எல்லா குடும்பங்களிலும், நல்லவர்கள், கெட்டவர்கள் கலந்து பிறக்கிறார்கள். அதேபோல் எங்கள் குடும்பத்திலும் ஒரு தனிபிறவி இருந்தார்.
நல்ல சுத்தமான கதர் உடை உடுத்தி, கிடைத்த மனிதர்களுடன், இனிமையான வார்த்தைகளில் பேசி மனதை கவர்ந்து, பணஉதவி கேட்டு மிகவும் மரியாதையாகவும்,அன்பான வார்த்தைகள் பேசி எப்படியோ பணம்
வாங்கிக்கொண்டு போய்விடுவார்.நம்மை பற்றிய விவரங்களை எங்கிருந்து சேகரிப்பாரோ தெரியாது,தெரிந்துகொண்டுதான் நம்மைபார்க்க வருவார். நம்மைப்பற்றிய பழைய விவரங்கள் நம்க்கு மறந்திருக்கும், அவர் நமக்கு நினைவுபடுத்துவதில் கெட்டிக்காரர். மேலும் நாம் மறந்து விட்டிருப்பதை நம் நினைவில்கொண்டு வந்து பேசுவார்.நம் பிரச்னைகளை பற்றி கேட்டறிந்து கொண்டு நம்மை சமாதானம் செய்வது போலவும் பேசுவார்.பிறர் வாயை கிண்டுவதிலும் மன்னனாக திகழ்வார். ஒரு முறைக்கு நான்கு முறையாக வருவார். நாம் மற்றவேலைகளில் பிஸியாக இருந்தால் பக்குவப்பட்ட மனதுடையவர் போல நடித்து உடனே இடத்தை விட்டு கிளம்பி விடுவார். அலுப்பே இல்லாமல் நான்கு நாட்கள் கழித்து மறுபடி சிரித்த முகத்துடன் வந்து உட்கார்ந்திருப்பார். படித்தவரானதால் உலக விவரங்களையும் மிகவும் ஆவலோடு பேசி மனதை கவர்ந்து விடுவார். உண்மையிலேயே அவரிடம் ஒரு ஆகர்ஷிக்கும் சக்தியிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
பளிச்சென்று கதர் வேஷ்டியணிந்து, வாசனை திரவியங்கள் போட்டுக்கொண்டு, நெற்றியில் சந்தணமணிந்து,பக்தி பரவசப்பட்டவர் போல் காணப்படுவார். இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறைதான் எங்கள் கிராமத்திற்கு வருவார். அவர் எங்கள் குடும்பத்தின் தூரத்து உறவினரும் கூட. சிறிய கிராமங்களில் எல்லாகுடும்பங்களுமே ஒருவருக்கொருவர் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். இந்த சந்தனப்பொட்டு மனிதர் ஊருக்குள் நுழைந்ததும் சிறிய பிள்ளைகளுக்காகவே மிட்டாய்கள், தின்பண்டங்கள் வாங்கிவந்து கொடுத்து, ஊரில் இருந்து வரும் மனிதர்களை பற்றி விவரங்கள் சேகரித்துக்கொள்வார்.அடிக்கடி பார்த்து பழகிப்போனதால் பிள்ளைகளும் ஜாலியாக ஊர், உலக விபரங்களை பேசிக்கொண்டிருப்பார்கள், அவருடன்.
ஆண்கள் இல்லாத வீட்டிற்குள் போக மாட்டார்.பெண்களிடம் மரியாதையாக பேசுவார். அவர் சிறிய வயதில் தாயை இழந்தவர் ஆனதால் பெரிய வயது பெண்மணிகளிடம் அன்புடனும், ஆதரவாகவும் பேசுவார் எனக்கேட்டிருக்கிறேன். அவர்களிடமிருந்தும் சில்லறையாக ஏதாவது இருந்தால் நைச்சியமாக பேசி அதையும் பெற்றுக்கொண்டுவிடுவார். அவரைப்பார்த்தாலும், அவருடன் பேசினாலும் எவருமே நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள் அவர் ஒரு ஏமாற்றி பணம் வாங்குபவர்,என்று.அவர் தோற்றத்திலும்,பேச்சிலும் தனி கவர்ச்சியிருந்தது என்பதை மறக்கவேமுடியாது. ஆனால், பாவம், எங்கு மாட்டிக்கொண்டு எப்படி மறைந்தாரோ தெரியவில்லை. தனி மனிதனாக வாழ்ந்து மறைந்தும் விட்டார் போலிருக்கிறது.