மனிதர்களை திருப்தி செய்வது என்பது எளிதல்ல.எவரோ எதையோ வாங்கியிருந்தாலும், அவர்களிடம் காண்பிக்காவிட்டாலும் கூட கமெண்ட்ஸ் அடிப்பதற்கு உரிமையுள்ளது போல பேசுவார்கள். பார்ப்பவர்கள் யாவருமே ஒவ்வொரு விதமாகவே வர்ணிப்பார்கள். வீட்டிற்காக தவமிருந்து ஒருவர் வீடு வாங்கியிருப்பார்,அதைப்பார்த்து தன்மனதில் தோன்றியவைகளையெல்லாம் பலர் கூறுவார்கள். வீட்டை வாங்கியவர் எப்படி திண்டாடி வாங்கியிருப்பார் என்பது இந்த பிரஹஸ்பதிகளுக்கு எப்படி தெரிந்திருக்கும்? ஆனாலும் குறைகளை எடுத்து கூற ஆட்கள் தயாராகவே இருப்பார்கள். வெறும் வாய்க்கு மெல்ல கிடைத்து விட்ட அவல் போல. பார்ப்பவர்களுக்கு பேசி பொழுது போவதற்கு ஒரு டாபிக் கிடைத்தது. அவ்வளவுதான். எவருக்கும் நம்மைப்பற்றி எந்த கரிசனமும் கிடையாது.
பெண்மணிகள் புடவை வாங்க கடைக்குள் நுழைந்தாலும் அப்படியேதான் நடக்கும். ஒரு மாது ஒரு புடவை வாங்க நான்கு பேர் சென்று நானாவித காமென்ட் அடித்து, பத்து கடைகளாவது ஏறியிறங்கி, கடைசியாக பஜார் சென்றதற்காக ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த ரகளைகள் இன்றைக்கும், இருவரும் சம்பாதிப்பதால் அதிகமாகியுள்ளது. ஆனாலும் எவருக்குமே மனதில் திருப்தியில்லை. நாம் எதை வாங்கி வைத்துக்கொண்டாலும் நம் சிநேகிதர்களிடம் உள்ளது போலவே தன்னிடமில்லையென நினைத்து ஒரு அதிருப்தியும் ஏற்படுகிறது. ஒவ்வொன்றிலும் ஒரு குறையை காண்கிறோம்.இந்த பாழும் மனதிற்கு திருப்தி என்பதே கிடைக்க கூடாதென்று மனிதஜன்மத்திற்கு சாபம் போலிருக்கிறது.