மாவாகத்தான் இருக்கமுடியும். அவளில்லாமல் வீட்டில் எந்த அணுவும் அசையாது. ஆனால் ராக்கெட் வேகத்தில் காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தக்கால உயிர்களுக்கு, தங்களுக்கு ஜீவனைக்கொடுத்த ஜீவனை அணைத்து வைத்துக்கொள்ளத்தெரிவதில்லை. பணம், வீடு, போன்றவைகளில் கண்ணோட்டம் அதிகமாக உள்ளது.
ஐந்து பிள்ளைகளின் அம்மா காலமான சமயம், எப்படியிருந்தாலும் பிள்ளகள் வளர்ந்துவிடுவார்கள் என்ற தைர்யம் அப்பாவிற்கும் இருந்திருக்கலாம்.
ஆனால் பெண்மணி இல்லாத வீடு குகைக்கும் மேலாக இருண்டுவிடும் என்பது, அந்த அப்பாவிற்கு அந்த சமயம் புரியாமலிருந்திருக்கும்.அந்த சமயத்தில், துக்கம், மகிழ்ச்சி என்பது அந்த நிமிடமே தெரியாத ஒன்று என்பதே புரியாது, பலருக்கு. வாழ்வின் நாட்களை கடத்தும்போதும், உள்புகுந்து பொறுப்புக்களை எடுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் காலத்தில்தான் தெரியும், குடும்ப பொறுப்பு எப்படிப்பட்டது என்பது. நாதஸ்வரத்தில் ஒரு ஓட்டைக்கு மேல் அடைத்து விட்டால் வெளியில் வரும் சத்தம் எப்படி மாறிவிடுமோ அப்படியேதான் வீட்டுத்தலைவனோ,தலைவியோ அகால மரணமடைந்தால் ஒரு வாக்குவம் உண்டாகிவிடுகிறது என்பது உண்மையே. ஆனால் அந்த குடும்பத்திலேயே மூத்த பையன் எல்லாவற்றையும் மேக்கரித்துக்கொண்டு அக்கா,தங்கச்சிகளையும், தம்பியையும் கண்காணித்து முன்னுக்கு கொண்டுவந்ததை கேட்டதும் என் மனதில் பரிபூரணமான திருப்தி ஏற்பட்டது. தன்னுடைய புதிய சகோதர, சகோதரியையும் நன்றாக கவனித்து உயர்த்திவிட்டான் என்பதை பார்த்து வந்தவர்கள் சொல்லக்கேட்டு மனதார வாழ்த்தினேன், அவர்களை. நேரம், காலம் வரும்போது சந்திக்கவும் விரும்புகிறேன்.ஆண்டவனின் அனுமதி தேவை அதற்கு.