எந்த தொழிலை புனிதமானது என்று நினைத்திருந்தோமோ,  அது இப்போது பணம் பிடுங்கும் தொழிலாகி இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது.

பத்து வருடங்கள் முன்பு என்கணவருக்கு 75 வயதில்,  மாரடைப்பு வந்து angioplasty  செய்து பார்த்து,

main arteries களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் stent போடவேண்டும் என்றும் 2 stents தேவைப்படும்,  என்று கூறிவிட்டார்கள்.  ஏற்கெனவே 25 வருஷமாக சர்க்கரை,  ரத்த அழுத்தத்துடன்  காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் அவரை சிகிச்சைக்கு   தயார் செய்ய வேண்டுமே என்ற   கவலையில் ஆழ்ந்தோம்.  கையில் சேமித்து வைத்திருப்பதைப்போட்டு,  stent போட்டு விடலாமென தீர்மானித்து,  stent போட்டுக்கொண்டவர்களை போய் கலந்தாலோசித்து வந்தோம்.  ஒவ்வொருவரும் வித்யாசமாகவே அவரவர்  அனுபவத்தை சொல்லியதை  கேட்டு,  அடி மனதில் பீதி   பிடித்துக்கொண்டு விட்டது.  உயிரை உலகிற்கு கொண்டு வருவது எத்தனை  சுலபமான வேலை என்று தோன்றுகிறது. ஆனால் அதே உயிரை உடலில் இருந்து பிரிக்க எமதர்மராஜா, எப்படி,  அலைக்கழித்து வேடிக்கை பார்க்கிறான், அப்பாடியோவ்!!  என் மனது அலைபாய்கிறது,  ஒரு உயிர் ஊசலாடும்போது வேடிக்கையா பார்க்கத்தோன்றும்?  அதுதான் பெற்றவளுக்கும் கட்டியவளுக்கும்   வித்யாசம்!!  பெற்றவள் தன் உயிரையும்  கொடுக்கத்தயாராக இருப்பாளாம்  கட்டியவளோ  எப்படி தட்டிக்கழிக்கலாமென்றே பார்ப்பாளாம்.  ரத்த பந்தமில்லையே!!  அதுபோகட்டும்.  நான்  அப்படி தட்டிக்கழிக்கவும்  நினைக்கவேயில்லையே!

மறுபடியும்  டாக்டரிடம் கன்சல்ட் செய்து பார்த்துவிட்டு, இரண்டு stent போட  வேண்டுமென்று   கூறி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து,  உயிர்ப்பிச்சை கிடைக்க வேண்டுமானால்,  குறைந்த  பட்சம் 2 லட்சமாவது,  சிலவு செய்து எமனை ஏமாற்றவேண்டுமே!!  மேலும் மருந்துகள்  வாங்க வேண்டிய  அவசியமும் இருக்கிறது,  என்று யோசித்தவாறு கவலை பட்டுக்கொண்டு  வீட்டுக்கு வந்தோம். உயிர் வேண்டுமா இல்லையா?  இந்த மனோ நிலையில் எதுவுமே முடிவு எடுக்கமுடியாமல் தவித்தோம் என்பதுதான் உண்மை. மலையின் உச்சியில் நிற்கிறாற் போலவும்,  பின்பக்கத்திலிருந்து  என்னை யாரோ தள்ளிவிடத் தயாராக இருந்தால் எப்படியிருக்குமோ,  அந்த மாதிரியான ஒருவித திகில் மனதில் ஓடுகிறது.   பென்ஷன் கிடையாது, மாதாந்திர வரும்படி கிடையாது.  தன்  கைகளை ஊன்றி கர்ணம் போடும் சாமர்த்தியமும் எனக்கில்லை. உட்கார்ந்து தின்றே பழக்கம்  எனக்கு!

பத்து  நாட்கள் சென்ற பின்  தனியார் ஹாஸ்பிடலில் போய் நிஜமாகவே இவருக்கு ஸ்டென்ட் தேவைப்படுகிறதா இல்லையா என்று தெரிந்து வரலாமென போனோம். அந்த டாக்டரோ ஒருபடி மேலே போய் இந்தமனிதருக்கு மூன்று ஸ்டென்ட் போட்டாக வேண்டுமென்றும்,  ஒரு mini by pass surgeryம் செய்து விடலாமென கூறி 10 வருட கியாரண்டியும் தரமுடியும்  என்று கூறினார், என்னவோ கடையில் வாங்கும் சாமான்களுக்கு கியாரண்டி இருப்பது போல.  இந்த டாக்டர் கடவுளான என்ன?  அப்போது தோன்றியது பணம் பிடுங்கும் வேலைதான் இது என்று !   நம் உயிரைப்பற்றி யாருக்குமே   அக்கறையில்லை!  நம்மிடம் பணபலம்  இருந்தால்  உயிர் பிச்சை போடமுயற்ச்சிப்பார்கள்,  அவ்வளவுதான்,  என்பதை புரிந்து கொண்டேன் அன்று !

நானும்,  உறவினர்களும் கவலைமுகத்தோடு இருப்பதைப் பார்த்து இவர், சமாசாரத்தை  கேட்டவுடன்,  தனக்கு எதுவுமே வேண்டாமென்று , தன்னை டிஸ்சார்ஜ் செய்து விடும்படி  கேட்டுக்கொண்டு வந்து  10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.   75 வயது  வரை சாதிக்க முடியாதவற்றை  இனிமேலா சாதிக்கப்போகிறேன்,  என்று  கூறி டாக்டர்களின் பிடியிலிருந்து விடுபட்டு  வீட்டுக்கு  வந்து சேர்ந்தோம்.

நாம்  நம்மிடம்  இருக்கும்  பணத்தையும் சிலவு செய்து விட்டு,  நான் உயிரையும் இழந்து விட்டேனானால் , என் பூத உடலை அகற்ற, சாஸ்திரிகள்  செலவுக்கு  என்ன  செய்வாய்  என்று கேட்டு விட்டு சிரித்துக்கொண்டு, இப்போதெல்லாம் எல்லாவற்றுக்குமே package  இருப்பதால், உடலில் உயிர் ஓடிக்கொண்டிருக்கும் போது வலியினால்  துடிக்காதமட்டும்  எனக்கு எதுவுமே வேண்டவே வேண்டாமென முடிவு செய்து கொண்டு விட்டார்.

இனிமேல்  சத்தியமாக,  உயிர்ப்பிச்சை கேட்க எவரிடமும் போகாமல் இருக்க வேண்டுமென ஆண்டவனிடமே பிரார்த்தனை செய்துகொண்டு  வீட்டுக்கு வந்து 10 வருடமாகியுள்ளன.  எந்தவித  தொந்திரவுமில்லாமல் இருந்தும் வருகிறார், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு,  தினமும் நாளொருமேனியும்,  பொழுதொரு வண்ணமுமாக  ஜாலியாக கழித்துக்கொண்டு வருகிறோம்!!