இன்றைக்கு, சௌகர்யங்கள் எத்தனை கிடைத்த போதும், மனிதர்களுக்கு திருப்தியில்லையே, இருப்பது  போதவில்லையே. மனித மனங்கள் அன்றன்றைக்கேதான் வாழ்கின்றன.   ஐம்பது வருடங்கள் முன்பு வட இந்தியாவிற்கு பிரயாணம் செய்வது என்றால் பிரம்ம பிரயத்தனம்தான்,என்று கூறுவேன். புதுடில்லி வருவதற்கு இரண்டு இரவுகள் ஒரு பகல் பூராவும் ஆகிவிடும். ஒருமாதம் முன்னாலேயே டிக்கட் ரிஸர்வ் செய்து நீராவி  கரி என்ஜின் வண்டியில் ஏறி உட்கார்ந்து 28 மணிநேர பிரயாணம் செய்தபின் டில்லிக்கு வந்து சேர்ந்தவுடன் மூன்று நாட்கள் குளித்தபின்தான் அழுக்கு போகும். வெய்யில் காலத்தில் பிரயாணம் செய்யும் சமயம் உண்மையிலேயே ரயிலில் உட்கார்ந்திருப்பது அக்னிகுண்டத்திற்கு அருகில் வசிப்பது போலவேயிருக்கும். ரயிலை விட்டு இறங்கும் சமயம், உடம்பெல்லாம் கரிப்பொடியை அப்பிக்கொண்டது போல் அழுக்கு மூட்டையாகத்தான் மனிதர்களும் இருப்போம். ரயிலில் ஏறும்சமயம் என் இடம், உன் இடம்என்றும் சண்டை நடக்கும். இறங்குவதற்கு முன் பிரயாணிகள் ஒருவருக்கொருவர் அரசியலைப்பற்றி  பேசிக்கொண்டு சிநேக பாவத்துடன் இருப்பார்கள். மேலே மின்விசிறிகள் சுற்றமுடியாமல் சுற்றும். ரயிலில் ஏறி உட்கார்ந்தவுடன் பிள்ளை குட்டிகள் நொறுக்கு தீனிக்காக அரிக்க ஆரம்பித்துவிட்டால் கோபக்கார பெற்றோராக   இருந்தால் அடி போட்டு கண்டித்து  மேலும் அலறவிட்டு மற்றவர்களுக்கு தலைவேதனையை உண்டாக்கி ,ஆண்டவனே, ரயில் பிரயாணம் இந்த ஆயுளில் வேண்டாமென நினைக்கும் அளவுக்குசெய்வார்கள். பிள்ளைகுட்டிகள் அடையாதவர்களுக்கு ஒரு திகில் வந்துவிடும். இந்த வாழ்க்கையில்,  நம்க்கு பிள்ளைகுட்டிகளே தேவையில்லை, இவைகளை கட்டி மேய்க்க நம்மால் ஆகாது என்ற தீர்மானத்திற்கு வந்துவிடுவார்கள். இரவெல்லாம் பிள்ளைகள் அழுகைசத்தம், அப்பாக்களின் மிரட்டல்,உருட்டல்கள் சத்தம்கேட்டபடியே இருக்கும். அம்மாக்களின் ச்,ச்ச்என்ற ரகசிய உருட்டல்களும், அம்மா பால் கொடுப்பது எல்லோருக்கும் கேட்பது போல் குடித்து தொலையேன் பாலை,  ஏன் அழுது உயிரை வாங்குகிறாயோ என சத்தமாக கூறி தனக்கு பால்குடிக்கும் பிள்ளை இருப்பதை காட்டிக்கொள்வார்கள்.   பெரிய ஸ்டேஷனில் ரயில் நின்றவுடன், ஆண்கள் தட,தடவென்று குடி நீர் பிடிக்க ஓடுவார்கள். என்னை மாதிரி பயங்கொள்ளிகள் , புது புருசன் உடனே வரவில்லையென்றால், கவலை கொண்டு தன் பெட்டியில் பயணிக்கும் பிரயாணிகளை சோதிடம்  கேட்பது போல் கேட்பார்கள். என் ஆளை கண்டீர்களா எங்காவது என்று. ஆண்கள் முறுக்கிக்கொண்டாற் போல் பதில் கூறுவார்கள். அவர்களின் பெண்மணிகள் கூறுவார்கள், அந்த அண்ணனை கேள், இந்த அண்ணனை கேள் என்பார்கள். கூடப்பிறந்த அண்ணன்களையே, அண்ணா என்றுகூப்பிட்டு பழக்கமில்லாத காரணத்தால் எந்த ஆண்பிள்ளையையும் நான் அண்ணா என்று கூப்பிடமாட்டேன். ஆண்டவன் விட்ட வழியில் நடக்கட்டும் என நினைத்து உட்கார்ந்திருப்பேன்.

பகலில் எங்கு ரயில் நின்றாலும் பிள்ளைகள் தின்பதற்கு கேட்டு ஓலமிடும் அழுகை சொல்லில் அடங்காது. நாக்பூர் தாண்டியவுடன் க்யா, ம்யா என்ற பேச்சு பேச்சுகாதில் விழுந்ததும், இந்த உலகம் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்ப்பேன் . தமிழ்,ஆங்கித்தை தவிர எந்தபாஷையையும் கேட்டறியாத கிராமத்துக்காரியான எனக்கு புது உலகத்தில் நுழைந்நாற்போல் இருக்கும். நாக்பூருக்கு பிறகு இனிமைதமிழ், சுந்தரதெலுங்கு இரண்டுமே காதில் விழாது, மராட்டி, ஹிந்தி. போன்றவைகளை கேட்கும்போது இந்த புதிய மொழிகளை கற்றுக்கொண்டு ஆக வேண்டுமென நினைத்தேன்.
மறுநாள் காலை சாய்,சாய் என்ற சத்தம் கேட்டு ஒரே ஒட்டமாக ஓடி என் புது புருஷன் டீயை சன்னலுக்கு வெளியிலிருந்து தந்தார். அந்த கப் மிக சிறியது. அதில் குடித்தால் மூக்கில் இடித்துக்கொண்டுதான்  குடித்தாக வேண்டும். எனக்கோ டம்பளரில் வாய்க்கு நேராக தூக்கி வாயில் ஊற்றிக்கொண்டு  குடிக்கும் பழக்கத்தினால் என்னால்உதட்டில்வைத்து குடிக்கமுடியாது என்றும் டீயோடு திரும்பகொடுத்தேன். நான் மற்ற மனிதர்களை காட்டுமிராண்டிகளோ என நினைத்தேன், அவர்கள் என்னை அரை லூஸு என்பது போல் பார்த்தார்கள்.ஒரு வழியாக கடைசியில் ரயில் புது டில்லி வந்து நின்றது. மனிதர்கள் சமுத்திர அலைபோல் தெரிந்தார்கள். என் உடம்பின் கனம், கரியின் அழுக்கினால் ஏறிவிட்டாற்போல்இருந்தது. எப்போதுடாப்பா வீட்டைப்பார்ப்போம்  என ஏங்கியதை இன்றைக்கு நினைத்தாலும் மனதில் எல்லா நிகழ்வுகளும் ஓடி வருகிறது.